‘பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்திய நிலப்பரப்பு நடப்பு குளிர் காலத்தில் பல்வேறு வகையான மாற்றத்தை சந்திக்கும்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், ‘பருவநிலை மாற்றத்தின் காரணமாக நடப்புப் பருவமான குளிர்காலம் மாறுதலை கண்டறிகிறது. குறிப்பாக, 2023 டிசம்பர் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரையிலான குளிர்காலத்தில் இயல்பை விட குளிர் குறைவான அளவிலேயே இந்தியாவில் நிலவும்.
காற்று அடிக்கும் திசையில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைந்தபட்ச மாறுபாட்டின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சூழலியல் மாற்றங்களும் சிறிய அளவில் ஏற்பட வாய்ப்பு உருவாகி உள்ளது.
வடக்கு, வடமேற்கு, மத்திய பகுதி, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய பகுதிகளில் குளிர்காலத்திற்குத் தேவையான இயல்பை காட்டிலும் குறைந்த அளவிலேயே குளிர் வீசும். அதேசமயம் நாடு முழுவதும் குறிப்பிட்ட காலகட்டத்தில் சராசரி வெப்பநிலை பதிவாகும். மேலும், 2023ம் ஆண்டு அதிக வெப்பநிலை பதிவான ஆண்டாக குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இதன் தாக்கம் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலும் எதிரொலிக்கும்.
2023 டிசம்பர் மாதம் இறுதிக்குள் தென்னிந்தியாவின் குறிப்பிட்ட பகுதிகள், கடலோரப் பகுதிகளில் அதிக அளவிலான மழை பொழிவு பதிவாகக் கூடும். வடக்கு மற்றும் வடகிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் குறைவான அளவிலேயே மழைப்பொழிவு பதிவாகும். அதேசமயம், இவ்வகையான மாற்றம் இந்தியாவில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தத் தற்போது வாய்ப்பு குறைவு’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.