

பொதுவாக "பாம்பு என்றால் படையும் நடுங்கும்" என்ற வாசகத்துக்கு ஏற்ப பாம்பை கண்டாலே பயந்து அலறுபவர்கள் தான் உண்டு. துணிச்சல் மிக்க சிலர் மட்டுமே பாம்பை கண்டாலும் பயப்படாமல் அதை அடிப்பதும், துரத்தி விடுவதுமாக இருப்பார்கள்.
பாம்புகள் என்றாலே விஷம் என்றும், கடித்தால் உடனே மரணம் என்பதால் தான் அனைவரும் பாம்புகளை கண்டால் பயப்படும் காரணம். ஆனால் விஷம் இன்றி நமக்கு எவ்வகையிலும் துன்பம் தராத சாரை பாம்புகளையும் அதன் உருவத்தைக் கண்டு பயந்து சிலர் அடித்துக் கொல்வது உண்டு.
உண்மையில் சாரைப்பாம்பு சுற்றுச்சூழலுக்கு பயனளிக்கும் ஒரு பாதிப்பற்ற பாம்பு என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இதோ சாரை பாம்புகள் பற்றிய அறிய தகவல்களை காண்போம்.
சாரைப்பாம்பு (Indian Rat Snake or Oriental Rat Snake) ஆசியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் காணப்படும் பாம்பு வகைகளில் ஒன்று.
பொதுவாக பெண் பாம்பு 6 முதல் 8 முட்டைகள் வரை பாதுகாத்து அதில் இருந்து குட்டிகள் வெளிவந்ததும் உடனடியாக அந்த குட்டிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள இடுக்குகளில் ஓடி ஒளிந்து கொள்ளும். இவை ராஜநாகம் கட்டுவிரியன் போன்ற பாம்புகளுக்கும் இரையாவது வழக்கம். அத்துடன் கீரி, பருந்து , செம்போத்து , உடும்பு போன்றவைகளும் சாரைப்பாம்புகளை வேட்டையாடும் என்பதால் குட்டிகள் ஓடி ஒளிந்து விடுவது வழக்கம்.
ஒரு அடியிலிருந்து ஒன்றரை அடி வரை இருக்கும் குட்டிகள் மெதுவாக வெளியே வரும்போது தங்களுக்கு ஏற்றது போல் சின்ன சின்ன புழுக்கள் பூச்சிகள் போன்றவற்றை முதலில் உண்ண ஆரம்பிக்கும் .
ஆண் சாரைப்பாம்பு 2- 3 வயதிலும் பெண் பாம்பு 4 வயதிலும் பாலியல் முதிர்ச்சி அடைந்துவிடும் .அப்போது பெண் பாம்பு ஒரு விதமான வாசனையை தன்னிடமிருந்து வெளிவிடும். அதைக் கண்டு ஆண் பாம்புகள் அதை தேடி செல்லும். 2 அல்லது 3 பாம்புகள் ஒன்றாக அதனுடன் இணைய முற்பட்டால் முதலில் ஆண் பாம்புகள் தங்களுக்குள் ஒன்றன் மீது ஏறி மற்றொரு பாம்பை கீழே தள்ளி தனது பலத்தை நிரூபித்த பின்னே பெண் பாம்புடன் இணைகிறது.
4 அடியில் இருந்து 6 அடி வரை இருக்கும் இந்த பாம்புகள் குட்டியில் 1 முதல் 2 மாதங்களில் தோலை உரிக்கும் தன்மை கொண்டது. பொதுவாக பெரிய பாம்புகள் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு ஒரு முறைதான் தோல் உரிக்கும். பாம்புகளின் உள் தோல் வளர்ச்சி அடையும் போது மேல் தோல் தானாக கழன்று விடும். ஏனெனில் தோல் என்பது நெகிழ்வுத் தன்மையற்ற ஒரு இறுக்கமான தகவமைப்பு கொண்டது என்பதால் பாம்புகள் அவ்வப்போது தங்கள் தோலை உரித்து விடுகின்றன.
ஆனால் இந்த தோல் பாம்புகளுக்கு பாதுகாப்பு கவசமாகவே உள்ளது எனலாம். ஏனெனில் வெளியே இருக்கும் ஒட்டுண்ணிகள் மற்றும் வேறு விதமான கிருமிகள் இந்த தோலை தாண்டி பாம்புகளுக்கு ஆபத்தை தராது என்பதால் பாம்பு அகற்றும் தோல்கள் அதற்கு கவசமாகவே இருக்கிறது .
தோலை உரித்தவுடன் அவைகளுக்கு கண்கள் மேலும் தெளிவாக தெரியும். காரணம் தோல் கண்களையும் மூடிக்கொண்டு இருக்கும் என்பதால் அதன் மீது படியும் தூசுகள் பாம்பின் கண் திறனை குறைவாக்கும். தோல் உரிந்ததும் பாம்பின் கண் மேலும் தெளிவாகத் தெரியும் என கூறுகின்றனர்.
மேலும் பாம்புகளுக்கு இமைகள் கிடையாது என்பதால் அது தூங்கும் போது கூட கண்கள் திறந்தபடியே இருக்கும் என்பது சிறப்பு.
ஒரு பெண் பாம்பு இடும் முட்டைகளில் இருந்து 15 குட்டிகள் வரை கூட வெளியே வரலாம். ஆனால் எதிரிகளிடம் இருந்து தப்பி முழுமையாக வளர்ச்சி அடைந்து வாழ்வது ஓரிரு பாம்புகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது .
சாரைப்பாம்புகளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு அது அதன் மரம் ஏறும் தன்மைதான். கீரி , நாய் போன்றவைகள் இந்த பாம்பை துரத்தும்போது இது சர்ரென்று மரத்தில் ஏறி தப்பித்து விடும். அதேபோல் மரத்தில் இருக்கும் கூடு கட்டி வாழும் பறவைகளின் முட்டைகளை உணவு கிடைக்காத போது தனது உணவாக்கிக் கொள்ளும்.
சாரைப்பாம்புகள் வயல்வெளியில் இருக்கும் தனது முக்கிய உணவான எலிகளை மட்டுமின்றி பல்லி, தவளைகள், சிறுபறவைகள் போன்றவற்றையும் சாப்பிடும் தன்மை கொண்டது. மேலும் இது பருந்து போன்ற பறவைகளுக்கு உணவாகிறது என்பதால் இது விவசாயிகளின் நண்பனாக இயற்கை பூச்சிக் கட்டுப்பாடு, உணவுச் சங்கிலி சமநிலை மற்றும் உயிரின பல்வகைமை ஆகிய சுற்றுச்சூழலுக்கு பயனளிக்கும் ஒரு பாதிப்பற்ற பாம்பாகிறது.
தனக்கு ஆபத்து வரும்போது பல வழிகளில் தப்பிக்க முயலும். முதலில் அதிவேகத்தில் சென்று விடும். இந்தியாவில் தரையில் மின்னல் வேகத்தில் ஓடும் அதிவேகமான பாம்பு எனும் சிறப்பு இதற்குண்டு. உடலை தட்டையாக விரித்து கண் பகுதியை பெரிதாக காட்டும் தோற்றத்தை தந்து எதிரிக்கு அச்சம் தரும். தண்ணீரில் வேகமாக நீந்தி மறையும். மரங்களில் ஏறி தப்பிக்கும். எதுவுமே பலனளிக்காமல் போனால் தனது உடலில் இருந்து ஒரு துர்நாற்றத்தை வீசச் செய்து எதிரியின் கவனத்தை திருப்பி மறையும்.
சாரைப்பாம்பு நஞ்சற்று அல்லது சிறிய அளவே நஞ்சு கொண்டதால் ஆபத்தானதற்றது என்றாலும் அது கடித்தால் லேசான வீக்கம், எரிச்சல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எச்சரிக்கைக்கு மருத்துவரை அணுகுவது அவசியம்.