

பருவகால மாற்றம் என்பது இயற்கையானதாக இருந்தாலும் நம் உடல் அதை உடனே ஏற்காது. ஏனென்றால் நம் உடல் ஒரு விஷயத்தை பழகுவதற்கு குறிப்பிட்ட நாட்கள் எடுத்து கொள்ளும். அதிக நோய் எதிர்ப்பு சக்திகள் இருப்பவர்களால் மட்டுமே தான் எந்த பருவநிலையிலும் நோயில்லாமல் வாழ முடியும். அப்படி பெரியவர்களுக்கு இருந்தாலும் கண்டிப்பாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இதனால் தான் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகமாக தாக்குகிறது.
இதை சரி செய்ய முடியாமல் பல பெற்றோர்களும் நிச்சயம் தவித்து வருவார்கள். சமீபகாலமாகவே இருமல் மருந்து பிரச்னை வேறு அதிகமாக வெடித்து வருகிறது. இதனால் சளி, இருமல் வந்தால் மருந்து கொடுப்பதற்கே பெற்ரோர்கள் அச்சம் கொள்கிறார்கள். துளசி, தூதுவளை என இயற்கை மருத்துவத்தை பேணுகின்றனர். ஆனாலும் சளி, இருமல் என்பது தொடர்ந்து ஒரு வாரம் இருப்பதால் குழந்தைகளும் அவதிக்குள்ளாகிறார்கள். இது பெற்றோர்களுக்கும் பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.
பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அதாவது சளியின் நிறம் நாளாக நாளாகவோ, ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அப்படி எந்த சளியின் நிறத்திற்கு என்ன காரணம்? எந்த சளியின் நிறம் ஆபத்து என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சளி தெளிவான வெள்ளை, மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு, சிவப்பு, ஆரஞ்சு, பழுப்பு மற்றும் கருப்பு என பல நிறங்களில் வரலாம். இவை ஒவ்வொன்றும் உடலில் ஒவ்வொரு அறிகுறிகளை குறிக்கலாம்.
வெள்ளை நிறம்:
வெள்ளை சளி என்பது பிற நோய்த்தொற்றுகளுடன் வரக்கூடியது. இது மூக்கில் அடைப்பை உண்டு செய்யலாம். நெரிசலாக இருக்கும் போது மூக்கில் ஏற்படும் அழற்சியானது வெள்ளை நிற சளிவெளியேறுவதை கடினமாக்குகிறது. இது வறண்டு போகலாம். மேகமூட்ட கலரிலும் அடர்த்தியாகவும் இருக்கலாம். நோய் எதிர்த்து போராட உடல் அனுப்பும் நோய் எதிர்ப்பு செல்களால் இது வெண்மையாக மாறலாம்.
மஞ்சள் நிறம்:
மஞ்சள் நிற சளி என்பது நோய் சாதாரணமாக முன்னேறுவதை குறிக்கலாம். கிருமிகளை எதிர்த்து போராட வரும் வெள்ளை இரத்த அணுக்கள் இறப்பதால் இது நிறம் மாறுகிறது. இது சளியை வெளியேற்றுகிறது. இயல்பை விட வறண்ட மற்றும் தடிமனாக இருக்கும்.
இது ஒவ்வாமை இருப்பதற்கான அறிகுறி என்று அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை அறக்கட்டளை கூறுகிறது. ஒவ்வாமை நாசிப்பாதைகளை எரிச்சலூட்டுகின்றன. இது தடிமனான வெளிறிய மஞ்சள் நிற சளியை உருவாக்குவதற்கு வழிவகுக்கும். இது தொண்டையின் பின்புறத்தில் ஓடும்.
பச்சை நிறம்:
நிமோனியா அல்லது சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற ஒரு பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று பச்சைநிற சளிக்கு காரணமாக இருக்கலாம். இது அதிகப்படியான சளி உருவாக்கத்தை உள்ளடக்கிய நிலை. இந்நிலையில் உடல் கடினமாக போரிடுகிறது. கூடுதலான குறைபாடுள்ள நோயெதிர்ப்பு செல்கள் மற்றும் கழிவுப்பொருள்கள் வெளியேறும் போது இவை இன்னும் அடர்த்தியான சளியை உண்டு செய்கிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக சளி இருந்தால் அது பாக்டீரியா தொற்று காரணமாக இருக்கலாம்.
கருப்பு நிறம்:
கருப்பு நிறம் என்பது மிகவும் ஆபத்தானதாகும். உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். இது பூஞ்சை தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். இது சிகிச்சையளிக்க வேண்டிய ஒன்று. சில நேரங்களில் இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இது அரிதானது என்றாலும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இவை வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
சிவப்பு நிறம்:
உங்களுக்கு இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற சளி இருந்தால் மூக்கில் இரத்தம் இருக்கலாம். மூக்கில் அதிகமாக அழுத்தம் கொடுக்கும் போது மூக்கில் காயம் உண்டாகும் போது, மூக்கு உலர்வாக இருக்கும் போது, கர்ப்பக்காலத்தில், வறண்ட காலநிலையில், அதிக உயரத்தில் இருந்தால் மூக்கில் இரத்தம் இருக்கலாம். ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை இருந்தால் மூக்கில் இரத்தம் ஏற்படலாம். மூக்கு ஒழுகுவது நாசிப்பகுதிகளை எரிச்சலடைய செய்யலாம். இது அதிக ஆபத்தான அறிகுறியாகும் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
ஆரஞ்சு நிறம்:
ஆரஞ்சு நிற சளி அல்லது பிரவுன் சளி உலர்ந்த இரத்தம் கலந்து வரலாம். அழுக்கு, மிளகு போன்ற சிவப்பு மசாலா அல்லது புகையிலை போன்றவற்றை சுவாசித்தால் பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறமாக மாறலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)