உலகின் மிக சிறிய 'புடு' மான் ஈன்ற குட்டிமான்!

Pudu deer
Pudu deer
Published on

உலகில் மிக சிறிய மான் என்று சொல்லப்படும் 'புடு' மான்கள் பற்றிய பதிவுதான் இது. 'புடு' என்பது 2 வகையான தென் அமெரிக்க மான்களின் பெயர். ஒன்று 'வடக்கு புடு' மற்றொன்று 'தெற்கு புடு' என்றழைக்கப்படும்.

'வடக்கு புடு'

'புது மெஃபிஸ்டோபில்ஸ்' என்ற அறிவியல் பெயர் கொண்ட 'வடக்கு புடு' மான்கள், 32 முதல் 35 செமீ (13 முதல் 14 அங்குலம்) உயரமும், 3.3 முதல் 6 கிலோ (7.3 முதல் 13.2 பவுண்டு) எடையும் கொண்ட உலகின் மிகச்சிறிய வகை மான் இனம் ஆகும். இவற்றின் கொம்புகள் சுமார் 6 செமீ (2.4 அங்குலம்) நீளம் வரை வளர்ந்து பின்னோக்கி வளைந்திருக்கும். அதன் தோல் 'தெற்கு புடு' மான்களின் நிறத்தை விட மங்கியதாக இருக்கும். ஆனால் உடல் நிறத்தை ஒப்பிடும்போது முகம் கருமையாக காணப்படும். நன்கு வளர்ந்த ஒரு 'வடக்கு புடு' மான், வீட்டில் வளர்க்கப்படும் பூனையின் அளவுதான் இருக்குமாம்.

'தெற்கு புடு'

'புது புடா' என்ற அறிவியல் பெயர் கொண்ட, 'தெற்கு புடு' மான்கள், சிலி மற்றும் அர்ஜெண்டினாவை பூர்வீகமாக கொண்டவை. 'வடக்கு புடு' மான்களை இதனுடைய சகோதரி இனம் என்று கூறுவதுண்டு. இந்த சிறிய மான்கள் 'வடக்கு புடு'  மங்களைவிட சற்று பெரியது. அதாவது இதனுடைய உயரம் 35 முதல் 45 செமீ (14 முதல் 18 அங்குலம்) இருக்கும். மேலும் 6.4 முதல் 13.4 கிலோ (14 முதல் 30 பவுண்ட்) எடை கொண்டது. தெற்கு புடுவின் கொம்புகள் 5.3 முதல் 9 செமீ (2.1 முதல் 3.5 அங்குலம்) நீளம் வரை வளர்ந்து, மலை ஆடு போல, பின்னால் வளைந்திருக்கும். இதன் தோல் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.

இதையும் படியுங்கள்:
வாயில் தந்தங்கள் உள்ள இந்த விலங்கைப் பற்றி தெரியுமா?
Pudu deer

இந்த 'புடு' வகை மான் இனங்கள் சில நேரங்களில், 'புது' எனவும் அழைக்கப்படுவதுண்டு. ஆனால் சரியான பெயர் 'புடு' தான். தற்போது இதன் இனங்கள் அதிகமாக அழிந்து வருகின்றன. அதாவது இந்த அரிய வகை மான்கள் காடழிப்பு, வேட்டையாடுதல் காரணமாக அழிந்துவரும் உயிரினமாக இருக்கிறது.

அர்ஜெண்டினாவை பூர்வீகமாக கொண்ட 'தெற்கு புடு' வகை மான்களில் ஒன்று, தற்போது போலந்து நாட்டின் வார்சா நகர விலங்கியல் பூங்காவில் குட்டியை ஈன்றுள்ளதாக, வார்சா நகர விலங்கியல் பூங்கா விளம்பர பிரிவுத் தலைவர் அன்னா டாட்ரா தெரிவித்துள்ளார். அதோடு புதிதாக பிறந்துள்ள இந்த மான்குட்டிக்கு நல்ல பெயரை பரிந்துரைக்குமாறும் மக்களுக்கு, கோரிக்கை விடுத்துள்ளார்.

Pudu deer
Pudu deer

மேலும் அந்த பூங்காவில், 'புடு' இன மான்கள் இதுவரை 3 இருந்ததாகவும், தற்போது அதில் ஒரு மான், குட்டியை ஈன்றதால், புடு இன மான்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். பிறந்த குட்டி மானிற்கு 'பி' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் வகையில், பெயர்களை பரிந்துரைக்குமாறும் வார்சா நகர விலங்கியல் பூங்கா விளம்பர பிரிவுத் தலைவர் அன்னா டாட்ரா வேண்டுகோள் விடுத்து உள்ளார். (நாமும் நல்ல பெயர் ஒன்றை யோசிப்போமா?)

இது போன்ற விலங்கினங்கள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். காடுகளை அழிப்பது, வேட்டையாடுவது என மக்கள் செய்யும் செயல்களினால் இது போன்ற பல விலங்கினங்கள் அழிந்துவரும் நிலையில் தான் இருக்கின்றன. 'இயற்கையை பாதுகாப்பது நம்முடைய தலையாய கடமை' என்பதை அனைவருக்கும் ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com