
நிலத்தில் எப்படி ஏராளமான உயிரினங்கள் வகை வகையாக இருக்கிறதோ, அதுபோலவே கடலிலும் ஏராளமான உயிரினங்கள் இருக்கின்றன. கடல் ஒரு தனி உலகம், அங்கு ஆழ்கடலில் ஏராளமான விசித்திர உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
அதில் கடல்கீரி அல்லது கடல்நீர் நாய் எனப்படும் புத்திசாலி விலங்கும் ஒன்று. இன்று இது அதிகபட்சமாக 3000 வரை எண்ணிக்கையில் வாழும் அரிய வகை கடல் விலங்காக மாறியுள்ளது. இதன் ரோமத்திற்கு ஒரு காலத்தில் அதிக கிராக்கி இருந்தால் கடந்த நூற்றாண்டுவரை அதிகளவில் வேட்டையாடப் பட்டன. கடல் வாழ் உயிரினங்களின் ரோமங்கள் கொண்ட ஒரு விலங்காக இது இருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
கடல் நீர் நாய்களின் மிகவும் அடர்த்தியான ரோமம் ஐரோப்பிய நாடுகளில் பெருமைக்கு உரியதாக இருந்தது. அதன் விலையும் அதிகமாக இருந்ததால் வேட்டைக்காரர்கள் அதிகளவில் வேட்டையாடினர். கடல்நீர் நாய்களுக்கு சில தனி சிறப்புகள் உண்டு.அதைப் பற்றி இங்கு காணலாம்.
உலகம் முழுவதும் கடல்நீர் நாய்களில் 13 வெவ்வேறு வகையான இனங்கள் உள்ளது. கடல்நீர் நாய்களின் நுரையீரல் அதிக திறன் கொண்டதாக உள்ளது. இவை வேட்டையாடும் நேரங்களில் தண்ணீருக்குள் 5 நிமிடங்கள்வரை மூச்சை பிடித்து வைத்திருக்கும் தன்மை கொண்டது.
கடல்நீர் நாய்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் கடலை விட்டு வெளியே வருவதில்லை. அவை கடலிலே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே வாழ்க்கையை முடித்துவிடுகின்றன.
கடல்நீர் நாய்களின் முடி மிகவும் அடர்த்தியானது. அது எந்த அளவிற்கு என்றால் ஒரு சதுர அங்குலத்திற்கு 1 மில்லியன் எண்ணிக்கையில் முடிகள் இருக்கும். தங்களின் முடி மீது இந்த விலங்கு அதிக காதல் வைத்துள்ளது. தினமும் முடியை பராமரிக்க நிறைய நேரம் செலவிடுகிறது. இதன் தோலின் மீது உருவாகும் எண்ணெயை முடியில் நீவி விட்டு பளபளப்பாக வைத்திருக்கிறது. அதிகமாக வளர்ந்த முடியை தனது பற்களால் கடித்து ஒழுங்குப் படுத்திக் கொள்கிறது.
கடல்நீர் நாய்கள் தனக்கென்று பிரத்யேகமாக ஆயுதத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளும் ஒரே விலங்காக உள்ளது. இவை கடற்பாறையின் சிறிய கூர்மையான கல்லை சேகரித்து வைத்துக் கொள்கிறது. கிளிஞ்சல், சங்குகள், சிப்பிகள் போன்ற உணவுகளின் ஓடுகளை உடைக்க கூர்மையான கற்களை பயன்படுத்துகிறது. இவை எப்போதும் இந்த கல்லை தங்களின் உடலில் உள்ள சிறிய பையில் வைத்துக் கொண்டு, தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகிறது.
கடல்நீர் நாய்கள் தங்கள் உடல் எடையில் 25% சதவீத அளவில் உணவை உண்கின்றன. நண்டுகள், சிப்பிகள், சங்குகள், கடல் அர்ச்சின்கள் போன்றவை இவற்றின் முக்கிய உணவுகளாகும்.
நீர் நாய்கள் எப்போதும் கூட்டமாகதான் தூங்கும். சில நேரங்களில் ஆயிரம் நீர்நாய்கள் கூட ஒன்றாக சேர்ந்து ஒன்றுடன் ஒன்று கைகளை கோர்த்துக் கொண்டு தூங்கும். அப்போது கடற்பாசி கொடிகளை உடலில் போர்த்திக் கொள்கின்றன.
கடல் நீர்நாய் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு பாலூட்டி ஆகும். கடல் அர்ச்சின்கள் அதிகமாக பரவினால் கெல்ப் காடுகளை மேய்ந்துவிடும். கெல்ப் காடுகள் அழிந்தால், அதில் உயிர் வாழும் நட்சத்திர மீன்கள், அனிமோன்கள், கடல் சிங்கங்கள், கடற்புறாக்கள், கொக்குகள் மற்றும் திமிங்கலங்கள் போன்ற விலங்குகளும் அழியத் தொடங்கும். மேலும் இவை கார்பனை பிரித்தெடுத்து ஆக்சிஜனை வெளியிடக் கூடியவை. கடல் நீர் நாய்கள் அர்ச்சின்களை அதிகளவில் உண்டு கெல்ப் காடுகள் அழிவதிலிருந்து பாதுகாக்கின்றன.
கடல்நீர் நாய்களின் குட்டிகளுக்கு லானுகா எனப்படும் சிறப்பான மிதக்கும் ரோமம் உள்ளது. இவை குட்டிகளை தண்ணீரில் மூழ்க விடாமல் எப்போதும் மிதக்க வைக்கின்றன.