இரை விழுங்கி பொறி வண்டுகள் அளிக்கும் பயன்கள்!

Beetle
Beetle
Published on

விவசாயத்தில் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டில் பூச்சி இன இரை விழுங்கிகள் வகைகளில் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுத்து, பகையினப் பூச்சிகளை அழித்து நன்மை பயப்பதில் பொறி வண்டுகள் எப்படிப் பயன்படுகின்றன என்பதை இப்பதிவில் காண்போம்.

இரை விழுங்கிகள் என்பன இயற்கையிலேயே காணப்படும் பகையினப் பூச்சிகளில் ஒரு வகையாகும். இவை மற்ற பூச்சிகளை இரையாகக் கொண்டு அவற்றைப் பிடித்துக் கொன்று தின்று அழிப்பதால் இரை விழுங்கிகள் என்று அழைக்கப்படுகின்றன. உயிரியல் பூச்சி கட்டுப்பாட்டில் இரை விழுங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி வெற்றிகரமாக பயிர் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும் என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

கோயபல் முறை: கலிபோர்னியாவில் ஆரஞ்சு பழத் தோட்டங்களை ஆட்டி வைக்கும் பூச்சியாக காட்டனி குசன் செதிள் பூச்சி இருந்தது. இப்பூச்சிகளால் ஏற்பட்ட சேதத்தின் விளைவுகளால் ஆரஞ்சு பழத் தோட்ட விவசாயிகளும் தொழிற்சாலைகளின் சொந்தக்காரர்களும் மிகுந்த கவலைக்குள்ளானார்கள். மகசூலில் மேலும் பெரும் இழப்பும் ஏற்பட்டது. இதற்கு முடிவு கட்ட ரிலி என்பவர் கோயபல் என்பவரை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வெடாலியா பொறி வண்டுகளை கொண்டு வர ஏற்பாடு செய்து அதன் மூலம் கலிபோர்னியாவில் இருந்த ஆரஞ்சு மர பழங்களை தாக்கும் செதிள் பூச்சிகளை முற்றிலுமாக அழித்து வெற்றி கண்டார்.

இதையும் படியுங்கள்:
இயற்கை சூழலில் மயில் நடனம் கண்டு ரசிக்க உகந்த 10 இடங்கள்!
Beetle

இப்படி ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு நன்மை பயக்கும் ஒட்டுண்ணிகள், இரை விழுங்கி பூச்சிகள் போன்றவற்றைக் கொண்டு வரச் செய்து பயிர் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உயிரிகள் முறையினை 'கோயபல் முறை' என்று இன்றும் அவரது பெயரில் அழைக்கப்படுகின்றது. இப்படி வெற்றி கண்ட பிறகு இந்த  பொறி வண்டு வகைகளால் மற்ற பழ மரங்களையும் காப்பாற்றினார்கள். இனி, அதன் விபரத்தினைக் காண்போம்.

ஆரஞ்சு மரத் தாக்குதலுக்கு வெற்றி: பொறி வண்டுகள் உயிரியல் முறை பூச்சி கட்டுப்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயிர்களுக்கு கேடு விளைவிக்கும் பல முக்கியப் பயிர்ப் பூச்சிகளை அழிக்கும் பொறிவண்டுகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உயிரியல் பூச்சி கட்டுப்பாட்டு சரித்திரத்தில் சாதனை படைத்த வெடாலியா பூச்சி, பொறி வண்டு இனத்தைச் சார்ந்ததே. கலிபோர்னியாவில் இதனைப் பயன்படுத்தி ஆரஞ்சு மரங்களை தாக்கும் ஐசிரியா, பர்சேசி என்ற வெள்ளை செதில் பூச்சிகளை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஆகும்.

வாழும் காலம்: பொறி வண்டுகள் பட்டாணி கடலையினை உடைத்து வைத்தார் போல இருப்பதால் இவற்றினை கடலை வண்டுகள் என்றும் அழைப்பர். வண்டுகளும் புழுக்களும் பயிர் பூச்சிகள் ஆகிய அசுவினி, இலைப்பேன், கள்ளிப்பூச்சி ,மாவுப் பூச்சி, செதில் பூச்சி ஆகியவற்றை உண்ணும் புழு பருவம் 18ல் இருந்து 23 நாட்களும் வண்டுகள் 45 நாட்களும் உயிர் வாழும்.

உருவமைப்பு: பொறி வண்டுகள், வண்டுகள் இனத்தினை சேர்ந்தவை. வண்டுகள் சிவப்பு, கருப்பு, மஞ்சள் நிறத்தில் புள்ளிகளுடன் அல்லது கோடுகளுடன் வட்ட வடிவமாக மேற்பரப்பு உருண்டு அரைவட்டமாக இருக்கும். மெதுவாக பறக்கும் தன்மை உடையன. இவை இலைகளில் மஞ்சள் நிற முட்டைகளை செங்குத்தாக நிறுத்தி வைத்து குவியலாக இடும் தன்மை உடையது. முட்டை பருவம் ஐந்தாறு நாட்களாகும். இவற்றில் இருந்து வெளிவரும் புழுக்கள் சற்று கருப்பு நிறத்துடன் அல்லது மஞ்சள் நிறத்துடன் முட்கள் போன்ற அமைப்புடன் கூடிய சிறிது நீண்ட உடம்புடன் காணப்படும். புழுக்களுக்கு ஆறு கால்களும் நன்கு வளர்ச்சி அடைந்திருக்கும். வண்டுகள், புழுக்கள் ஆகிய இரண்டு பருவங்களுமே இரை விழுங்கிகளாக செயல்படுகின்றன. இரையினை மென்று உண்ணும் வாய் உறுப்புகளுடன் கூடியது.

பட்டுப்புழு வளர்ப்பில் இதன் பங்கு: வெடாலியா, கிரிப்டோலிமஸ், ஸ்கைமினஸ் ஆகிய பொறி வண்டுகளை ஆய்வுக்கூடங்களில் வளர்க்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை வியாபார ரீதியில் பெருமளவில் உற்பத்தி செய்யவும் இயலும் என்றும் கூறுகிறார்கள். பட்டுப் புழுவை வளர்க்கப் பயன்படுத்தும் முசுக்கொட்டை செடியினை தாக்கும் ஒரு மாவுப் பூச்சியை கிரிப்டோலிமஸ் பொறி வண்டு கட்டுப்படுத்துகின்றன என்று சோதனையின் மூலம் கண்டுபிடித்துள்ளார்கள். செயற்கை உணவு கொடுத்து ஆய்வுக் கூடத்தில் வளர்ப்பதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
மூங்கில் கம்புகளின் பயன்பாடுகள் மற்றும் கட்டடக் கலையில் அதன் பங்குகள்!
Beetle

முக்கியமான பொறி வண்டுகள்: மேலும், திராட்சை, கொய்யா, ஆரஞ்சு மற்றும் இதர பழ மரங்களை தாக்கும் மெக்கோ நெல்லிக்காக்கஸ் மற்றும் பெர்ரிசியா என்ற மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்த கிரிப்டோலிமஸ் மற்றும் ஸ்கைமினஸ் ஆகிய பொறி வண்டுகளும், தென்னை செதில் பூச்சினை கட்டுப்படுத்தும் கைலோகோரஸ் என்ற பொறி வண்டும்,பருத்தி, அஸ்வினி, இலைப்பேன் முதலியவற்றை உண்ணும் கைலோமெனஸ் மற்றும் நெற்பயிற் பூச்சிகளை உண்ணும் காக்சிநெல்லா பொறி வண்டுகளும் மிகவும் முக்கியமானவை.

பொதுவாக, பூச்சியினம், வண்டினத்தைக் கண்டால் அதை ஒரு பகையாகத்தான் நாம் பார்ப்போம். மேலும், அதைத் துரத்த, துரத்தி அடிக்க முற்படுவோம். இதெல்லாம் எதனால் என்றால் அவை செய்யும் நன்மைகள் பற்றி நமக்குத் தெரியாததால்தான்.  இனி எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுவோம். இப்படி பொறி வண்டுகள் நல்ல இரை விழுங்கி பலனை அளித்தமையால் அவற்றைக் காக்க வேண்டியதும் நம் கடமையாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com