
பசுக்களைப் புனிதமாக கருதி வந்த நம் முன்னோர்கள் ‘கோமாதா’ என்று அழைத்து, இன்று வரையிலும் அதற்குண்டான மரியாதையை அளித்து வருகின்றனர். பசுவின் தலைமுடி முதல் சிறுநீர் வரை அனைத்தும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுவதாக சொல்லப்படுகிறது. பசுவின் சிறுநீர் மற்றும் சாணம் விவசாயத்தில் முக்கிய அங்கமாக விளங்குகிறது. பசுவின் சிறுநீரை கோமியம் என்று தான் நாம் அழைக்கிறோம். இது சரியான பெயர் தானா என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
கிராமங்களில் பசுஞ்சாணத்தை நீரில் கரைத்து வாசலில் தெளித்தும், மெழுகியும் வீட்டை சுத்தம் செய்வார்கள். இது மிகச் சிறந்த கிருமிநாசினியாக பயன்பட்டு வருகிறது. இன்றும் இந்த நடைமுறை கிராமங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் பசுஞ்சாணம் விவசாயத்தில் மிகச் சிறந்த உரமாகவும், பசுவின் சிறுநீர் பஞ்சகவ்யம் தயாரிக்கவும் பயன்படுகிறது. ஊர் வழக்கப்படி பசுவின் சிறுநீரை கோமியம் என்று சொல்வோம். ஆனால் சமஸ்கிருத மொழிப்படி கோமியம் என்பது பசுவின் சிறுநீரைக் குறிக்காது என்று சொல்லப்படுகிறது. அப்படியெனில் கோமியம் என்ற சொல் எதைக் குறிக்கிறது என்று நீங்கள் குழப்பமடையலாம்.
கோமியம் என்ற சொல் பசுவின் மலத்தைக் குறிக்கிறது. அதாவது பசுஞ்சாணத்தை தான் கோமியம் என சமஸ்கிருதம் சொல்கிறது. மேலும் பசுவின் சிறுநீரை சமஸ்கிருதத்தின் படி கோமூத்திரா என்று அழைக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பசுக்கள் கொடுக்கும் பால் கூட ஒருவகைக் கழிவு தான் எனக் கூறப்படுகிறது. அனைத்து வயதினரும் பருகுவதற்கு ஏற்றதாக இருக்கும் பால், அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர், வெண்ணெய் மற்றும் நெய் ஆகியவை அனைத்தும் நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தவை.
ஆயுர்வேத மருத்துவத்தின் படி, பசுவின் சிறுநீருக்கு மருத்துவ குணங்கள் உள்ளன. காலை மற்றும் மாலை வேளையில் சேகரிக்கப்படும் பசுவின் சிறுநீருக்குத் தான் மருத்துவ குணம் அதிகம் உள்ளதாம். அதிலும் தினந்தோறும் முதல் மற்றும் கடைசியாக கிடைக்கும் சிறுநீரைப் பயன்படுத்தக் கூடாதாம். இதற்கு இடைப்பட்ட சிறுநீர் தான் மருத்துவத்திற்கு உகந்ததாக இருக்குமாம். சேகரமாகும் இந்த சிறுநீரை 8 மடிப்புகளாக மடிக்கப்பட்ட வெண்ணிறத் துணியில் வடிகட்டிய பிறகே பயன்படுத்த வேண்டும்.
இருப்பினும் இது இன்றைய காலகட்டத்திற்கு சரி வருமா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். ஏனெனில் அன்றைய காலத்தில் மாடுகளுக்கு புல் மற்றும் வைக்கோல் என இயற்கையான தீவனங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், இன்றோ மாடுகள் சாலைகளில் திரிவதையும், பிளாஸ்டிக்கையும் உண்பதை காண முடிகிறது. இம்மாதிரியான சூழலில் பசுவின் சிறுநீர் மருத்துவ குணம் பெற்றது என்பதை நிரூபிக்க மீண்டும் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவின் சிறுநீரைக் கொண்டு மருந்துகள் தயாரிப்பது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இம்முறையில் தயாரிக்கப்பட்ட 8 வகையான மருந்துகள் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
அன்றிலிருந்து இன்றுவரை மாடுகள் விவசாயப் பணிகளில் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் பசுஞ்சாணமும், பசுவின் சிறுநீரும் இயற்கையளித்த வரம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பசுவின் சிறுநீரை நாம் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். ஆனால், இது நிச்சயம் பலன் தரக்கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.