செடிகளுக்கு வேப்ப எண்ணெய் நல்லதா? பயன்படுத்துவது எப்படி?

Neem Oil
How to use
Published on

விவசாயத்தில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் இயற்கையான முறைகளில் வேப்ப எண்ணெய்யும் ஒன்று. இருப்பினும் இதனைத் தகுந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் வேப்ப எண்ணெய்யில் இருக்கும் கசப்புத் தன்மை, ஒருசில செடிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும். இதனைத் தெரிந்து கொள்ளாமல் வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தினால், மகசூல் பாதிக்க வாய்ப்புள்ளது. எந்தெந்த செடிகளுக்கு வேப்ப எண்ணெய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இயற்கை விவசாயத்தில் வேப்ப மரத்தின் அனைத்துப் பாகங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவ்வகையில் வேப்பங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் வேப்ப எண்ணெய், இயற்கை பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. சில விவசாயிகள் வேப்ப எண்ணெயை தயாரித்து விற்பனையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேப்ப எண்ணெயை எந்தெந்த செடிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது; எப்படி பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நன்மைகள்:

பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டது வேப்ப எண்ணெய். அதோடு சிலந்திப் பூச்சிகள், கம்பளிப் பூச்சிகள், மற்றும் வெள்ளை ஈக்கள் போன்றவற்றின் இனப்பெருக்க சுழற்சியை அடியோடு அழிக்கிறது. பூச்சிவிரட்டியாக செயல்படும் வேப்ப எண்ணெய், பூஞ்சை பண்புகளையும் கொண்டுள்ளது. இலைப்புள்ளி, துரு மற்றும் கரும்புள்ளி போன்ற பூஞ்சை நோய்கள் பயிர்களில் ஏற்படுவதையும் இது தடுக்கிறது.

செயற்கை பூச்சி விரட்டிகள் பாரபட்சமின்றி அனைத்து விதமான பூச்சிகளையும் அழித்து விடும். ஆனால் வேப்ப எண்ணெய் அப்படி அல்ல. தீங்கு செய்யும் பூச்சிகளை அழித்தும், நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாத்தும் பயிர் விளைச்சலை அதிகரிக்க உதவுகிறது. லேடிபக்ஸ், பட்டாம்பூச்சி மற்றும் தேனீக்களை வேப்ப எண்ணெய் தொந்தரவு செய்வதே இல்லை.

பயிர்களின் நோயெதிர்ப்புத் திறனை அதிகரிப்பதில் வேப்ப எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர்களின் இயற்கையான பாதுகாப்பை மேம்படுத்தி, வலிமையான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வித்திடுகிறது. அதோடு வேப்ப எண்ணெயில் உள்ள கொழுப்புகளும், ஊட்டச்சத்துகளும் மண்ணின் வளத்தை மேம்படுத்துகின்றன.

தவிர்க்க வேண்டிய செடிகள்:

பல நன்மைகளை வாரி வழங்கும் வேப்ப எண்ணெய், ஒருசில பயிர்களுக்கு மட்டும் ஏற்புடையதாக இல்லை. ரோஜா, துளசி, மல்லிகை, கருவேப்பிலை, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், ஜப்பானிய மேப்பிள்ஸ், லில்லி, மிளகு மற்றும் சொலானேசி குடும்பத்தைச் சேர்ந்த தக்காளி போன்ற பயிர்களுக்கு வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தவே கூடாது. ஏனெனில் இந்தப் பயிர்களுக்கு வேப்ப எண்ணெய் உணர்திறன் அதிகமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
வேப்பங்கொட்டைக்கு இத்தனை பவரா?
Neem Oil

கீரைகள் மற்றும் பட்டாணி போன்ற மிகவும் மென்மையான இலைகளைக் கொண்ட பயிர்களில் வேப்ப எண்ணெயைத் தெளிக்கக் கூடாது. ஏனெனில் இதிலிருக்கும் கசப்புத் தன்மை, மென்மையான இலைகளில் தீக்காயங்களை ஏற்படுத்தி விடும்.

எந்தப் பயிராக இருந்தாலும் வேப்ப எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு, உற்பத்தியாளர் வழங்கும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அதோடு தொடக்கத்திலேயே பயிர் முழுக்க தெளிக்காமல், பயிரின் ஒரு சிறு பகுதியில் மட்டும் சோதனை முயற்சியாக வேப்ப எண்ணெயைத் தெளிக்க வேண்டும். ஓரிரு நாட்கள் கழித்துப் பார்க்கையில் பயிர்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே, வேப்ப எண்ணெயை முழுவதுமாக தெளிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com