
மகசூலைக் குறைக்கும் புழு, பூச்சிகள் தான் விவசாயத்தில் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த இன்று பல செயற்கை உரங்கள் வந்தாலும், அவையனைத்தும் மண்ணின் வளத்தை பாழாக்கி விடும். அதோடு விளைபொருட்களின் தரமும் குறைந்து விடும். பல ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை உரங்களும், பூச்சி விரட்டிகளுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. இவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தால், செலவு குறைவதோடு மண்ணின் வளமும் மேம்படும். அவ்வகையில் பூச்சிகளை விரட்டும் ஒரு இயற்கை வழிமுறையை இந்தப் பதிவில் காண்போம்.
கிராமங்களில் அதிகமாக காணப்படும் மரங்களுள் முக்கியமானது வேப்ப மரம். இதன் இலை முதல் பட்டை வரை அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. இதுதவிர பயிர் விளைச்சலை அதிகப்படுத்தவும் வேப்ப மரம் உதவுகிறது. மூத்த விவசாயிகள் பலருக்கும் வேப்ப மரத்தின் பாகங்கள் விவசாயத்தில் எப்படி உதவுகின்றன என்பது தெரியும். இருப்பினும் இந்தக் கரைசலைத் தயாரிக்க நேரமும், பொறுமையும் தேவை என்பதால், பலர் இதனைத் தவிர்த்து வருகின்றனர். ஆனால், இயற்கைப் பூச்சி விரட்டியாக செயல்படும் வேப்பங்கொட்டைக் கரைசலை, விவசாயிகள் பயன்படுத்த முன்வர வேண்டும்.
வேப்பங்கொட்டையின் முக்கியத்துவத்தை உணர்ந்த சிலர், அதனை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேப்பங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் கரைசலானது சுற்றுச்சூழலுக்கும், பயிர்களுக்கும், மண்ணின் வளத்திற்கும் மிகவும் ஏற்றது. இவை கசப்புத் தன்மையுடையவை என்பதால், பயிர்களின் மீது தெளித்தால், பூச்சிகள் பயிர்களை நெருங்காது. பயிர்களின் வாசனையும் மாறி விடுவதால், பூச்சிகள் குழப்பமடைந்து தானாகவே நிலத்தை விட்டு வெளியேறி விடும்.
பொதுவாக அந்துப்பூச்சிகள் முட்டையிடும் போது இலைகளின் மீது ஒருவிதப் பசையை சுரக்கும். இந்தப் பசையின் மேல் தான் முட்டைகளை இடும். வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்தால், அந்துப்பூச்சிகளால் இந்தப் பசையை சுரக்க முடியாது. அப்படியே சுரந்தாலும், அவை இலைகளின் மீது ஒட்டாது. இதனால் பூச்சிகளின் முட்டைகள் கீழே விழுந்து, உடைந்து, மண்ணில் மட்கி விடும். இதனால் பூச்சிகளின் இனப்பெருக்கம் தடைபட்டு, அவை பெருகுவது குறையும். தொடர்ந்து வேப்பங்கொட்டைக் கரைசலைப் பயன்படுத்தி வந்தால், மகசூல் குறைவதைத் தடுக்க முடியும்.
தயாரிப்பு முறை:
முதலில் வேப்பங்கொட்டைகளை சேகரித்து, தோல் நீக்கி வெயிலில் காய வைக்க வேண்டும். நன்றாக உலர்ந்ததும், இவற்றை தூளாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை ஒரு நாள் முழுக்க தண்ணீரில் ஊறவைத்து, வடிகட்டினால், வேப்பங்கொட்டைக் கரைசல் தயாராகி விடும். 1 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி. வேப்பங்கொட்டைக் கரைசலைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். வேப்பம்புண்ணாக்கை பயிர்களுக்கு அடியுரமாக இடுவதன் மூலம், கூன்வண்டு மற்றும் படைப்புழுக்களின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
விவசாயிகள் பலரும் சற்று நேரம் ஒதுக்கி மிக எளிதாக கிடைக்கும் வேப்பங்கொட்டையை சேகரித்து, தாங்களாகவே இயற்கைப் பூச்சி விரட்டியைத் தயாரித்துக் கொள்ள முன்வர வேண்டும். பணம் கொடுத்து செயற்கை உரங்களை வாங்குவதைக் காட்டிலும், நேரத்தை முதலீடாக்கி இயற்கை விவசாயத்தை மேற்கெள்ளுங்கள்.