நரகத்திற்கான நுழைவாயில் நம் பூமியிலா?

Gates of Hell
Gates of Hell

துருக்மெனிஸ்தான் (Turkmenistan) தலைநகர் அசுகாபாத் (Ashgabat) நகரிலிருந்து சுமார் 260 கிலோமீட்டர் (160 மைல்கள்) தொலைவிலிருக்கும் தர்வாசா (Darvaza) எனும் கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள காராகும் பாலைவனம் (Karakum Desert) பகுதியில் இருக்கும் எரிவளி (Fuel Gas) பெருங்குழி நரகத்திற்கான நுழைவாயில் (Gates of Hell) என்றழைக்கப்படுகிறது.

Gates of Hell
Gates of Hell

1971 ஆம் ஆண்டில், துருக்கிய மொழியில் காராகும் பாலைவனம் எனப்படும் கருப்பு மணல் பாலைவனப் பகுதியினைச் சோவியத் ரசியாவின் பொறியாளர்கள் எண்ணெய் வயல் என்று அடையாளம் கண்டு தங்கள் பணியினைத் தொடங்கினர். அவர்கள் தேர்வு செய்த இடத்தின் அருகில் கூடாரங்கள் அமைத்து, எண்ணெய் அளவைப் பரிசோதித்து மதிப்பீடு செய்யத் துளையிடும் கருவிகள் கொண்டு துளையிடும் பணியில் ஈடுபட்டனர்.

துளையிடத் தொடங்கிய சிறிது நேரத்தில், முகாம்களின் கிழே பரந்த தரைபரப்பு உள்வாங்கி துளையிடும் கருவிகளும், மற்றும் கூடாரங்களும் சரிந்து மறைந்தன. அதன் பிறகு, அப்பகுதி எண்ணெய் வயல் பகுதியல்ல, எரிவாயு காணப்படும் பகுதியென்று உணர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக அப்பகுதியில், 70 மீட்டர் (230 அடி) சுற்றளவில் மிகப்பெரிய சுரங்கம் தோண்டுவது என்று முடிவு செய்து அதற்கானப் பணியை மேற்கொண்டனர்.

அப்பணியின் போது, 60 மீட்டர்கள் (200 அடிகள்) அகலம் கொண்ட பரப்பளவில் சுமார் 20 மீட்டர் (66 அடிகள்) தோண்டப்பட்ட நிலையில், அது ஆழப்புதைகுழி போல் மீண்டும் உள்வாங்கியது. அதிலிருந்த மீத்தேன் வாயுக்கள் கசியத் தொடங்கின. வளிமண்டலத்தில் கொடிய மீத்தேன் வாயுக்கள் கலந்து விடாமலிருப்பதற்காக, ரசிய அறிவியலாளர்கள், அங்கு நெருப்பு வைத்தனர். அவர்கள் வைத்த நெருப்பு எதிர்பாராத விதமாகச் சுரங்கம் முழுவதும் பற்றிக் கொண்டது. அந்த நெருப்பு, சில வாரங்களில் எரிந்து அணைந்து விடும் என அவர்கள் மதிப்பிட்டனர்.

ஆனால், அவர்கள் வைத்த நெருப்பு எரிவளி பள்ளத்தின் மொத்த பரப்பளவான 5,350 மீ² முழுவதும் பரவி, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இப்பள்ளத்திலிருந்து வெளியாகும் தீப்பிழம்புகள், மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் வண்ணச் ஜுவாலைகளாகக் காணப்படுகின்றது.

இதனைக் கண்ட உள்ளூர் வாசிகள் அந்த எரிவளிப் பள்ளத்திற்கு 'நரகத்திற்கான நுழைவாயில்' என்று பெயரிட்டு அழைத்தனர். அதன் பிறகு, காராகும் பாலைவனப் பள்ளம் பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறிப்போய் விட்டது. இப்பகுதிக்கு உலகம் முழுவதிலுமிருந்து தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com