
இயற்கையாக கிடைக்கும் பொருட்களை சரியாக பயன்படுத்தினாலே வளமான விவசாயத்தை மேற்கொள்ள முடியும். இதில் அவசியமான ஒன்று தான் இயற்கை உரங்கள். இன்றைய காலகட்டத்தில் இயற்கை உரங்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. இருப்பினும் ஒருசில விவசாயிகள் மீண்டும் இயற்கை விவசாயத்திற்கு திரும்ப முயற்சிக்கின்றனர். அதோடு இயற்கை விவசாயத்தில் செலவும் மிக குறைவாக இருக்கும். அவ்வகையில் இயற்கை உரமான ஜீவாமிர்தம் எவ்வகையில் விவசாயத்தில் உதவுகிறது மற்றும் இதனை எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
இயற்கை விவசாயத்தில் விவசாயிகளுக்கு மகசூலை அதிகரிப்பதில் ஜீவாமிர்தம் உறுதுணையாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பூச்சிகளின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். அதோடு மண்ணில் கரிம கார்பனை ஊக்குவிக்கச் செய்து, பயிர்களின் வளர்ச்சியைத் தூண்டும். பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சியினங்களின் செயல்பாட்டையும் ஜீவாமிர்தம் அதிகரிக்கச் செய்கிறது. பயிர் வளர்ச்சி சீராக இருக்கும் பட்சத்தில், மகசூலில் எந்தப் பிரச்சினையும் இருக்காதல்லவா!
இயற்கை விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும் ஜீவாமிர்தத்தை விவசாயிகள் தாங்களாகவே தயார் செய்து பயன்படுத்த முடியும். பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் தான் ஜீவாமிர்தம் தயாரிக்கத் தேவைப்படும் முக்கியமான மூலப்பொருட்கள் ஆகும். கிராமங்களில் இவை எளிதாக கிடைக்கும் என்பதால், ஜீவாமிர்தத்தையும் எளிதாக தயாரித்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
பசுவின் சிறுநீர் - 10 லிட்டர்
பசுஞ்சாணம் - 10 கிலோ
உளுத்தம்பருப்பு மாவு அல்லது பட்டாணி மாவு - 2 கிலோ
பழைய வெல்லம் - 2 கிலோ
தண்ணீர் - 200 லிட்டர்
ஒரு கைப்பிடி மண்
செய்முறை:
ஒரு பெரிய தொட்டி அல்லது பீப்பாயில் 200 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் 10 லிட்டர் சிறுநீர் மற்றும் 10 கிலோ பசுஞ்சாணத்தைச் சேர்த்து மரக் குச்சியால் நன்றாக கலக்க வேண்டும். பிறகு கைப்பிடி மண், 2 கிலோ உளுத்தம்பருப்பு மாவு மற்றும் 2 கிலோ பழைய வெல்லத்தை இந்தக் கரைசலில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை கரைசலை கிளறி விட வேண்டியது அவசியம். சுமார் 2 முதல் 7 நாட்களில் இந்தக் கரைசல் நொதித்து, ஜீவாமிர்தம் தயாராகி விடும்.
பயன்படுத்தும் முறை:
ஓரளவு கெட்டியாக இருக்கும் ஜீவாமிர்தத்தைப் பயன்படுத்த வேண்டுமெனில், முதலில் இந்த உரத்தை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும். இதற்கு 1 லிட்டர் ஜீவாமிர்தத்தில் 4 லிட்டர் தண்ணீரைக் கலந்து உபயோகப்படுத்தலாம். ஜீவாமிர்தத்தை நேரடியாக பயிர்களின் மீதும் தெளிக்கலாம் அல்லது பாசன நீரிலும் கலந்து விடலாம். நிலத்தை ஏர் உழுத பிறகு விதைப்பதற்கு முன்பு ஒரு முறையும், விதைத்த 20 நாட்களுக்குப் பிறகு 2வது முறையும், 45 நாட்களுக்கு பிறகு 3வது முறையும் ஜீவாமிர்தத்தை பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
விதை நேர்த்தி செய்வதற்கும் ஜீவாமிர்தம் உதவுகிறது.
குறைந்தது 2 மணி நேரம் விதைகளை ஜீவாமிர்தத்தில் ஊற வைத்தால், விளையும் திறன் அதிகரிக்கும். பொதுவாக ஜீவாமிர்தத்தை மாதத்திற்கு ஒருமுறை பயிர்களுக்குத் தெளித்தால், மண்ணின் வளமும் மேம்படும்; பயிர்களின் வளர்ச்சியும் சீராக அதிகரிக்கும். இது மண்ணிற்கும், விளைபொருட்களுக்கும் எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக மகசூல் வேண்டி செயற்கை உரங்களை நாடும் விவசாயிகள், இயற்கை உரங்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும். இதனால் செலவும் குறைவதோடு, மண்ணின் வளமும் பாதுகாக்கப்படும்.