

கம்பளிப்புழு பருவத்தில் நடந்தவை அனைத்தும் முழுமையான பட்டாம்பூச்சியாக உருமாறிய பின்பும் நினைவில் இருக்குமா? அறிவியல் உலகத்தை வியக்க வைத்துள்ள 10 வயது ஜப்பானியச் சிறுவன் ஜோ நாகை, எளிய பரிசோதனைகள் மூலம் இதற்கு 'ஆம்' என்று பதிலளித்துள்ளார். பாரம்பரிய அறிவியல் கோட்பாடுகளை உடைத்தெறிந்து, உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ள இந்தச் சிறுவனின் ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சிப் பயணம் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
பட்டாம் பூச்சியின் வாழ்வியல் சுழற்சியில், முட்டை, லார்வா (Caterpillar), கூட்டுப்புழு (Pupa), பட்டர்ஃபிளை என நான்கு நிலைகள் உள்ளன. சமீபத்தில், ஜப்பானை சேர்ந்த பத்து வயது, ஜோ நாகை (Jo Nagai) என்ற ஆரம்பப் பள்ளி மாணவன், பட்டாம் பூச்சிக்கு, தான் புழு (Larva) நிலையில் இருந்தபோது நடந்தவையெல்லாம் நினைவில் இருக்கும் என்பதை ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துள்ளான்.
ஜப்பானில் கோபே (Kobe) என்ற நகரத்தில் பிறந்து வளர்ந்த ஜோ நாகை, சிறு வயதில் இருந்தே பட்டாம் பூச்சிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, ஏசியன் ஸ்வாலோடெய்ல் (Swallowtail) என்ற வகை பட்டாம் பூச்சிகளை தன் வீட்டிலேயே வளர்த்து, அவற்றின் வளர்ச்சி மற்றும் குணாதிசயங்களை மிக உன்னிப்பாக கவனித்து வந்துள்ளான்.
பட்டாம் பூச்சி, அதன் இரண்டாம் நிலையான கம்பளிப்புழுவிலிருந்து முற்றிலும் தன் உடல் அமைப்பு மற்றும் தோற்றத்தை மாற்றிக்கொண்டு கூட்டுப்புழு நிலைக்கு உருமாறி, பிறகு முழுமையான வளர்ச்சியடைந்து பட்டாம் பூச்சியாய் பறந்து திரிந்தபோது அது ஜோ நாகையை நினைவில் வைத்திருப்பதை ஜோ கண்டறிந்தான். இத்தனை மாற்றத்திற்குப் பின்னும் அந்தப் பூச்சி அவனை நினைவில் வைத்திருந்தது, அவனிடமிருந்த ஆர்வத்தை மேலும் தூண்டி விட்டது. பட்டாம் பூச்சி, கம்பளிப்புழு நிலையில் இருக்கும் போது அதனுள் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள், அது வியக்கத் தக்க வகையில் தன் தோற்றத்தில் முற்றிலும் மாறிப் போன பின்பும் அதன் நினைவாற்றல் திறன் சிறிதும் குன்றாமல் இருப்பது எப்படி சாத்தியம் என்பதை கண்டறிய முற்பட்டான்.
அவனாகவே, பல தொடர்ச்சியான பரிசோதனைகளை திட்டமிட்டு வடிவமைத்தான். அதன் முடிவுகளை ஒருங்கிணைத்து, அவற்றை தொழில்முறை ஆராய்ச்சியாளர்களிடம் சமர்ப்பித்தான். அப்போது, பூச்சி மற்றும் விலங்குகளின் நினைவாற்றல் திறன், அவற்றின் உடல் அமைப்பு மற்றும் தோற்றத்தில் உண்டாகும் வியத்தகு உரு மாற்றம், உடலுக்குள் கடத்தப்படும் மரபு வழி நடத்தை போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் ஜோ நாகை பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.
அவனது கண்டுபிடிப்புகளின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை என்றபோதும், அது அவனுக்கு இள வயது ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் என்ற பெயரையும் உலகளாவிய புகழையும் பெற்றுத் தந்துள்ளது.
இயற்கை மற்றும் விலங்குகள் மீது அதிகளவு அன்பும் பற்றும் கொண்டுள்ள ஜோ நாகை எதிர்காலத்தில் ஒரு கால்நடை மருத்துவராக வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளார். நாடு முழுவதிலும் உள்ள இளவயது திறமைசாலிகளை ஊக்குவிக்கும் சன் மாசயோஷி பிலன்த்ரோபிக் ஃபௌண்டேஷன் (Son Masayoshi Philanthropic Foundation) னில் ஜோ, கல்வி மற்றும் அறிவில் சிறந்ததொரு மாணவர்.
குழந்தைப் பருவம் முதல் பூச்சி இனத்தின் மீது பேரார்வம் கொண்டிருந்த ஜோ, அவர் தம் கண்டுபிடிப்புகளை பதிவு செய்வதற்கு
நூற்றுக் கணக்கான படிவங்களை கையால் நிரப்பிக் கொடுத்துள்ளார்.
பட்டாம் பூச்சிகள் பற்றின ஆராய்ச்சிகளை ஜோ பரிசோதனைக் கூடங்களிலிருந்தோ அல்லது பள்ளியில் ஆசிரியர் தரும் வீட்டுப் பாடமாக எடுத்து வந்து செய்து முடிக்கும் விதத்திலோ ஆரம்பிக்கவில்லை.
ஆர்வமாக அவர் தம் வீட்டில் வளர்த்து வந்த ஏசியன் ஸ்வாலோடெய்ல் வகை பூச்சிகளே எப்பவும் அவரின் ஆராய்ச்சிகளுக்கு உதவியாயிருந்தன. காடுகளில் சுற்றித் திரியும் பட்டாம் பூச்சிகள், அவர் அருகில் செல்லும்போது தூரமாக ஓடிவிடும். ஆனால், அவர் வீட்டில் புழுவாக இருந்தபோதிலிருந்து வளர்த்து வந்த பூச்சிகள், அவர் காட்டுக்குள் சென்று விட்டு வந்தாலும் அவை மறுபடியும் ஜோவின் கைகளில் வந்து அமர்ந்து கொள்ளும்.
இதனால் ஆச்சரியத்திற்குள்ளான ஜோ, புழுவாக இருந்தபோது அவைகளுக்கு உண்டான நினைவுகள், முற்றிலும் வேறுபட்ட தோற்றத்திற்கு மாறிய பின்னும் அப்படியே நிலைத்துள்ளதை புரிந்து கொண்டார். பலவிதமான பரிசோதனைகளை திட்டமிட்டு, கவனமாக மேற்கொண்டு, முடிவுகளை ஆவணப்படுத்துவதில் பல வருடங்கள் செலவாயின.
ஜோ மேற்கொண்ட பரிசோதனைகளில் ஒன்றின் விவரம்: ஸ்வாலோடெய்ல் வகை புழுக்கள் இருக்கும் இடத்தில் லெவெண்டர் வாசனை திரவியத்தை ஸ்பிரே செய்து விட்டு, அதே நேரம் புழுக்களின் சதை மீது லேசான அதிர்வலை உண்டு பண்ணக் கூடிய கருவி ஒன்றையும் பொருத்தினார் ஜோ. அப்புழுக்கள் முழுமையாக உருமாறி பூச்சிகளாக வெளி வருகையில், அவை 'Y' வடிவில் அமைந்த புதிர்ப் பாதை குழாய் மூலம் பரிசோதிக்கப்பட்டன.
அப்போது 70% பூச்சிகள் லெவெண்டர் வாசனையை தவிர்த்துப் பறந்தன. இது, ஒரு பூச்சி கூட்டுப்புழு நிலையில் இருக்கும்போது அதன் மொத்த நரம்பியல் செயல்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டு பழைய நினைவுகள் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்ற பாரம்பரிய கண்டு பிடிப்புகளை உடைத்து, சில நினைவுகள் நிலைத்து நிற்கவும் வாய்ப்புண்டு என்று நிரூபிக்கும் விதமாயிருந்தது. அதன் பின், லெவெண்டர் சென்டின் வாசனையை அறிந்திராத அடுத்தடுத்த தலைமுறைப் பூச்சிகளும் அந்த வாசனையை வெறுத்தோடுவதை ஆராய்ந்தறிந்தார் ஜோ.
ஜோவின் கண்டுபிடிப்புகள், கோபே நகரின் International Congress of Entomology உள்ளிட்ட பல ஆராய்ச்சியாளர்கள் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன.
முன்னிலை ஆராய்ச்சியாளர்கள் பலராலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், துறைசார் நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழில் (Peer reviewed scientific journal) இன்னும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், சோஷியல் மீடியாக்கள் மூலம் விரைவில் வைரலாகி பேசுபொருளாகிவிட்டது.
தனக்கு ஆர்வமுள்ள ஒன்றின் மீது கூர் நோக்குடன் சில பரிசோதனைகளையும் மேற்கொண்டு தனது அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்டு, ஒருவரால் எப்படியெல்லாம் இலக்கை அடையவும் வெற்றி பெறவும் முடியும் என்பதை காட்டவும், சிறுவர்களுக்கு ஊக்கம் தரவும் உதவுவதாக உள்ளது ஜோ நாகையின் ஸ்டோரி!
இந்த வியக்கத்தக்க அறிவியல் தகவல்களை அறிந்துகொள்வதன் மூலம், எளிய உற்றுநோக்கல் மற்றும் விடாமுயற்சி எவ்வாறு உலகளாவிய சாதனைகளுக்கும் ஆச்சரியமான உண்மைகளுக்கும் வழிவகுக்கும் என்ற உத்வேகத்தை வாசகர்கள் பெற முடியும்.