கோடையில் ஆடுகளுக்கு ஏற்படும் தீவனத் தட்டுப்பாட்டைக் குறைத்து, அவற்றைக் காக்க சீமைக் கருவேலக் காய்கள் மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது. இது, கிராமங்களில் தான் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் சீமைக் கருவேலக் காய்களை சேமித்து வைத்திருப்பது நல்லது.
விவசாயத்தின் உப தொழில்களில் ஒன்றாக கருதப்படும் கால்நடை வளர்ப்பில், தீவனம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். கால்நடைகளுக்கு ஏற்ற தீவனத்தைக் காலநிலைக்கேற்ப அளித்தால்தான், அவை நன்றாக வளரும். காலநிலைக்கேற்ப நோய்த் தாக்குதலும் இருக்கும் என்பதால், கால்நடைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சில விவசாயிகள் பசுந்தாள் உரங்களை விளைவித்து கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கின்றனர். அவ்வகையில், கோடை காலத்தில் ஆடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில், பச்சைத் தாவரங்கள் இந்நேரங்களில் காய்ந்திருக்கும் என்பதால் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு.
கோடையில் ஆடுகளுக்கான தீவனத் தட்டுப்பாட்டை சமாளிக்க சீமைக் கருவேலக் காய்கள் சிறந்த தீர்வாக அமையும். ஆடுகள் சீமைக் கருவேலக் காய்களை நன்றாக சாப்பிடும் என்பதால், கால்நடை வளர்ப்பவர்கள் இதனைக் கருத்தில் கொள்வது நல்லது. சீமைக் கருவேல மரங்கள் நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சும் தன்மை கொண்டதால் ஆங்காங்கே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இம்மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் என அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும், நாடு முழுக்க அதிகளவில் சீமைக் கருவேல மரங்கள் பரவிக் கிடப்பது குறிப்பிடத்தக்கது.
கிராமங்களில் மிக எளிதாக சீமைக் கருவேல மரங்களைக் காண முடியும். இதன் காய்களை கிராமங்களில் 'வேலங்காய்' என்று அழைப்பார்கள். பலமான காற்று அடிக்கும் நேரத்தில் வேலங்காய்கள் தானாக கீழே விழும். இதனை எடுத்து சேமித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் ஆடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். வேலங்காய்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்பதால், தீவனத் தட்டுப்பாட்டை சமாளிக்க இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், பச்சையாக இருக்கும் வேலங்காய்களை விட காய்ந்த வேலங்காய்களைத் தான் ஆடுகள் நன்றாக சாப்பிடும் என்பதால், பச்சைக் காய்களை காய்ந்த பிறகு ஆடுகளுக்கு கொடுக்கலாம்.
வெயில் வாட்டி வதைக்கும் கோடை காலங்களில், ஆடுகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பானது தான். இது போன்ற சமயங்களில் ஆடுகள் உடல் சோர்வால் வாடி காணப்படும். மேலும் கழிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டு ஆடுகளும், அதன் குட்டிகளும் இறக்க வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க தாது உப்புகள், அடர் தீவனங்கள் மற்றும் குளிர்ந்த நீர் ஆகியவற்றை ஆடுகளுக்குத் தீவனமாக கொடுக்கலாம். அதிலும் குறிப்பாக சீமைக் கருவேல மரத்தின் வேலங்காய்களைத் தீவனமாக வழங்குவது, ஆடுகளின் தீவனத் தட்டுப்பாட்டை வெகுவாக குறைத்து, உடல் சோர்வைத் தடுக்கும்.
கோடை காலங்களில், பசும்புல் தீவனத் தட்டுப்பாட்டினை வேலங்காய்கள் சரி செய்கின்றன . இது தவிர ஆடுகளுக்கு கொடுக்காபுளி மரத் தழைகள் மற்றும் சவுண்டல் மரத் தழைகளையும் தீவனமாகக் கொடுக்கலாம். இப்படிச் செய்வதால் கோடை காலங்களில் ஆடுகளுக்குத் தேவையான தீவனத்தை தாமதமின்றி சரியான நேரத்தில் வழங்க முடியும். மேலும், அவ்வப்போது ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்வதும் தீவனப் பற்றாக்குறைக்கு தீர்வாக இருக்கும்.