இந்திய காகங்கள் கென்யாவில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருவதாகக் கூறி, அங்குள்ள அதிகாரிகள், பிரச்னைக்கு தீர்வாக10 லட்சம் காகங்களை கொல்லும் பணியை தொடங்கியுள்ளனர்.
1890களில் காகங்கள், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த சான்சிபார் தீவுக்கூட்டத்தில் பெருகிவரும் கழிவுப் பிரச்னையைச் சமாளிக்கும் முயற்சியில் கொண்டுவந்தனர். இந்திய காகம் கென்யாவில் 'குங்குரு' அல்லது 'குராபு' என்று அழைக்கப்படுகிறது. இந்த பறவைகள் இந்தியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவை. கிழக்கு ஆப்பிரிக்காவில் அவை வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. அங்கிருந்து அவை கென்யா கடற்கரை வரை பரவின.
குங்குரு காகங்கள் முதன்முதலில் 1947 இல் மொம்பாசா துறைமுகத்தில் இருந்ததாக பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் அதனுடன் இணைந்து அதிகரிக்கும் குப்பை மேடுகளால்தான் இந்த பறவைகள் அதிகளவில் பெருகின. குப்பை மேடுகள் இந்த பறவைகளுக்கு உணவளிப்பதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் சிறந்த சூழலை வழங்குகின்றன. மேலும், இவற்றை இயற்கையாக வேட்டையாடும் விலங்கினமும் ஏதும் இல்லை.
இந்திய காகங்கள் பல ஆண்டுகளாக மற்ற பறவைகளின் முட்டை மற்றும் குஞ்சுகளைக் கூட குறிவைத்து தாக்கி, அவற்றின் கூடுகளை அழிக்கின்றன. இதனால் வீவர்ஸ் மற்றும் வாக்ஸ் பில் போன்ற சிறிய உள்நாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. உள்ளூர் பறவைகள் குறையும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்பட தொடங்குகிறது. உள்ளூர் பறவைகளால் வேட்டையாடப்படும் தீங்கு விளைவிக்கும் விஷப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும், காகங்கள் பயிர்கள், கால்நடைகள் மற்றும் கோழிகளை தாக்குகின்றன .
மொம்பாசா நகரில் சுவர்கள் மற்றும் கூரைகளில் காகங்கள் எச்சமிடுவதால் வீடுகள் அசுத்தமாகின்றன. அதே நேரத்தில் பலர் தலை மீது காகங்கள் எச்சமிடும் என்று பயந்து மர நிழல்களின் கீழ் உட்காரவே தயங்குகின்றனர் என்று கென்ய இயற்கை பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.
இந்திய காகங்களை கொல்ல முதற்கட்டமாக வாடாமு மற்றும் மலிந்தி ஆகிய நகரங்களில் விஷம் வைத்துள்ளனர். சுற்றுச்சூழல் வல்லுநர்கள், பாதுகாவலர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஹோட்டல் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பல மாதங்கள் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்துதான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கென்யா வனவிலங்கு அமைப்பு தெரிவித்துள்ளது
இந்த செயல்முறையில் பிற பறவைகள் அல்லது விலங்குகளை பாதிக்காமல், காகங்களின் எண்ணிக்கையைக் குறைக்க `ஸ்டார்லைசைட்’ என்ற விஷம் வைக்கப்படுகிறது. இந்த விஷத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,000 காகங்களை கொன்றுள்ளனர்.
மெதுவாக செயல்படும் இந்த விஷம் காகத்தை கொல்லும். ஆனால், காகத்தின் இறைச்சியை சாப்பிடும் விலங்குகளை பாதிக்காது என்று கென்யா விஷ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆயினும் இதை பற்றி பலரும் கவலை தெரிவித்து உள்ளனர். இந்த விஷத்தை தெரியாமல் வேறு விலங்குகள் சாப்பிடலாம் அல்லது இறந்த காகத்தினை உண்ணும் பிராணிகளுக்கு உடனடி பாதிப்பு இல்லா விட்டாலும் அது ஒரு நாள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். காகத்தினை கட்டுபடுத்த அபாயமற்ற வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல என்பதை மனிதன் ஏற்க வேண்டும்.