நம் நாட்டில் பரவலாக காணப்படும் பறவை இனங்களில் ஒன்று காகம். இந்த பறவைகளை காணாமல் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் நகர்த்திச் செல்ல முடியாது என்றே சொல்லும் அளவுக்கு திரும்பும் இடமெல்லாம் காகங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவ்வளவு ஏன் "காக்கை குருவி எங்கள் ஜாதி "என்று நம்முடைய படைப்புகளிலும் வரலாறுகளிலும் கூட காகங்கள் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன.
ஆனால் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டில் இந்திய காகங்களுக்கு தடை விதித்து இருக்கின்றனர். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த நாட்டில் உள்ள அதிகப்படியான காகங்களை கொல்வதற்கும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அப்படி காகங்களை கொல்லும் அளவுக்கு அங்கே என்னதான் பிரச்சினை? என்று கேட்கலாம், அதிக எண்ணிக்கை தான் காரணம். கென்னியா நாட்டில் இந்திய காகங்கள் அதிக அளவில் உள்ளன. கிட்டத்தட்ட அவை சுற்றுச்சூழலில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன. குப்பை கொட்டும் இடங்கள், சுற்றுலா விடுதிகள், வீட்டுக் கூரைகள் என அவை ஆக்கிரமிக்காத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து இடங்களிலும் காகங்கள் பரவி காணப்படுகின்றன.
வன உயிரினங்களை வேட்டையாடுதல், சுற்றுலா பகுதிகளில் தொந்தரவு ஏற்படுத்துதல், கோழிப் பண்ணைகளில் தாக்குதல் ஏற்படுத்துதல் மற்றும் மற்ற பறவைகளின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளை குறி வைத்து தாக்குதல் என நாளுக்கு நாள் காகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
அதோடு மட்டுமல்லாமல் அங்கு உள்ள காகங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளை வேட்டையாடுவதோடு மட்டுமல்லாமல் பாலூட்டி, ஊர்வன போன்றவற்றையும் வேட்டையாடுகின்றன. இதனால் அங்குள்ள சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு பல்லுயிர் மீதான அவற்றின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இத்தகைய தொடர் தாக்குதல் நடவடிக்கைகளால் அங்கு காணப்படும் weavers மற்றும் waxbills எனப்படும் உள்நாட்டு பறவை இனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. உள்ளூர் பறவைகளின் எண்ணிக்கை குறைவதால் அங்குள்ள சுற்றுச்சூழல் பாதிப்படைவதோடு அந்தப் பறவைகளால் வேட்டையாடப்படும் தீங்கு விளைவிக்க கூடிய விஷ பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது அங்கு நிலவும் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக அந்நாட்டு அரசால் பார்க்கப்படுகிறது
மேலும் காகங்கள் துன்பத்தில் இருக்கும் போதோ அல்லது இரையை கண்ட உடனோ எழுப்பும் ஒரு தனித்துவமான ஒலியை அங்குள்ள மக்கள் தொந்தரவுக்குரிய ஒன்றாக கருதுகின்றனர். சுவர்கள் மற்றும் வீடுகளின் கூரைகளில் எச்சமிட்டு அசுத்தப்படுத்துவதோடு மரங்களையும் ஆக்கிரமித்து இருப்பதால் நிழலுக்கு கூட மரத்தடியில் ஒதுங்குவதற்கு அங்குள்ள மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் அதிகாலையில் எழுப்பும் சத்தத்தால் மக்கள் எரிச்சல் அடைவதோடு தூக்கம் கெடுவதாகவும் புலம்புகின்றனர்.
இப்படி அங்கு நிலவும் பல்வேறு இடையூறுகளின் காரணமாக காகங்களை அழிப்பது குறித்து சுற்றுச்சூழல் வல்லுநர்கள், பாதுகாவலர்கள் மற்றும் சமூக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் காகங்களை அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். காகங்களை அழிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று சமூக ஆர்வலர்கள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி வந்தாலும் கென்னிய அரசு காகங்களை அழிப்பதில் உறுதியாக செயல்பட்டு வருகிறது.
அதிகமாக விடுமுறையை கழிக்க வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்தோடு தங்கள் பொழுதுகளை கழிப்பதாகவும் அங்குள்ள சுற்றுலா விடுதிகளின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உண்டிவில்லை பயன்படுத்தி காகங்களை பயமுறுத்தி வருவதோடு, கொல்வதற்காக விஷத்தை பயன்படுத்தவும் தொடங்கியுள்ளனர். அவ்வாறு பயன்படுத்தப்படும் விஷத்தை உண்டு இறக்கும் காகங்களை வேறு விலங்குகளோ பறவைகளோ சாப்பிடும் போது அந்த விலங்கு அல்லது பறவையின் உடலினுள் விஷம் பரவாத வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.