
கோயிலில் குடிகொண்டிருக்கும் சுவாமி மஹா ராஜாவுக்கெல்லாம் மகாராஜா. அதனால் தான் கோவில்களில் யானை மற்றும் குதிரைகள் இருந்தன. இன்றும் இருக்கவும் செய்கின்றன.
கேரளத்தில் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கும் தமிழ்நாட்டு கோயில் யானைகளுக்கும் உருவத்தில் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. கேரள கோயில் யானைகளை பார்க்க வேண்டுமே! என்ன ஒரு உயரம், என்ன ஒரு கம்பீரம்?
வீர சிவாஜி வாளை போன்ற தந்தங்களும், பளபளப்பான தும்பிக்கையும் கொண்டு ஆஜானுபாகுவாக பார்ப்பவர் வாய் பிளக்கும்படி நிற்கின்றன. குருவாயூர் யானைகள் சிக்ஸ் பாக்குடன் அசத்தலாக ஜிம்மில் இருந்து வெளி வருவது போன்ற தோற்றமளிக்கின்றன. நம்மூர் கோயில் யானைகள் மட்டும் ஊளை சதை போட்டுக்கொண்டு உலவுகிறது ஏன் ?
இதற்கு விடை அவைகளுக்கு நாம் கொடுக்கும் உணவில் இருக்கிறது. நம்மூர் கோவில்களில் யானைகளுக்கு சோற்று உருண்டைகள் உருட்டி உருட்டி கொடுத்து வயிறை நிரப்புகிறோம். இதனால் அவை ஊளை சதை போட்டு அவதியுறுகின்றன. சமீபத்தில் தமிழக கோவில் யானைகள் நீரிழிவு நோயினால் பாதிக்க பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
யானைகளின் இயற்கை உணவு தயிர் சாதமோ, இட்டிலிகளோ இல்லை. இலைகளும், தழைகளும், புற்களும் தான். எலிபன்ட் கிராஸ் என்று ஒரு தனி வகை புற்கள் உள்ளன. கிளைகளோடு இலைகளை உண்ணும் படியாகத்தான் யானைகளின் பற்கள் படைக்கப் பட்டுள்ளன.
மிருதுவான உணவுகளை தின்று அவற்றின் பற்கள் வலுவிழந்து விடுகின்றன. அது, அவை ருசிக்கண்ட யானைகளாக மாறி தங்கள் இயற்கை உணவில் ஆர்வம் காட்ட மறுக்கும் அளவிற்கு போய்விடுகிறது.
கேரளத்தில் ஆடு, மாடுகளை களை மேய்க்க விடுவது போல யானைகளை தழை மேய அழைத்து செல்கிறார்கள். மொத்தத்தில் சொல்ல வருவது என்னவென்றால் நம் கோவில்களில் யானைகளுக்கு அவைகளின் இயற்கையான உணவை கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவை ஆரோக்கியமாக கட்டு மஸ்தாக இருக்க முடியும்.