
சென்னை பாரிமுனை பூக்கடை பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கந்தக்கோட்டம் கந்தசாமி கோவில். இந்த கோவிலில் உள்ள மூலவர் கந்தசாமி என்றும், உற்சவர் முத்துக்குமாரசுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். இக்கோவில் சுமார் 1000 வருடங்களுக்கு மேல் பழமையானது என்று கூறப்படுகிறது. வள்ளலார் பாடல் பாடிய தலம் என்ற சிறப்பும் இந்த கோவிலுக்கு உண்டு.
மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும், கொடிமரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும உள்ளது. ராஜகோபுரமும, பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது.
சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் 29-ம்தேதி திருப்பணிகள் தொடங்கியது. கோயில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களும் புதுப்பிக்கப்பட்டு, வண்ணம் பூசப்பட்டு, கடந்த வாரம் திருப்பணிகள் நிறைவடைந்தது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 10-ம்தேதி கோலவிக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன்யாக சாலை பூஜை கோலாகலமாக தொடங்கியது.
இன்று காலை 7 மணியளவில் ஆறாம் கால யாக பூஜை, அவபிருதயாகம், விசேஷ தரவிய ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மஹா பூர்ணஹூதி, தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது. 10.30 மணியளவில் ராஜகோபுரம், அனைத்து விமானங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா’ என்று பக்தி முழக்கம் எழுப்பினர். அதனை தொடர்ந்து 11 மணியளவில் மூலவர் கந்தசுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் அமைந்துள்ள இடம் குறுகலாக இருப்பதால் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, மக்கள் வரிசையில் நின்று கூட்ட நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் கந்தசுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.