
பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள கேவரா உப்பு சுரங்கம் உலகிலேயே மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய உப்பு சுரங்கங்களில் ஒன்றாகும். இது ஹிமாலய மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள சால்ட் ரேஞ்ச் பகுதியில் அமைந்துள்ளது.
வரலாற்றுப் பின்னணி: இந்த சுரங்கம் அலெக்சாண்டர் மகானின் காலம் (கிமு 326) முதலே அறியப்பட்டது என்று கூறப்படுகிறது. அலெக்சாண்டரின் படைகள் ஹிமாலயப் பகுதிகளில் பயணம் செய்தபோது, அவர்களின் குதிரைகள் பாறைகளை நக்குவதை பார்த்துச் சிப்பாய்கள் இங்கு உப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
பிரிட்டிஷ் கால கட்டமைப்பு: 1872-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் பொறியாளர் டாக்டர் ஹென்றி ஹப் (Dr. H. Warth) பாதுகாப்பான முறையில் உப்பு எடுக்கும் நவீன முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் இன்று வரை பயன்படுத்தப்படும் “Room and Pillar” தொழில்நுட்பம் உருவானது.
சுரங்கத்தின் பரப்பளவு மற்றும் தனிச்சிறப்புகள் சுரங்கம் 730 மீட்டர் (2,400 அடி) உயரமுள்ள மலைக்குள் அமைந்துள்ளது. சுமார் 40 கிலோமீட்டர் நீளமுள்ள பாதைகள் கொண்டது, ஆனால் சுற்றுலாப்பயணிகளுக்கு 5 கிமீ மட்டுமே திறந்திருக்கும்.
இங்கு ஊதா, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த பாறை உப்புகள் காணப்படுகின்றன. சுரங்கத்தில் சுமார் 22 கோடி டன் (220 million tons) உப்பு இருப்பதாக மதிப்பிடப் படுகிறது. ஆண்டுக்கு சுமார் 3.87 லட்சம் டன் உப்பு எடுக்கப்படுகிறது.
உலக புகழ் பெற்ற சுற்றுலா தலம்: ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 லட்சம் மக்கள் இந்த சுரங்கத்தை பார்வையிடு கின்றனர். உப்பால் செய்யப்பட்ட பள்ளிவாசல், சிறிய ரயில், மற்றும் அழகான உப்பு விளக்குகள் முக்கிய ஈர்ப்பாக உள்ளன.
மருத்துவ பயன்கள்: சுரங்கத்தில் காணப்படும் ஹலோத்தெரபி (Halotherapy) ஆஸ்துமா மற்றும் மூச்சுக் கோளாறுகளுக்கு உதவுகிறது. இதற்காக ஒரு சிறப்பு சால்ட் சானடோரியம் (Salt Sanatorium) உருவாக்கப் பட்டுள்ளது.
உப்பால் செய்யப்பட்ட புகழ்பெற்ற சிற்பங்கள்:
1.உப்பால் செய்யப்பட்ட பள்ளிவாசல்: இந்த சிற்பம் சிறிய பள்ளிவாசல் வடிவத்தில் உள்ளது. மினாரங்கள், குவியல்கள் அனைத்தும் பாறை உப்பால் செய்யப்பட்டவை. விளக்குகள் ஏற்றும் போது இந்த பள்ளிவாசல் மங்கலான ஆரஞ்சு ஒளி வீசி அழகாக மிளிர்கிறது. இது சுரங்கத்தின் மிக முக்கியமான அடையாளம் ஆகும்.
2.மினி சீன சுவர்: சீனாவின் பிரபலமான சீன சுவர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு உப்பு கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் படங்களை எடுக்கும் புகழ்பெற்ற இடம் இதுவாகும்.
3.உப்பு பாலங்கள் மற்றும் நீர்நிலைகள்: சுரங்கத்தின் அடிப்பகுதியில் உள்ள சிறிய உப்பு பாலங்கள் மற்றும் உப்புக் குளங்கள் மிகவும் அழகாக உள்ளன. நீரில் உப்பு கரைந்ததால் வண்ண விளக்குகள் பிரதிபலிப்பு அற்புதமாக தெரிகிறது.
4.புகழ்பெற்ற ஹால்கள்: அல்லாமா இக்பால் ஹால் பாகிஸ்தானின் தேசியக் கவிஞர் பெயரில் அமைந்துள்ளது. சுவர், தூண்கள் அனைத்தும் இளஞ்சிவப்பு உப்பு கற்கள் கொண்டு செய்யப்பட்டது. ஷஹீன் ஹால் (Shaheen Hall) பாலைவனக் கழுகு (Shaheen) பெயரில் உருவாக்கப்பட்டது. மிகப்பெரிய உப்பு தூண்கள் மற்றும் நீர்த் தடாகங்கள் கொண்டது.
5.பிற சிற்பங்கள்: சுரங்கத்தின் அடையாளமாகக் காணப்படும் உப்பு ரயில் மற்றும் ரயில் பாதை. சிறிய மீன்கள், விலங்குகள் வடிவில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள். உப்புக் குவியல்கள் இயற்கையாக உருவானவை, சிலவற்றை கலைப்போன்று அலங்கரித்துள்ளனர்.
இந்தச் சிற்பங்கள் முழுக்க பாறை உப்பில் செய்யப்பட்டவை. ஒளி போட்டால் வெளிச்சம் ஊடுருவும் தன்மை காரணமாக, சிற்பங்கள் உயிரோட்டமாக தெரிகின்றன. இது கேவரா சுரங்கத்தை உலகின் அழகிய உப்பு அருங்காட்சியகங்களில் ஒன்றாக மாற்றுகிறது.