ஆரஞ்சு பழம் மாதிரியே இருக்கும் இந்தப் பழத்தின் பெயர் என்ன தெரியுமா?

Like Orange
Kinnow Fruit
Published on

சந்தையில் பலவிதமான பழங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. சில பழங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் சில பழங்கள் பார்ப்பதற்கு நாம் அடிக்கடி சாப்பிடும் பழங்கள் மாதிரியே இருக்கும். இவ்வரிசையில் நாம் இன்று காணவிருப்பது ஆரஞ்சு பழத்தைப் போலவே இருக்கும் ஒரு பழத்தை பற்றித் தான்.

வட்ட வடிவத்தில் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கும் ஆரஞ்சு பழங்களை பொதுமக்கள் அடிக்கடி விரும்பி வாங்குவார்கள். இதில் வேடிக்கையான இன்னொரு விஷயம் என்னவென்றால், சிலர் ஆரஞ்சு பழம் என நினைத்து வேறொரு பழத்தை வாங்கிச் செல்கின்றனர். ஆரஞ்சு பழத்தை ஒத்திருக்கும் அந்தப் பழத்தின் பெயர் தான் கின்னோ. உருவத்தில் மட்டுமல்ல சத்துக்களை அளிப்பதிலும் ஆரஞ்சு பழத்திற்கு இணையானது கின்னோ பழம்.

கின்னோ பழம்:

கின்னோ பழம் ஒரு கலப்பின வகையைச் சேர்ந்தது. அதிக மகசூல் கொடுக்கும் மாண்டரின் மற்றும் சிட்ரஸ் நிறைந்த “கிங்” மற்றும் “வில்லோ லீஃப்” ஆகியவற்றின் கலப்பின ரகம் தான் கின்னோ. ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் அதிகளவில் கின்னோ பழம் சாகுபடி செய்யப்படுகிறது. 1935 ஆம் ஆண்டில் HB Frost என்பவர் தான் ஆரஞ்சு பழங்களை விட அதிக ஜூஸியான கின்னோ கலப்பின ரகங்களை அறிமுகப்படுத்தினார்.

ஆரஞ்சு மற்றும் கின்னோ ஆகிய இரண்டு பழங்களும் ஒரே சிட்ரஸ் குடும்பத்தைச் சார்ந்தவை தான். கின்னோ பழத்தை உள்ளடக்கி டார்ஜிலிங் ஆரஞ்சு, நாக்பூர் ஆரஞ்சு, கூர்க் மாண்டரின் மற்றும் காசி மாண்டரின் என பல வகையான பழங்கள் உள்ளன. இந்தப் பழங்கள் அனைத்தும் சுவையில் வேறுபட்டு நின்றாலும், ஆரஞ்சு பழத்தின் அடிப்படைப் பண்புகளைக் கொண்டுள்ளன. மேலும் இப்பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகளவில் நிறைந்துள்ளன.

கின்னோ பழத்தை வெளிநாட்டு ரக ஆரஞ்சுப் பழமாக கருதலாம். சிட்ரஸ் மாக்சிமா மற்றும் சிட்ரஸ் ரெட்டிகுலேட் ஆகியவற்றின் கலப்பினம் தான் ஆரஞ்சு. ஆனால், கின்னோ பழம் சிட்ரஸ் நோபிலிஸ் மற்றும் சிட்ரஸ் டெலிசியோசா ஆகியவற்றின் கலப்பினமாகும். கின்னோ பழம் வெளிர் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இதனுடைய தோல் இறுக்கமாகவும், தடிமனாகவும் இருக்கும். அதே சமயம் ஆரஞ்சு பழத்தின் தோல் இலகுவாகவும், உரிப்பதற்கு எளிதாகவும் இருக்கும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் விதைகளை விடவும், கின்னோவில் அதிக விதைகள் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
டிராகன் பழங்களுக்கு கூடும் மவுசு! விவசாயிகளுக்கு மானியமும் உறுதி!
Like Orange

விலை மற்றும் சுவை:

கின்னோ பழங்கள் அதிகளவில் மகசூலைத் தரும் என்பதால், ஆரஞ்சு பழங்களை விட மலிவான விலைக்குத் தான் விற்கப்படுகின்றன. உருவத்தில் இரண்டு பழங்களும் ஒரே மாதிரி தெரிந்தாலும், கின்னோ பழம் அதிக புளிப்புச் சுவையைக் கொண்டது. ஆனால் ஆரஞ்சு பழங்கள் பெரும்பாலும் இனிப்புச் சுவையுடையவை.

எப்போதாவது சந்தையில் நீங்கள் கின்னோ பழங்களை அடையாளம் கண்டால், ஒருமுறை வாங்கி சுவைத்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com