கொப்பரைத் தேங்காய்க்கு நல்ல விலை: விவசாயிகள் மகிழ்ச்சி!

கொப்பரைத் தேங்காய்க்கு நல்ல விலை: விவசாயிகள் மகிழ்ச்சி!

டந்த சில மாதங்களாக சரிவை கண்டிருந்த தேங்காய் விற்பனை, தற்போது 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உலர் களங்களுக்கும் கொப்பரை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடப்பாண்டில் கோடைக்காலத்திற்குப் பிறகு தேங்காய் விலை பெருமளவில் குறைந்தது. அதேநேரம் கோடை காலத்திற்கு முன்பாகவும் தேங்காய், இளநீர் விலை குறைந்தே காணப்பட்டதால், தென்னை விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். தேங்காய் மற்றும் இளநீருக்கு போதிய விலை கிடைக்காததால் பல தென்னை விவசாயிகள் தேங்காயை மரத்திலிருந்து அறுவடை செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர். மரத்திலிருந்து எடுக்கப்பட்ட தேங்காயையும் இருப்பு வைத்திருந்தனர். அதேசமயம் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் வாடல் நோய் பாதிப்பில் இருந்து தேங்காயை பாதுகாக்க விவசாயிகள் அதிக அளவிலான தொகையையும் செலவிட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். ஒருபுறம் தென்னை விவசாயத்தில் செலவு கூடிக்கொண்டே இருந்தது. மற்றொருபுறம் பறித்த தேங்காயை விற்பனை செய்ய வழியின்றியும் வருமானமின்றியும் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெய் உற்பத்தியை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைக்கும் பலன் கிடைக்கவில்லை. மேலும், தென்னை நார் உற்பத்திக்கு ஆரஞ்சு அறிவிப்பு அரசின் சார்பில் விதிக்கப்பட்டதால், தென்னை நார் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இதனால் தென்னையில் இருந்து மேற்கொள்ளப்படும் மதிப்புகூட்டுப் பொருட்களுடைய உற்பத்தியும் பெருமளவில் பாதிப்புக்குள்ளானது.

இந்த நிலையில், தற்போது உலர் களங்களுக்கு தேவையான தேங்காய் கொள்முதல் அதிகரித்திருக்கிறது. மேலும், அரசு கொள்முதல் நிலையங்கள் மூலமாகவும் கொப்பரை தேங்காய் கொள்முதலை தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதனால் கடந்த வாரம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் மற்றும் இளநீர் தற்போது இருபத்தைந்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கொப்பரைத் தேங்காயும் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் சோகத்தில் இருந்த விவசாயிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தென்னை விவசாயிகள் இப்போது அதிகளவில் தேங்காயை பறிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com