
2500 ஆண்டுகளுக்கு முன்னர் போனீஷியன் போர் ஆரம்பித்தது. அது ஸ்பெயினில் தென்மேற்கில் உள்ள க்வாடல்குவீர் (Guadalquivir) நதி வரை பரவியது. 1200 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விரிகுடாவானது சதுப்பு நிலமாக மாறியது. அப்போது அங்கு ஒரே உப்பு மயமான ஒரு ஏரி உருவானது. அருகிலிருந்த கடல் மண்ணானது அங்கு அவ்வப்பொழுது கொண்டு வந்து தள்ளப்படவே ஒரு நிலப்பகுதியும் உருவானது.
ஸ்பெயினில் உள்ள பெரிய மலைத்தொடரான சியாரா மோரீனா (Sierra Morena)விலிருந்தும் அருகில் உள்ள மலைகளிலிருந்தும் வண்டலும் சகதியும் கீழே வரவே கடற்கரை ஓரமாக ஒரு ஆழமில்லாத நிலப்பகுதி உருவானது. 1980களில் இது 45 மைல் நீளமுள்ளதாக இருந்தது. மணல் குன்றுகள் மட்டும் 8 மைல் நீளத்திற்கு பரவியிருந்தது. இது தான் லஸ் மரீஸ்மாஸ்!
'லஸ் மரீஸ்மாஸ்' என்ற ஸ்பானிய சொல்லுக்கான அர்த்தம் சதுப்பு நிலம் என்பதாகும். இது காலப்போக்கில் அரச வம்சத்தினருக்கு மட்டுமே உரித்தான வேட்டையாடும் பகுதியாக ஆனது. நான்காம் சாஞ்சோ என்ற மன்னன் 1298ம் ஆண்டு இந்தப் பகுதியை ஜிப்ரால்டர் அருகிலிருந்த டாரிஃபா என்ற நகரை மூர்களின் படையெடுப்பிலிருந்து காத்த வீரனான அலொன்ஸோ பெரிஸ் டீ குஸ்மான் என்ற வீரனுக்கு நன்கொடையாகக் கொடுத்தான்.
அதே சமயம் அவனுக்கு டியூக் ஆஃப் மெடினா-சிண்டோனியா என்ற பட்டமும் அளிக்கப்பட்டது. இதே வம்சத்தில் வந்த ஏழாம் டியூக் மன்னன் தன் ராணிக் டோனா ஆனாவுக்காக ஒரு அழகிய மாளிகையை நிர்மாணித்தான். இந்தப் பகுதியில் இருந்த ஒரே தங்குமிடம் இது தான்.
ஆயிரத்திதொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஏராளமான உணவு விடுதிகள் இங்கு தோன்ற ஆரம்பித்தன. அது அற்புதமான இந்த இயற்கைச் சூழலை வெகுவாகப் பாதித்தது. இதனால் கவலை அடைந்த ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானியான டாக்டர் ஜோஸ் வெல்வர்டே ஐரோப்பிய உயிரியல் வல்லுநர்களுடன் இணைந்து உலக விலங்குப் பாதுகாப்பு நிதியின் உதவியுடன் இதைப் பாதுகாப்பு பகுதியாக அறிவித்தார்.
1964ல் 16055 ஏக்கராக இருந்த இது 1969ல் 86450 ஏக்கர் பகுதியைக் கொண்ட பெரும் பகுதியாக ஆக்கப்பட்டு தேசிய பூங்கா என்ற அந்தஸ்தைப் பெற்றது. கோடோ டொனானா தேசியப் பூங்கா என்ற பெயரைக் கொண்ட இந்தப் பூங்காவானது அருகி வரும் ஏராளமான ஐரோப்பிய பறவை இனத்திற்கு ஒரு புகலிடமாக ஆனது.
ஸ்பானிய இம்பீரியல் கழுகு, இங்கு வளர ஆரம்பித்தது. 1977 வாக்கில் 60 ஜோடிகள் இங்கு வாழ்ந்தன. லஸ் மரீஸ்மாஸ் பருவ நிலைக்குத் தகுந்தபடி வேகமாக மாறும் பகுதியாகும். க்வாடல்குவீர் நதியில் எப்போதெல்லாம் சியரா நெவேடாவிலிருந்து நீர் வருகிறதோ அப்போதெல்லாம் அது லஸ் மரீஸ்மாஸை வெள்ளக்காடாக்கும். இந்த நீர்ப்பரப்பு இரண்டு அடி ஆழம் கொண்டதாக இருக்கும். ஆகவே அழகிய அன்னப் பறவைகளுக்கும் இதர பறவைகளுக்கும் இது வாழ்விடமாக ஆனது. கூடவே அவற்றின் இனப்பெருக்கத்திற்கும் உதவியது.
வசந்த காலம் வந்தால் கேட்கவே வேண்டாம். ஆண்-பெண் பறவைகள் ஒன்றுக்கொன்று அறைகூவல் விடுத்து மகிழ்ந்திருக்கும் ஒலியால் இந்த பிரதேசமே குதூகல பிரதேசமாக ஆகிவிடும். 173 விதமான அரிய பறவை இனத்தை இங்கு காண முடியும். கறுப்பு பருந்து உள்ளிட்டவை இங்கு தங்கள் கூடுகளை அமைத்துக் கொள்ளும்.
கோடைகாலத்திலோ சூரிய ஒளி அதிகமாகவே நீர் வறண்டு நிலப் பகுதி தோன்ற ஆரம்பிக்கும். அப்போது மான் இனங்கள் உள்ளிட்டவை ஏராளமாக இங்கு வர அரம்பிக்கும். இதைப் பார்க்க வனப் படகுகள் தமது சேவையைத் தொடங்கும். பயணிகள் கூட்டமும் அதிகமாகும்! மொத்தத்தில் உலகில் பார்ப்பதற்கு மிக மிக அரிதான பறவைகளின் சரணாலயம் இது என்றே சொல்லலாம்!