உலகில் பெண்களை விட அழகான பூக்கள் உண்டா என்ன?கவிஞர்கள் அவ்வப்போது பூக்களையும், பெண்களையும் ஒப்பிடுவதுண்டு. ஏனெனில், பூக்களைப் போலவே பெண்களும் மென்மையானவர்கள் என்பதற்காக அவ்வாறு கூறுவார்கள். பூக்கள் மென்மைக்கும், அழகிற்கும், தனித்துவத்திற்கும், தூய்மைக்கும் பெயர் பெற்றவை. காதலைப் பகிர்ந்துகொள்வதற்குக் கூட பூக்களைக் கொடுத்தே தெரிவிப்பார்கள். பூக்கள் காதலின் சின்னமாகவும் இருக்கிறது. அத்தகைய அழகிய பூக்களைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.
1. தாலியா (Dahlia): உலகின் மிக அழகிய மலர்களில் தாலியாவும் ஒன்றாகும். இந்த மலரின் பெயரை பெண் குழந்தைகளுக்கு சூட்டுவார்கள். இந்த மலர் சீரான வடிவில் இதழ்களைக் கொண்டு வண்ணமயமாக பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். தாலியாவில் 42 வகையான பூக்கள் உள்ளன. இந்த மலரின் பிறப்பிடம் மெக்ஸிகோ என்றாலும். உலகம் முழுவதுமே இது பயிரிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2. செர்ரி பிளாசம் (Cherry blossom): உலகில் உள்ள அழகிய மலர்களில் செர்ரி பிளாசமும் ஒன்றாகும். இதைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. ஏனெனில், தேசிய செர்ரி பிளாசம் திருவிழா இதனை முன்னிறுத்தியே நடைபெறுகிறது. ஜப்பானிய பாரம்பரியத்தில், இந்த செர்ரி பிளாசம் அழகிய வாழ்க்கையின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. செர்ரி பிளாசம் மரங்கள் மலர்வதை அதிர்ஷ்டமாகவும், நல்ல சகுனமாகவும் கருதுகிறார்கள்.
3. பிளீடிங் ஹார்ட் (Bleeding heart): இந்த மலர் பார்ப்பதற்கு இதய வடிவில் இருப்பதால் அனைவரின் கவனத்தையும் இது கவர்ந்திழுக்கிறது. இதில் பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் மலரை காதலின் சின்னமாகக் கருதுகிறார்கள். இம்மலர் சிவப்பு, மஞ்சள், பிங்க், வெள்ளை போன்ற நிறங்களிலும் உள்ளன. இந்த மலர் பெயருக்கு ஏற்றாற்போல இதயத்தில் இருந்து இரத்தம் வழிவது போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
4. பேர்ட் ஆப் பேரடைஸ் (Bird of paradise): தென் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மலர் இதன் பெயருக்கு ஏற்றாற்போலவே தனித்துவம் வாய்ந்தது. இந்த மலர் முழுதாக மலர்ந்ததும் பார்ப்பதற்கு உயிருள்ள ஒரு பறவை பறப்பது போலவே இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த மலர் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றின் சின்னமாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.
5. துலிப் (Tulip): துலிப் மலர்களில் 3000 வகைகள் உள்ளன. அதனால் இதுவே உலகத்தில் அதிகமாகப் பயிரிடப்பட்ட மலராகும். இந்த மலர் கப் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். இந்த மலர் வசந்த காலத்தில் மலரக்கூடியது. இதனுடைய ஆயுள் 5 முதல் 7 நாட்கள் மட்டுமேயாகும்.
6. லேவென்டர் (Lavender): லேவென்டர் அதன் வாசனைக்கும், பர்புல் நிறத்திற்கும் பெயர் பெற்ற மலராகும். இதன் வாசனையும், நிறமும் மன அமைதியைக் கொடுக்கக்கூடியது. இந்த மலர் தூய்மையையும், அமைதியையும் குறிப்பிடுவதாக உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் வாசனை திரவியம் மிகவும் பிரபலமாகும். எலிசபெத் ராணி இந்த மலரிலே செய்யப்பட்ட டீயை ஒற்றை தலைவலிக்காக அருந்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும், கெட்ட சக்திகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும் என்றும் நம்பப்படுகிறது.