லெதர் ஆடைகள், ஷூஸ், பைகள் போன்ற தோல் பொருட்கள் பெரும்பாலும், விலங்குகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இதனால், விலங்குகள் வேட்டையாடப்படுவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. ஆனால், விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்காமலும், சுற்றுச்சூழலுக்கும் உகந்த ஒரு புதிய வழி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அன்னாசி பழங்களின் இலைகளிலிருந்துதான் இந்த புதிய லெதர் தயாரிக்கப்படுகிறது. இதற்கு "Piñatex" என்று பெயரிட்டுள்ளனர். இந்த புதுமையான கண்டுபிடிப்பு, டாக்டர் கார்மென் ஹிஜோசா (Dr. Carmen Hijosa) என்பவரால் உருவாக்கப்பட்டு, அவரது நிறுவனமான Ananas Anam-ஆல் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அன்னாசி இலைகள் விவசாயத்தின் ஒரு துணைப் பொருளாக உள்ளன. ஆனால், இப்போது அதே இலைகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தையை உருவாக்குகின்றன. இதுதான் இதன் மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது.
அன்னாசி இலைகளில் இருந்து லெதர் எப்படி தயாரிக்கப்படுகிறது?
இலைகளைச் சேகரித்தல்: முதலில், அன்னாசி பழங்கள் அறுவடை செய்யப்பட்ட பிறகு, இலைகள் தனியாகச் சேகரிக்கப்படுகின்றன. இந்த இலைகள் விவசாயக் கழிவுகளிலிருந்து வருவதால், இது முற்றிலும் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
நார் பிரித்தெடுத்தல்: சேகரிக்கப்பட்ட இலைகள் ஒரு இயந்திரத்தில் செலுத்தப்பட்டு, அதிலிருந்து நீண்ட செல்லுலோஸ் இழைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தச் செயல்முறைக்கு 'Decortication' என்று பெயர். மீதமுள்ள இலைகள் உரமாக அல்லது உயிரி எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கழுவுதல் மற்றும் உலர்த்துதல்: பிரித்தெடுக்கப்பட்ட இழைகள் சுத்தமாக கழுவப்பட்டு, சூரிய ஒளியில் இயற்கையாக உலர்த்தப்படுகின்றன.
துணியாக மாற்றுதல்: காய்ந்த இழைகள், ஒரு மெல்லிய துணி போல நெய்யப்பட்டு, இந்த Piñatex லேதரின் அடிப்படையாகிறது.
பசை மற்றும் பூச்சு: இந்த துணி மீது, ஒரு சிறப்பு பூச்சு (பொதுவாக மக்காச்சோளத்தால் தயாரிக்கப்பட்ட PLA அல்லது பெட்ரோலியம் இல்லாத உயிரி பிசின்கள்) பூசப்படுகிறது. அது லேதருக்குத் தேவையான உறுதித்தன்மையையும் நீர் எதிர்ப்பையும் தருகிறது.
இறுதி வடிவமைப்பு: கடைசியாக, இந்தத் துணி, பாரம்பரியத் தோல் போல் தோற்றமளிக்கவும், மென்மையாகவும், உறுதியாகவும் இருக்க மெருகூட்டப்பட்டு, வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன.
அன்னாசி தோலின் சிறப்பம்சம்:
நிலைத்தன்மை: அன்னாசி லெதர் தயாரிக்க விவசாய துணைப்ப்பொருள்கள் பயன்படுத்துவதால், தனி நிலமோ, நீரோ தேவையில்லை. மேலும் இது கார்பன்டை ஆக்சைடு வெளியாவதைத் தடுக்கிறது.
பல்லுயிர் நட்பு: இது முழுமையாக மக்கிப் போகும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லது. இது 100% சைவ மற்றும் விலங்குகளைத் துன்புறுத்தாத ஒரு தயாரிப்பு.
விவசாயிகளுக்கு ஆதரவு: அன்னாசி விவசாயிகளுக்கு இலைகளின் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
Hugo Boss போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள், இப்போது Piñatex-ஐப் பயன்படுத்தி ஷூக்கள், கைப்பைகள், கைக்கடிகார பெல்ட்கள் போன்றவற்றைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன. வரும் காலத்தில், அன்னாசி இலைகள் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.