

அட்டைப் பூச்சிகள் வளைவுடலிகள் (Segmented Worms) வகையைச் சேர்ந்த ஒரு உயிரினமாகும். அதாவது, இத்தகைய உயிரினங்களின் உடலானது பல வளையங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். பொதுவாக, இவற்றின் உடலானது 34 மடிப்புகளைக் கொண்ட வளையங்களாக அமைந்திருக்கும். இவற்றை நாம் பூச்சி என்று அழைத்தாலும் இவை புழுக்களின் இனத்தைச் சேர்ந்த ஒரு உயிரினமாகும். அட்டைகள் அன்னெலிடா (Annelida) எனம் தொகுதியில் ஹிருடினியா (Hirudinea) என்னும் வகுப்பைச் சேர்ந்தவை.
அட்டைப் பூச்சிகள் மென்மையான உடலுடையவை. கால்களற்ற இந்த உயிரினங்கள் பெரும்பாலும் நீரில் வாழும். அட்டைகள் பிற உயிரினங்கள் மீது ஒட்டிக்கொண்டு அவற்றின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒரு ஒட்டுண்ணியாகும். இவை தங்களைக் கடந்து செல்லும் உயிரினத்தின் உடல்சூடு அல்லது வியர்வையை உணர்ந்து அவற்றின் மீது ஒட்டிக் கொள்ளும். இவ்வாறு ஒட்டிக் கொள்ளும் அட்டையை பிரித்து எடுப்பது மிகவும் கடினமாகும்.
அட்டைகள் பெரும்பாலும் மழைக்காடுகளில் வாழ்கின்றன. மேலும் இவை நீரினுள் வாழும் ஒரு உயிரினம். தேயிலை, ஏலக்காய் மற்றும் காப்பி தோட்டங்களில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன. சேறு நிறைந்த ஈரமான பகுதிகளில் வாழும் அட்டைப் பூச்சிகள் கருப்பு, சிவப்பு, கரும்பச்சை, பழுப்பு மற்றும் மெரூன் என பல வகையான நிறங்களில் காணப்படுகின்றன. இவை பொதுவாக ஒரு அங்குலம் முதல் இரண்டு அங்குலம் நீளமும் கால் அங்குலம் அகலமும் உடையவையாக இருக்கும்.
அட்டையானது நம் உடலில் ஒட்டிக்கொண்டில் அதை நம்மால் அவ்வளவு சுலபமாக உணர முடியாது. மேலும், அவை தொடர்ந்து முப்பது நிமிடங்கள் வரை நம் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டே இருக்கும். அட்டையின் வாய்ப்பகுதியில் உறிஞ்சுவான் அமைந்துள்ளன. அட்டை நீரில் நன்றாக நீந்தும் இயல்புடையவை. மேலும், இவை நன்றாகச் சுருங்கி விரியும் இயல்பும் உடையவை
அட்டையின் உறிஞ்சுவானின் விளிம்பில் கூர்மையான பற்கள் அமைந்திருக்கும். அட்டையானது இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதற்கு முன்னால் தனது உமிழ்நீரை பிற உயிரினங்களின் இரத்தத்துடன் கலக்கும். அதன் உமிழ்நீரில் உள்ள ஹிருடின் எனும் பொருளானது இரத்தத்தை உறைய விடாமல் செய்யும் இயல்புடையது.
இவை உயிரினங்களின் உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த பின்னர் சிறிய பலூன் போல பெரிதாகி விடும். பிற உயிரினங்களின் உடலில் இருந்து உறிஞ்சும் இரத்தத்தை தனது உணவுப் பைகளில் இவை சேமித்து வைத்துக் கொள்ளுகின்றன. இவ்வாறு ஒருமுறை முழுமையாக இரத்தம் உறிஞ்சும் அட்டையானது அதை வைத்து ஓராண்டு காலம் வரை உயிர் வாழ முடியும்.
நம் உடலின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் அட்டையை நாம் கைகளாலோ அல்லது வேறு எந்த உபகரணத்தினாலோ எக்காரணத்தைக் கொண்டும் நாம் பிடுங்கி எறியக் கூடாது. அட்டையின் மீது சிறிது உப்பைத் தூவினால் சில நிமிடங்களில் நம் உடலிலிருந்து விடுபட்டு விடும். சில சமயங்களில் எரிச்சலின் காரணமாக இறந்தும் போகக் கூடும்.
பெரும்பாலான அட்டைகள் பிற உயிரினங்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து உயிர் வாழ்கின்றன. மேலும் சில அட்டைகள் மண்புழு மற்றும் பூச்சிகளின் லார்வா முதலானவற்றை உண்டு வாழ்கின்றன. அட்டைப் பூச்சிகளை பாம்புகள் மிகவும் விரும்பி உண்ணுகின்றன.