

ஏமாற்றுதல், மோசடி செய்தல் போன்றவை மனிதனின் குணங்கள். விலங்குகளில் நரியை தந்திரம் மிக்கது என்று சொல்வார்கள். பறவை இனத்திலும் பிற விலங்குகளை ஏமாற்றி பிழைக்கும் ஒரு பறவை உண்டு. அது ட்ராங்கோ (Drongo) என அழைக்கப்படும் கரிச்சான் குருவி. அது எவ்வாறு பிற விலங்குகளை ஏமாற்றி வாழ்கிறது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
ட்ராங்கோ-குணம்,தோற்றம்!
ட்ராங்கோ ஒரு சிறிய கருப்பு நிற பறவையாகும். இது தனித்துவமான தோற்றத்திற்கு மட்டுமல்ல அசாதாரணமான புத்திசாலித்தனம் மற்றும் மோசமான ஏமாற்றும் குணத்திற்கும் பெயர் போனது. தான் உயிர் வாழ்வதற்காக மோசடித்தனம் செய்கிறது இந்தப் பறவை. ட்ராங்கோ பறவை 51 விதவிதமான குரலில் மிமிக்ரி செய்யும் இயல்பு கொண்டது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இவற்றுக்கு பளபளப்பான கருப்பு நிறத்தில் இறகுகள் இருக்கும். இவை முட்கரண்டி அல்லது மீனின் வால் போல இருக்கும். இதனுடைய அலகுகள் வலுவானவை. இவற்றின் முதன்மையான உணவு பூச்சிகள், புழுக்கள் ஆகும். இவை தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் காணப்படுகின்றன.
இந்தப் பறவைகள் மிகவும் ஆதிக்க மனப்பான்மை கொண்டவை மற்றும் ஆக்ரோஷமானவை. தங்கள் வடிவமைத்த கூடுகளை தங்களை விட பெரிய பறவையிடமிருந்து கூட தீவிரமாக பாதுகாத்துக் கொள்ளும் இயல்புடையவை. தம் எல்லைக்குள் நுழையும் காகங்கள், பருந்துகள் மற்றும் கழுகுகள் போன்ற பெரிய வேட்டையாடும் பறவைகளை துணிச்சலுடன் துரத்தும் இயல்புடையது
பாலைவனக் கீரிகளின் பயம்!
ஆப்பிரிக்காவில் உள்ள கலகாரி பாலைவனத்தில் மியர் கேட் என்று அழைக்கப்படும் பாலைவனக் கீரிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இவை எப்போதும் தங்கள் கூட்டத்திற்கு எந்த அச்சுறுத்தலும் பிற விலங்குகளால் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கும். உணவு தேடும் போது கூட ஏதாவது ஆபத்து வருகிறதா என அங்கும் இங்கும் விழிப்புடன் பார்த்துக் கொண்டே தான் இருக்கும். சில சமயங்களில் வானில் வட்டமிடும் கழுகு, பருந்து போன்றவை தாழப்பறந்து வந்து சட்டென கீரியை கொத்திச் செல்லும். அவற்றிடம் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளவே கீரிகள் ட்ராங்கோ பறவையின் உதவியை நாடுகின்றன.
எச்சரிக்கை ஒலி!
கீரிகள் தரையில் இருக்கும் பூச்சிகள் மற்றும் புழுக்களை இரை தேடிக் கொண்டிருக்கும் போது வானத்தில் கழுகு போன்ற பெரிய பறவைகள் பறந்து கொண்டு இருந்தால் அதைப் பார்த்து ட்ராங்கோ விதவிதமான சப்தம் எழுப்பி கீரிகளை எச்சரிக்கை செய்கிறது. இதைக் கேட்டு கீரிகள் உடனே தங்கள் மறைவிடத்தில் ஓடி ஒளிந்து கொள்கின்றன.
ட்ராங்கோவின் மோசடி!
ட்ராங்கோப் பறவைக்கு பசிக்கும் போது ஒரு தந்திரம் செய்கிறது. கீரிகள் ஒரு பெரிய பூச்சி அல்லது பல்லியைப் பிடிப்பதை கண்டால் உடனே தன் மோசடி வேலையைத் தொடங்குகிறது. ஆபத்து வந்துவிட்டது என உணர்த்துவது போல எச்சரிக்கைக் குரல் கொடுக்கிறது. அதைக் கேட்டதும், கீரிகள் தாம் பிடித்து வைத்த இரையைக் கீழே போட்டு விட்டு மறைவிடத்திற்கு ஓடுகின்றன இதை பயன்படுத்தி ட்ராங்கோப் பறவை புழுக்களை பூச்சிகளையும் உண்ணுகிறது.
தன்னை நம்பும் கீரிகளை நம்பிக்கை மோசடி செய்து, உழைப்பை சுரண்டி சாப்பிடும் இந்தப் பறவையின் ஏமாற்றும் குணம் மனிதர்களை ஒத்திருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்.