
'சிங்காரா' என்பதற்கு 'எருமையின் தலை' அல்லது 'பறக்கும் வௌவால்' என்று அர்த்தமாம். எருமையின் தலை அல்லது பறக்கும் வௌவால் போன்ற உருவில் காணப்படுவதால், இப்பழத்திற்கு சிங்காரா பழம் என்ற பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இது நீர் கஷ்கொட்டை, பானிபால், வாட்டர் செஸ்நட் (Water chestnut), வாட்டர் கால்ட்ராப் (Water Caltrop), டெவில் பாட் (Devil Pot) , வௌவால் கொட்டை (bat nut) மற்றும் எருமை கொட்டை (buffalo nut) என்று பல பேர்களில் அழைக்கப்படுகிறது. 'Nut' என்று அழைக்கப்பட்டாலும், இது ஒரு நட் கிடையாது. இது ஒரு நீர்வாழ் கிழங்கு வகையாகும்.
ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்டது. இந்தப் பழத்தின் அறிவியல் பெயர் 'Trapa Natans' ஆகும். இது பெரும்பாலும் நன்னீரில் வளரும் தாவரமாகும். சிங்காரா தாவரம், இந்தியாவின் மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஜார்கண்ட் பகுதிகளில் காணப்படுகிறது. பொதுவாக இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் உண்ணப்படும் குளிர்காலப் பழமாக இது விளங்குகிறது. சுமார், 3000 ஆண்டுகளாக இந்தியாவிலும் சீனாவிலும் பயிரிடப்பட்டு வருகிறதாம். இதன் கொட்டைகளை 12 ஆண்டுகள் வரை பாதுகாத்து வைக்க முடியும்.
இதன் வேர்கள், நீரின் அடிமட்டத்தில் உள்ள மண்ணில் வேரூன்றி இருக்கும். தண்டுகள் வளர்ந்து நீரின் மேற்பரப்பு வரைக் காணப்படும். தண்டின் நீளம் நீரின் ஆழத்தைப் பொறுத்து மாறுபடும். இதன் இலைகள் அடியில் இருந்து நீரின் மேற்பரப்பு வரை மிதக்கின்றன. இதில் இயற்கையாகவே பச்சையம் காணப்படுவதில்லை.
இந்த பழம் பெரும்பாலும் வட இந்திய உணவுகள், சீன உணவுகள் மற்றும் தாய்லாந்து உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
பச்சைநிற தோல் கொண்ட சிங்காரா பழங்கள் அப்படியே உண்ணப்படுகின்றன. முற்றிய பழங்கள் வறுத்தோ அல்லது வேகவைத்தோ உணவாக உண்ணப்படுகின்றன. கஞ்சி, பக்கோடா, பரோட்டா, பூரி, கறி, கீர், ஹல்வா, சாட், சீலா போன்ற பல வகைகளில் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக வட இந்தியாவில் இதன் காய்ந்த கொட்டைகள் மாவாக அரைக்கப்பட்டு கோதுமை மாவுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.
இதில், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், தாமிரம், இரும்பு, அயோடின், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின்கள் மற்றும் பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.
மேலும், இந்தியா மற்றும் சீனாவில் இது நீண்ட காலமாக உணவு மற்றும் மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது. பல நாள்பட்ட நோய்கள் மற்றும் நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக கருதப்படுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை கணிசமாகக் குறைக்கும் என்று ஆய்வு கூறுகிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளதால் சூப்பர் ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது.