நதிகளை இணைக்க வேண்டும், நதிகளின் நீர் கடலில் விழுந்து வீணாக அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் ஆளுக்காள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கை ரீதியான உண்மை வேறு. புவியியல் வல்லுநர்கள் நதிகளைப் பற்றியும் கடல்களைப் பற்றியும் இப்போதுதான் மெல்ல மெல்ல புரிந்துகொண்டு வருகிறார்கள்.
நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவதே தவறு என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். சமீபத்தில் நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீனாவின் மிகப்பெரிய கோர்ஜெஸ் அணை பூமியின் சுழற்சி வேகத்தையே குறைத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பேற்பட்ட பிரம்மாண்ட அணைகளால், பூகம்பம் வரவும் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
நதிகளின் போக்கில் தடைகளையோ மாற்றமோ நாம் செய்வதால், அவை வெகு சீக்கிரம் வற்றிப்போய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். நதிநீர் கடலுக்கு போக வேண்டும் என்பது இயற்கை விதி. நதிநீர் கடலைத் தங்குதடை இன்றி அடைந்தால்தான் நதிக்குப் பூரணத்துவம் உண்டாகும். இது பலருக்கு நம்ப முடியாததாக இருக்கலாம். ஆனால் இது உண்மை.
நதிகளின் நீர் கடலில் கலந்தால் தான் கடல் நீரின் வெப்பநிலை சீராக இருக்கும். ஆழ்கடல் நீரோட்டங்கள் பாதிக்கபடாமல் மழை மேகங்கள் உருவாக ஏதுவாக அமையும். ஆகவே கடலில் விழும் நதி நீர் வீண் என்ற எண்ணம் மிகவும் தவறானது. நதிகளையெல்லாம் மடக்கி திசை திருப்பி கடலில் சேர விடாமல் செய்தால் கடலின் உப்புத்தன்மை அதிகரித்து கடல் வாழ் உயிரினங்களுக்கு கேடும், மழை மேகம் உருவாகாத தன்மையும் ஏற்பட்டுவிடும்.
இயற்கையோடு நாம் ஒத்து வாழ வேண்டும். இயற்கையை நமக்கு தகுந்தாற்போல் மாற்றியமைக்க முயற்சித்தால் 'உள்ளதும் போச்சாம் நொள்ள கண்ணா' என்றாகிவிடும். பலரும் இப்போது நதிநீர் இணைப்பு போன்ற மிக பெரிய விஷயங்களில் வாய்க்கு வந்ததை உளறி சாதாரண மக்களை குழப்பியும் உசுப்பியும் விடுகிறார்கள். ஆந்திராவில் கிருஷ்ணா நதியின் குறுக்கே அணை மேல் அணையாக கட்டி பாவம் அதை கடலை அடையவிடாமல் செய்து விட்டார்கள். இதன் விளைவு போக போகத்தான் தெரியப்போகிறது