விலங்குகளின் மென்மையான ரோமங்களிலிருந்து ஃபர் வகை ஆடைகளும் கைப்பைகள், காலணிகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இதற்காக பல்வேறு வகையான விலங்குகள் கொல்லப்படுகின்றன. ஃபர் ஆடைகளையும் பொருட்களையும் தவிர்ப்பதன் மூலம் விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்: ஃபர் ஆடைகளையும் பொருட்களையும் தயாரிக்க பல்வேறு வகையான விலங்குகளின் உயிர்கள் பறிக்கப்படுகிறது. நரிகள், சின்சில்லாக்கள், முயல்கள், ரக்கூன்கள், கொயோட்டுகள் போன்ற விலங்குகளில் இருந்து ரோமங்கள் பெறப்படுகின்றன. இதற்காகவே அவை பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த விலங்குகள் கொல்லப்பட்ட பிறகு அதன் ரோமங்கள் அகற்றப்படும். சில சமயங்களில் விலங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் தோல்களை உரிப்பதும் நடக்கிறது. இதுபோன்ற செயல்கள் அவற்றுக்கு தீவிர துன்பத்தை ஏற்படுத்துகிறது. பிறகு தோல் சிதைந்து போவதைத் தடுக்க இரசாயனங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தோல் பதனிடுதல்: ரோமங்களை விலங்குகளின் உடலில் இருந்து அகற்றிய பிறகு ஆடை அணிவதற்கு ஏற்றவாறு தோல் பதனிடப்படுகிறது. தோல் பதனிடுதல் என்பது பல்வேறு முறைகளை உள்ளடக்கியது. இதில் பெரும்பாலும் நச்சு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர்கள் என இரு சாராரையும் பாதிக்கிறது.
ஃபர் ஆடைகளை தவிர்ப்பதால் விலங்குகளுக்கு ஏற்படும் நன்மைகள்: ஃபர் ஆடைகளை தவிர்ப்பதன் மூலம் மனிதாபிமானமற்ற முறையில் விலங்குகளைக் கொல்வது, சிறைப்பிடிக்கப்படுவது போன்றவை தடுக்கப்படலாம். அரிய வகை உயிரினங்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்.
ரோமங்களுக்காக வளர்க்கப்படும் விலங்குகள் அவை பராமரிக்கப்படும் மோசமான நிலைமைகளால் குறிப்பிடத்தக்க துன்பங்களை அனுபவிக்கின்றன. இதற்கான மாற்று வழிகளை தேர்ந்தெடுக்கும்போது உயிரினங்களின் துன்பத்தை குறைக்க உதவுகிறது. ஃபர் ஆடைகளை தவிர்ப்பதன் மூலம் விலங்குகளின் உயிர்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், விலங்குகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்துகிறது. அனைத்து விலங்குகளையும் மனிதாபிமானத்துடன் நடத்துவதை ஊக்குவிக்கிறது.
சுற்றுச்சூழல் நன்மைகள்: கார்பன் தடம் கொண்ட ஆடைகளைத் தயாரிக்கும் பணியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பல செயல்முறைகள் அடங்கி உள்ளன. இது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு பங்களிக்கிறது. ரோமத்தை தவிர்ப்பதன் மூலம் ஃபேஷன் துறையுடன் தொடர்புடைய ஒட்டுமொத்த கார்பன் தடத்தை குறைக்க நுகர்வோர் உதவலாம்.
பல்லுயிர்ப் பாதுகாப்பு: ஃபர் தொழில் மிருகங்களின் வாழ்விட அழிவிற்கு வழி வகுக்கிறது. மேலும், பல்லுயிர் இழப்பிற்கும் காரணமாக அமைகிறது. ஃபர் ஆடைகளைத் தவிர்த்தால் விலங்குகளின் வாழ்விட அழிவும், அவற்றின் உயிரும் பாதுகாக்கப்படும். மாற்று உடைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் பல்லுயிர்களைப் பராமரிப்பதற்கும் உதவுகிறது. ஃபர் தொழில் விலங்குகளின் துணைப்பொருட்கள் உட்பட குறிப்பிடத்தக்கக் கழிவுகளை உருவாக்குகின்றது. ஃபர் ஆடைகளை தவிர்ப்பதன் மூலம் உற்பத்தி செயல்முறைகளுடன் தொடர்புடைய ஒட்டுமொத்த கழிவுகளைக் குறைக்க நுகர்வோரால் முடியும்.
இயற்கையை பாதுகாத்தல்: ஃபர் ஆடைகளைத் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த ஃபேஷன் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியலாம். இது இயற்கை வளங்களை சேதப்படுத்துவதைக் குறைக்க உதவும். ஃபர் தொழில் மனிதர்களின் வாழ்விடங்களையும் சீரழித்து வாழ்க்கைக்கு தேவையான விவசாய நடைமுறைகளையும் சீர்குலைக்கிறது. ஃபர் தேவையை தவிர்ப்பது அல்லது குறைப்பதன் மூலம் இயற்கை வாழ்விடங்களை சுரண்டுவது மற்றும் அழிவிலிருந்து பாதுகாக்க முடியும்.
எனவே, சுற்றுச்சூழலுக்கு பலவிதமான சீர்கேட்டை உருவாக்கும் மற்றும் விலங்குகளின் வாழ்வியல் ஆதாரங்களை அழிக்கும் ஃபர் ஆடைகளையும் பொருட்களையும் தவிர்ப்பதன் மூலம் இயற்கையையும் விலங்குகளையும் காக்க முடியும்.