குளிர் காலங்களில் நெஞ்சுச் சளி, இருமல், தொண்டை அழற்சி போன்ற உடல் நலக் குறைபாடுகள் வருவது சகஜம். இவற்றை அவ்வப்போது குணமாக்க முயற்சிக்காமல் அப்படியே விட்டால் காய்ச்சலாக மாறி சிக்கலை உண்டு பண்ணக்கூடும். இதற்கு இயற்கை முறையில் தயாரிக்கக்கூடிய 9 வகை மூலிகை டீ அருந்துவதால் நல்ல குணம் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பெப்பர்மென்ட் டீ: இதிலுள்ள மென்தால் என்ற பொருள் மூச்சுப் பாதைக்கு இதமளித்து சுவாசத்தை சுலபமாக்கும். இதிலுள்ள சில இரசாயனப் பொருள்கள் மூச்சுப் பாதையில் ப்ரோன்கிட்டிஸ் (Bronchitis) மற்றும் ஆஸ்துமா நோய்கள் வருவதற்கான அறிகுறிகளை நீக்கும். இது ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணமும் கொண்டது.
2. இஞ்சி டீ: இதிலுள்ள ஜின்ஜெரால் மற்றும் ஷோகால் என்னும் பயோ ஆக்டிவ் கூட்டுப் பொருள்கள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் கொண்டவை. இவை மூச்சுப் பாதையில் உள்ள வீக்கங்களைக் குறைத்து சுலபமாக மூச்சு விட உதவி புரிபவை.
3. தைம் (Thyme) டீ: தைமில் உள்ள தைமோல் என்ற கூட்டுப் பொருள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் உடையது. இது நெஞ்சுச் சளியைக் கரையச் செய்யவும் இருமலைக் குறைக்கவும் உதவும். தைம் டீ நுரையீரல் ஆரோக்கியம் காக்க சிறந்த முறையில் உதவும்.
4. யூக்கலிப்டஸ் டீ: யூக்கலிப்டஸ் இலைகளில் உள்ள சினோல் (Cineole) என்ற இயற்கையான பொருள் சளியைக் குறைக்கவும் மூச்சுப் பாதையை அடைப்பின்றி சீராக்கவும் உதவும். இதனால் சிரமமின்றி மூச்சு விட ஏதுவாகும். ஆராய்ச்சிகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.
5. முல்லீன் (Mullein) டீ: முல்லீன் ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகைத் தாவரம். நீண்ட காலமாகவே, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த இந்த மூலிகைச் செடி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இலைகள் மற்றும் பூக்களில் உள்ள அதிகளவு சப்போனின்ஸ் (Saponins) என்ற பொருள் சளியை வெளியேற்ற உதவுகிறது. முல்லீன் இயற்கையாக சிறந்த முறையில் மார்புச் சளி வெளியேறவும் ஆஸ்துமாவை குணப்படுத்தவும் உதவும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
6. மஞ்சள் டீ: மஞ்சள் செடியின் வேர் அல்லது கிழங்கின் பவுடரை உபயோகித்து இந்த டீ தயாரிக்கப்படுகிறது. இதிலுள்ள குர்க்குமின் என்ற பொருள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமுடையது. இது மூச்சுப் பாதையில் உள்ள வீக்கங்களைக் குறைக்க வல்லது. மேலும், COPD என்னும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ள நோயாளிகளின் நுரையீரல் செயல் திறனை மேம்படுத்த உதவும்.
7. லைக்கோரைஸ் ரூட் டீ: இந்த மூலிகையிலும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி வைரல் குணங்கள் உள்ளன. இது மூச்சுப் பாதையில் உள்ள எரிச்சலூட்டும் திசுக்களை அமைதிப்படுத்தவும் நுரையீரல் ஆரோக்கியதை மேம்படுத்தவும் உதவும்.
8. க்ரீன் டீ: இதில் உள்ள கேடெசின்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் மிக்க சக்தி வாய்ந்த ஒன்று. இது நுரையீரலில் உள்ள வீக்கங்களை குறைக்க வல்லது. க்ரீன் டீயை தொடர்ந்து குடித்து வருபவர்களின் நுரையீரல் சிறந்த முறையில் செயல்படும்; மூச்சுப் பாதையின் பாகங்களில் நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயம் குறையும்.
9. துளசி டீ: ஆயுர்வேதத்தில் துளசி டீயை 'அனைத்து நோய்களையும் தீர்க்கவல்ல அமுதம்' என்கின்றனர். அடாப்ட்டோஜெனிக் குணமுடைய துளசி அனைத்து வகையான சுவாசப் பிரச்னைகளையும் தீர்க்க உதவும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நுரையீரலின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் செய்யும்.
இந்த 9 வகை டீயில் ஒன்றை தினமும் அருந்தி நுரையீரல் ஆரோக்கியம் காப்போம்.