
வால்வரின் என்பது ஒரு சிறிய கரடி போல தோற்றமளிக்கும் விலங்கு. இது ஆர்க்டிக் மற்றும் துணை ஆர்க்டிக் பகுதிகளில் குளிர், பனி சூழல்களில் வாழும். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் இதனுடைய உடல் வலிமை, தந்திரம் மற்றும் அச்சமற்ற இயல்புக்காக இது குறிப்பிடத்தக்க விலங்காகக் கருதப்படுகிறது. இது உருவத்தில் தன்னை விட இரண்டு மடங்கு பெரிய விலங்குகளை எதிர்த்துப் போராடும் திறனுடையது.
தோற்றம்: ஆண் வால்வரின் 11 முதல் 18 கிலோ எடையும், பெண் வால்வரின் ஆறிலிருந்து 12 கிலோ எடை வரையும் இருக்கும். இதனுடைய உயரம் சுமார் ஒன்றரை அடியாகவும், 33 முதல் 44 அங்குள்ள நீளமும் கொண்டவையாக இருக்கும். இதனுடைய வால் புதர் போன்று இருக்கும். குட்டையான கால்கள், குட்டையான காதுகள் மற்றும் அகன்ற தட்டையான தலையுடன் தோற்றமளிக்கும்.
இதனுடைய பாதங்களில் ஐந்து விரல்களும், வலுவான வளைந்த நகங்களும் இருக்கும். இவை மரங்களில் ஏறுவதற்கும் அடர்ந்த பனியில் நடப்பதற்கும் உதவுகின்றன. இவை மனிதர்கள் மற்றும் கரடிகளைப் போலவே உள்ளங்கால்களை தரையில் பதித்து நடக்கின்றன. இதனுடைய ரோமம் அதிக அடர்த்தியாகவும் நீர் எதிர்ப்புத் திறனும் கொண்டதால், உறை பனியைத் தாங்கும் வலிமையைத் தருகிறது.
மாமிச உண்ணிகள்: காகத்தைப் போலவே இவை அழுகிய விலங்குகளின் சடலங்களை உண்கின்றன. குளிர் காலத்தில் அழுகிய மான்கள் மற்றும் பிற பெரிய விலங்குகளின் சடலங்களையும், ஓநாய்கள் மற்றும் பிற பெரிய மிருகங்கள் வேட்டையாடிக் கொன்று போட்டிருக்கும் பிற விலங்குகளின் சடலங்களையும் தின்று அந்த இடத்தை துப்புரவு செய்கின்றன. நார்வேயில் இது மலைப் பூனை என்று அழைக்கப்படுகிறது. இது அதிகமாக பெருந்தீனி உண்ணும் விலங்கு என்பதைக் குறிக்கிறது.
முள்ளம் பன்றிகள், முயல்கள், எலிகள், அணில்கள், ஸ்னோஷூ, பறவைகள், வெள்ளை வால் மான், கழுதை மான், செம்மறி ஆடுகள், காட்டெருமை, நரிகள், கடமான் போன்றவற்றை தாக்கிக் கொல்லும் இயல்புடையது. எறும்புகளைப் போலவே தன்னுடைய உணவை குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் உபயோகப்படுத்திக் கொள்வதற்காக சேமித்து வைக்கின்றன.
வாழ்விடம்: இவை வடக்கு கனடா, அலாஸ்கா, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து, மேற்கு ரஷ்யா மற்றும் சைபீரியா போன்ற நாடுகளில் வசிக்கின்றன. இவை கடுமையான பனி படர்ந்த சூழ்நிலைகளில் கூட நன்றாகப் பொருந்தி வாழக்கூடிய தன்மை உடையவை. பெரும்பாலும் இவை ஆழமான பனியில் புதைந்து கிடக்கின்றன. இவை நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டவை. ஒரு நாளைக்கு 40 மைல்கள் தூரம் வரை நடக்கும். அவற்றின் பெரிய ஸ்னோஷூ போன்ற பாதங்கள் பனியில் நடக்க ஏற்றவை.
பனிக்குகை: இவை குளிர் உணவு பிரியர்கள் என்று அழைக்கப்படுகின்றன. குளிரை எதிர்க்கும் தன்மை உள்ள அடர்த்தியான எண்ணெய் பசை உள்ள கோட் போன்ற ரோமம் இவற்றின் உடலை மூடி இருக்கும். ஆழமான பனியில் குகை போலத் தோண்டி அவற்றில் தங்கள் குட்டிகளை பெற்றெடுக்கின்றன. பத்து வாரங்கள் வரை பாலூட்டி பாதுகாத்து பின்பு அவற்றை வேட்டையாட வெளியே அனுப்பும். இவற்றின் உடலில் இருக்கும் கஸ்தூரி சுரப்பிகளால் இவற்றுக்கு கூர்மையான வாசனை உணர்வு உண்டு. உறைந்த பனிக்கு அடியில் புதைந்திருக்கும் இரையை கண்டறிந்து கொல்கின்றன.