Say 'No' To Plastic
Say 'No' To Plastic

மஞ்சள் பைக்கு மாறுவோம்... Let Us Say 'No' To Plastic!

Published on

இந்தப் புவிப்பந்து சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளில் தலையாயது பிளாஸ்டிக் பயன்பாடு ஆகும். இந்த பிரச்னையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அலசுகிறது இப்பதிவு.

30 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டில் இருந்து கடைகளுக்கு செல்லும் போது கைகளில் துணிப்பை அல்லது பாத்திரம் கொண்டு சென்று வந்தோம். கால மாற்றத்தின் காரணமாக இப்போது வீட்டிலிருந்து கை வீசியபடி வெளியே சென்று கடையில் இருந்து பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வாங்கி வருகிறோம். அதன் பின்னர் அந்த பிளாஸ்டிக் கவர்கள் குப்பைகளை தாங்கியபடி சாக்கடை கால்வாயில் வந்து சேர்கின்றன. இன்னும் சில ரோட்டோரமாக வீசி எறியப்படுகின்றன.

கால்வாயில் எறியப்படும் பிளாஸ்டிக் கவர்களால் நீர் செல்லும் பாதை அடைக்கப்பட்டு, மழைக்காலங்களில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் போகும் அவலம் ஏற்படுகிறது. ஆனால், நாமோ, உடனடியாக உள்ளாட்சி அமைப்பை குறை கூற தொடங்குவோம்.

அதேபோல ரோட்டோரமாக வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மாடுகளுக்கு உணவாகின்றன. அவைகளுக்கு அதுவே எமனாகின்றன. இப்படி நம் சந்தோஷத்துக்காக பிற உயிர்களை பழி வாங்குவது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.

அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அவ்வப்போது மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு நடத்தி டன் கணக்கில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இப்படி தோண்ட தோண்ட பூதம் போல் பிளாஸ்டிக் பொருட்கள் வந்து கொண்டிருப்பது எங்கிருந்து? யாரால்? என்பது விடை தேட முடியாத கேள்வியாகவே உள்ளது.

இது குறித்து உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது,

"பிளாஸ்டிக் கேரி பேக்குகள் தயார் செய்யும் நிறுவனங்கள் நம் மாநிலத்தில் இல்லை. அண்டை மாநிலத்தில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் நம் மாநிலத்திற்கு கடத்தி வரப்படுகின்றன. எங்களால் பறிமுதல் செய்யப்படுவது கொசுறு மட்டுமே. அதை நீங்களே பார்க்கலாம். நாங்கள் எவ்வளவு தான் பறிமுதல் செய்தாலும் நீங்கள் ஒரு சாதாரண பூ வாங்கும் போது அது கேரிபேக்கில் தான் போட்டு தரப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் நாங்களும் எவ்வளவு தான் பறிமுதல் செய்வது. இதற்கு ஒரே ஒரு தீர்வு, நாடு முழுவதும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் தயார் செய்யும் நிறுவனங்களை மூட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே கேரி பேக்குகள் உலா வருவது தடுத்து நிறுத்தப்படும்"

என புலம்பினர்.

இதையும் படியுங்கள்:
சுற்றுச்சூழலின் முதுகெலும்பாக செயல்படும் பூஞ்சைகள்!
Say 'No' To Plastic

இந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மக்குவதற்கு நீண்ட நெடுங்காலமாகும். அதனால் இவை நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர விடாமல் தடுக்கின்றன. இவற்றை சிலர் தீயிட்டு கொளுத்துகின்றனர். இது இமாலய தவறாகும். ஏனெனில் பிளாஸ்டிக்கில் இருந்து வெளியாகும் வாயு கடும் நச்சுத்தன்மை கொண்டதாகும். அவற்றை நாம் உட்பட உயிரினங்கள் யாவும் சுவாசித்தால் பல்வேறு நோய்கள் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிளாஸ்டிக் கழிவுகள் பூமியோடு நின்று விடுவதில்லை. நீரோட்டத்தின் வழியே செல்லும் போது கடலிலும் சென்று கலக்கிறது. இங்குள்ள மீன்கள் உட்பட கடல் வாழ் உயிரினங்கள் அதை உணவாக எடுத்துக் கொள்கின்றன. இதனால் கடல் பகுதியிலும் பிளாஸ்டிக் தன் கொட்டத்தை காட்டி வருகிறது.

பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வருவது நம் கைகளில் தான் உள்ளது. கடைகளுக்கு செல்லும் போது கையில் பையுடன் சென்றால் கேரி பேக் வாங்க தேவையில்லை. நாம் வாங்காமல் விட்டால் கடைக்காரர்களும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை வாங்குவதை தவிர்ப்பர். இப்படியாக நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக மாறினால், பிளாஸ்டிக் பயன்பாடு அறவே ஒழிக்கப்பட்டு விடும்.

அதனால் இதை வேறு யாரோ தொடங்குவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், முதன் முதல் நாம் இந்த ஒரு நல்ல பணியை தொடங்குவோம். நான்கு பேருக்கு இது குறித்து விளக்கமாக கூறுவோம். மஞ்சள் பையுடன் கடைகளுக்குச் செல்ல நாம் தயார் ஆவோம். பிளாஸ்டிக்கை ஒழிப்போம்.

logo
Kalki Online
kalkionline.com