
‘கிணற்றுப்பாசான்’ எனப்படும் செடி, வெட்டுக்காயப் பூண்டு, தண்ணீர் பூண்டு, மூக்குத்திப் பூண்டு, தாத்தா செடி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதற்கு Tridax procumbens எனவும் பெயர். இந்தச் செடி பெரும்பாலும் களைச் செடியாக காணப்பட்டாலும் இதன் மருத்துவப் பயன்களால் விவசாயிகள், மற்றும் விவசாயத்துக்கு பெரிதும் பயன்படுகிறது.
கிணற்றடிப் பூண்டு எல்லாவிதமான வளமான மண்ணிலும் வளரும். இதன் தாயகம் மத்திய அமெரிக்கா. கொடி போன்று நீண்ட இச்செடி சொரசொரப்பான பச்சை இலைகளையும், மஞ்சள் நிற பூக்களையும் கொண்டிருக்கும். ஈரமான இடங்களில் தானே வளரும் தன்மை கொண்ட இந்தச் செடி, தனது மகரந்த சேர்க்கையால் விதைகளை உண்டாக்கும்.
ஒரு செடியில் 1500 விதைகள் இருக்கும். அவை காற்றில் பரவி ஒட்டிக் கொள்ளும். இந்தச் செடி சாலை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும், தோட்டங்கள், புல்வெளிகள் என எங்கும் பரவியுள்ளது. இது லேசான பஞ்சு போன்ற விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.
இது சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் இந்தத் தாவரம் ஒரு மூலிகையாகவும் செயல்படுகிறது. நீரோட்டம் உள்ள செம்மண் நிலத்தில் தானாகவே வளரும் இந்தச் செடி. இதன் இலைப்பகுதி சற்று சொரசொரப்பாக இருக்கும். இலையை பறித்து கையால் கசக்கினால் அதிகப்படியான பச்சை நிற நீர் வரும். இதை அடிபட்ட புண் மீது அப்படியே தடவினால் காயத்திலிருந்து வெளி வரும் ரத்தம் குறைந்து விரைவில் புண் ஆறிவிடும்.
கிணற்றுப்பாசான் இலைச் சாறும் குப்பைமேனி இலைச் சாறும் கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும். வயிற்றுக் கோளாறுகளும் தீர்வு தரும். இச்செடியின் இலையை அரைத்து அதன் சாறை கொப்புளங்கள் மற்றும் தீக்காயங்கள் மீதும் தடவலாம். இந்தச் செடியின் இலையை பறிக்கும் முன்பு கையை சுத்தமாக கழுவ வேண்டும். விவசாயம் செய்பவர்கள் மற்றும் கல்லுடைப்பவர்கள் இன்றும் இந்தச் செடியை அருமருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
பிற பயன்கள்: சிலர் இந்தச் செடியை இயற்கை விவசாய முறைகளில் பயன்படுத்துகிறார்கள். மேலும், இச்செடி இலைகள் சேதமடைந்த நீரை உறிஞ்சி சுற்றுப்புறசூழல் காற்றை தூய்மைப்படுத்துவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.