இயற்கையின் தூக்கத்தைக் கெடுக்கும் 'ஒளி மாசுபாடு': ஒரு மெளன அபாயம்!

மின்சார விளக்குகளின் அதிகப்படியான ஒளி, இரவின் இயற்கை இருட்டை அழித்து பறவைகள், பூச்சிகள், சாண வண்டுகள் வரை திசைமாறி அழிவின் விளிம்பில் தள்ளப்படுகின்றன.
light-pollution
light-pollution
Updated on

மின்சாரம் கண்டுபிடித்தது மனிதகுலத்தின் ஆகச்சிறந்த சாதனைதான். ஆனால், இப்போது பகல் எது, இரவு எது என்றே தெரியாத அளவுக்கு ஊரெங்கும் கண்ணைப் பறிக்கும் கலர் கலரான விளக்குகளைப் பயன்படுத்தி வருகிறோம். இதனால், இயற்கையான இருட்டு காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதைத்தான் அறிவியல் உலகத்தில் 'ஒளி மாசுபாடு' (Light Pollution) என்று சொல்கிறார்கள்.

இரவு நேரத்தில் தேவையில்லாமல் எரியும் இந்த விளக்குகளைக் குறைத்து, இயற்கையான இருட்டைக்காக்க வேண்டும் என்று உலக நாடுகள் முழுக்க நடக்கும் ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரம்தான் 'டார்க் ஸ்கை இயக்கம்'  இரவு நேரத்து இருள் என்பது மனிதர்கள் தூங்குவதற்கு மட்டும் அல்ல, இந்த பூமியில் இருக்கும் எல்லா ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு அது மிகவும் முக்கியம்.

பறவைகளின் திசைமாறும் உலகம்

நமது ஊர்களில் இருக்கும் குருவிகள் முதல் வெளிநாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து வரும் 'புலம்பெயர் பறவைகள்' வரை எல்லாமே இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது, வானத்தில் இருக்கும் நிலவு, நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் கூட்டங்களை வைத்துத்தான் தங்களுடைய திசையைக் கண்டுபிடிக்கின்றன.

ஆனால், நமது நகரங்களில் இருக்கும் பெரிய விளக்குகளின் வெளிச்சம் வானத்தை நோக்கிப் பாயும்போது, பறவைகளின் கண்களைக் கூசச் செய்துவிடுகிறது. இதனால் திசை தெரியாமல் குழம்பிப்போய், பெரிய கண்ணாடிக் கட்டிடங்களிலும் மின் கோபுரங்களிலும் மோதி லட்சக்கணக்கான பறவைகள் இறந்துபோகின்றன.

செயற்கை வெளிச்சத்தால் பருவகால மாற்றங்களை பறவைகளால் சரியாகக் கணிக்க முடிவதில்லை. இதனால், முட்டை வைக்க வேண்டிய நேரத்தையும், வேறு இடங்களுக்குப் பறக்க வேண்டிய காலத்தையும் அவை தவறவிட்டுவிடுகின்றன.

பூச்சிகளும் வண்டுகளும் அழியும் சோகம்

"விளக்கைத் தேடி ஓடும் விட்டில் பூச்சி" போல, அந்துப்பூச்சிகளும் வண்டுகளும் இந்த அதிகத் திறன்கொண்ட எல்.ஐ.டி விளக்குகளைப் பார்த்ததும், நிலா வெளிச்சம் என்று நினைத்து அதை நோக்கி ஓடிவருகின்றன. விளக்கைச் சுற்றிச் சுற்றி வரும் பூச்சிகள், இறுதியில் களைத்துப் போய் கீழே விழுந்து மடிகின்றன. அல்லது அங்கேயே காத்திருக்கும் பல்லி, தவளைகளுக்கு சுலபமாக இறையாகிவிடுகின்றன. இதனால் பூச்சிகளின் இனம் அழிகிறது.

மின்மினிப் பூச்சிகளின் துயரம்: மின்மினிப் பூச்சிகள் தங்களுடைய உடலில் இருக்கும் மெல்லிய வெளிச்சத்தை வைத்துத்தான் தங்களுடைய இணையைத் தேடிக்கண்டுபிடிக்கும். ஆனால் தெருவிளக்கு வெளிச்சத்திற்கு முன்னால் அவற்றின் வெளிச்சம் தெரியாமல் போய்விடுவதால், அவைகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் மொத்தமாக அழிந்துவருகின்றன.

இதையும் படியுங்கள்:
மண் வளத்தை பெருக்கும் பிள்ளைப்பூச்சிகளின் ஆச்சரியமான மறுபக்கம்!
light-pollution

சாண வண்டுகளின் நிலை: சாண வண்டுகள் தங்களுடைய உணவை (சாண உருண்டைகளை) நேர்க்கோட்டில் உருட்டி எடுத்துச் செல்ல, ஆகாயத்தில் இருக்கும் பால்வெளி மண்டலத்தின் மெல்லிய வெளிச்சத்தையே திசைகாட்டியாகப் பயன்படுத்துகின்றன. ஆனால், நகரத்து விளக்கு வெளிச்சத்தால் அவற்றின் திசை மாறி, உணவைச் சேர்க்க முடியாமல் தவிக்கின்றன.

விவசாயப் பாதிப்பு: பூச்சிகள் அழிந்தால் செடிகொடிகளில் 'மகரந்தச் சேர்க்கை' நடக்காது. இதனால் விவசாயமே முற்றிலும் பாதிக்கப்படும். ஏனெனில், பல பூச்சிகள் இரவு நேரத்தில் பறவைகளுக்கு உணவாக இருக்கின்றன. பூச்சிகள் இல்லையென்றால் இயற்கை உணவுச் சங்கிலியே உடைந்துவிடும்.

சின்னச் சின்ன மாற்றங்கள்

வீட்டுக்கு வெளியேயும், தெருவிலும் இருக்கும் விளக்குகள் வானத்தைப் பார்த்து எரியாமல், தரைப்பகுதியை மட்டும் பார்த்து எரியும்படி மேல் மூடி போட வேண்டும். அறையை விட்டு வெளியே வரும்போது விளக்குகளை அணைக்க வேண்டும். வெளியில் ஆள் நடமாட்டம் இருந்தால் மட்டும் எரியும் படி 'மோஷன் சென்சார்' விளக்குகளைப் பொருத்தலாம். கண்ணைக் குத்தும் வெள்ளை அல்லது நீல நிற விளக்குகளுக்குப் பதிலாக, கண்ணுக்கும் இயற்கைக்கும் பாதிப்பு இல்லாத இதமான மஞ்சள் நிற  விளக்குகளைப் பயன்படுத்தலாம்.

கோடிக்கணக்கான பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் வாழ்வாதாரமாக இருக்கும் இயற்கையான இருட்டை நாம் காப்பாற்றினால்தான், நமது அடுத்த தலைமுறைக் குழந்தைகள் வானத்தில் இருக்கும் நட்சத்திர அழகைப் பார்க்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com