
இயற்கையின் படைப்பில் ஒரு சிறிய, கண்ணுக்குத் தெரியாத புழு முதற்கொண்டு மிகப்பெரிய அளவிலான யானை வரை பல வகையிலான மிருகங்களைப் பார்த்தும், அவற்றில் சிலவற்றைப் பற்றின விவரங்களைக் கேட்டும் அறிந்திருக்கிறோம். இம்மாதிரியான விலங்குகளில் சில, அவை உருவில் சிறியதோ பெரியதோ, அசாத்தியமான பலமும் திறமையும், சாதுர்யமும் கொண்டு நம்மை வியப்பில் ஆழ்த்தவும் செய்கின்றன. அதிக விஷமுடைய பாம்புகளையே வேட்டையாடிக் கொன்று தனக்கு உணவாக்கிக்கொள்ளும் திறனுடைய, அதிகம் அறியப்படாத 10 விலங்கு மற்றும் பறவைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஹனி பேட்ஜெர் (Honey Badger): உருவில் சிறியதாயினும், இதன் வெறித்தனம் கட்டுக்கடங்காதது. வலுவும், முரட்டுத்தனமும் கொண்ட தோலையுடையது. சாதுர்யமாக பல விஷப் பாம்புகளையும் பயமின்றித் தாக்கிப் போராடி ஜெயித்து அவற்றைத் தனக்கு உணவாக்கிக்கொள்ளும். நாகப் பாம்பு தீண்டினால் கூட அதன் விஷம் இதன் உடலுக்குள் இறங்காது.
2. செக்ரெட்டரி பர்ட் (Secretary Bird): ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பறவை இது. தமது வலுவான நீண்ட கால்களைக் கொண்டு நிமிர்ந்து நிற்கும். தனது சக்தி வாய்ந்த கால்களால் உதைத்தே பாம்புகளைக் கொன்றுவிடும் சக்தி உடையது. இதன் காரணமாகவே, பாம்புகளைக் கொல்வதில் திறமைசாலியான பறவைகளில் இதுவும் ஒன்று என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
3. கீரி (Mongoose): மங்கூஸின், மூளை கட்டுப்பாட்டில் இல்லாமல், தூண்டுதலுக்குத் தானாக (அனிச்சையாக) வெளிப்படுத்தும் எதிர்வினையும், விஷத்தைத் தாங்கிக் கொள்ளும் உடலமைப்பும் பாம்புகளை இதனிடம் பயம் கொள்ளச் செய்துள்ளன. சர்வ சாதாரணமாக பாம்பின் தாக்குதலை எதிர்கொண்டு ஜெயித்துவிடும் திறமை கொண்டது மங்கூஸ்.
4. ராஜ நாகம் (King Cobra): இதை 'தன்னினந்தின்னி' (Cannibal) என்றும் கூறுவர். அதிக விஷமுடைய இந்தப் பாம்பு, தனது இனத்தைச் சேர்ந்த மற்ற விஷப் பாம்புகளை வேட்டையாடி உண்ணக்கூடிய குணம் கொண்டது.
5. கெட்ஜ்ஹாக் (Hedgehog): இந்தச் சிறிய விலங்கு கொடிய விஷத்தையும் முறியடிக்கச் செய்யும் எதிர்ப்புச் சக்தி கொண்டது. இது தனது கூர் முனையுடைய பற்களால் சிறிய வகைப் பாம்புகளை கொத்திக் கொன்று உணவாக்கிக் கொள்ளும்.
6. ஈகிள் (Eagle): இப்பறவைகளில் ஒரு வகையான 'கோல்டன் ஈகிள்' அதிவேகமாக கீழே குதித்து வந்து பாம்புகளைப் பிடித்துக் கொன்று, கால்களில் பற்றித் தூக்கிச் செல்லும். பின் நடுவானில் பறந்தபடி அதை உட்கொண்டுவிடும்.
7. வைல்ட் போர் (Wild Boar): இந்த வகைக் கரடி தான் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் வரும்போதும் மற்றும் தனது குட்டிகளைக் காக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்போதும், வெறித்தனமாக முரட்டடி அடித்தும், கடித்தும் விஷப் பாம்புகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் திறமை கொண்டது.
8. ரோட் ரன்னர் (Roadrunner): இப்பறவை தென்மேற்கு அமெரிக்கப் பகுதிகளில் திரியும் ராட்டில் ஸ்னேக்களை (Rattle Snake) உணவாகக் கொள்பவை. மிக மெல்லிய உருவமுடைய இப்பறவை, மிக வேகமாகத் தனது கூரிய மூக்கின் உதவியால் பாம்பைக் கொத்திக் குதறி கொன்று விடும் திறமை கொண்டது.
9. சிவெட் (Civet): தனது உணவுத் தேவைக்காக, பூனை போல் சத்தமின்றி இரவில் நடமாடும் விலங்கு இது. சில வகையான விஷங்களை முறியடிக்கும் எதிர்ப்புச் சக்தி கொண்டது. மங்கூஸ் போலவே தூண்டுதலுக்கு தானாக எதிர்வினையாற்றும் திறமையும் கொண்டது. பயங்கர வேகமாக செயலாற்றக் கூடியது.
10. ஸ்னேக் ஈகிள்: பாம்புகளை வேட்டையாடுவதில் நிபுணத்துவம் பெற்ற இந்தக் 'கொன்றுண்ணிப் பறவை' அளவில் சற்றுப் பெரிதான பாம்புகளைக் கூடத் தனது வளைந்து கூர்மையுடனிருக்கும் நகம் மற்றும் அலகின் உதவியால் செயலிழக்கச் செய்து பசியைப் போக்கிக்கொள்ளும்.