
இயற்கையின் அதிசயங்களில் ஒன்று குகைகள். பாறைகள் கரைவதாலும், எரிமலை செயல்பாடுகள் அல்லது மண் அரிப்பு போன்ற புவியியல் செயல்முறைகளாலும் குகைகள் உருவாகின்றன. இவை நீள, அகலம், உயரத்தில் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுகின்றன. இவை பாறையின் அடிப்பகுதியில், மேல் பகுதியில், நடுப்பகுதியில் என்று எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். இந்தப் பதிவில் பல்வேறு வகையான குகைகள் பற்றியும் அவை உருவாகும் விதம் பற்றியும் பார்ப்போம்.
குகைகளின் வகைகளும் தோன்றும் விதமும்:
1. சுண்ணாம்புக் குகைகள்: கரைசல் குகைகள் என்று அழைக்கப்படும் இவை பொதுவான குகைகள் ஆகும். கார்பன்-டை-ஆக்சைடு கலந்த மழை நீர் அமிலத் தன்மையோடு இருக்கும். இது மென்மையான பாறைகளில் உள்ள சுண்ணாம்புக் கற்களை மெதுவாக கரைக்கும்போது சுண்ணாம்புக் குகைகள் உருவாகின்றன. நீண்ட காலமாக பாறையில் உள்ள சிறிய விரிசல்கள் பெரிதாகி நிலத்தடிக் குகைகள் மற்றும் சுரங்கங்களை உருவாக்குகின்றன. ஜிப்சம் உப்பு சுண்ணாம்பு போன்ற பாறைகளிலும் இந்த வகைக் குகைகள் உருவாகின்றன.
2. லாவா குகைகள்: எரிமலைகள் வெடித்து அதன் உள்ளே இருக்கும் எரிமலைக் குழம்பு வெளியேறும்போது லாவா குகைகள் உருவாகின்றன. அதன் வெளிப்புறம் குளிர்ச்சித் தன்மையுடன் இருந்தாலும் உட்புறத்தில் எரிமலைக் குழம்பு உருகி ஓடிய பின்னால் ஒரு வெற்றிடமான சுரங்கப்பாதை போன்று அமைப்பை உருவாக்குகிறது. ஹவாய் தீவுகள் கலிபோர்னியா, அமெரிக்கா போன்ற இடங்களில் லாவா குகைகள் உள்ளன.
3. கடல் குகைகள்: கடலோரத்தில் உள்ள பாறைகளில் அலைகள் மோதுவதால் இவை உருவாகின்றன. தொடர்ந்து அலைகள் இவற்றில் மோதும்போது, கடல் நீர் பாறையை அரித்து அதில் திறப்புகளை உருவாக்குகிறது. இதனால் கடல் குகைகள் உருவாகின்றன. இத்தாலியில் இந்த வகைக் குகைகள் காணப்படுகின்றன.
4. பனிப்பாறை குகைகள்: பனிப்பாறைகளுக்கு அடியில் அல்லது உள்ளே பனிக்கட்டி உருகுவதால் வெற்றிடம் உருவாகிறது. அவை குகைகளாக மாறுகின்றன. பனிக்கட்டியால் ஆன சுரங்கங்கள் எளிதில் உடையக் கூடியவை. இவை அலாஸ்கா மற்றும் ஐஸ்லாந்து போன்ற குளிர்ப் பிரதேசங்களில் காணப்படுகின்றன. இவை 16 முதல் 164 அடி வரை நீளம் இருக்கலாம்.
5. அரிப்புக் குகைகள்: கிரானைட் போன்ற கடினமான பாறைகள் உட்பட எந்த வகையான பாறைகளிலும் இவை உருவாகலாம். இவற்றில் நீர் பாய்ந்து பாறைகளை அரிப்பதனால் அரிப்புக் குகைகள் உருவாகின்றன.
6. இயோலியன் குகை; (Eolian caves): இவை காற்றுக் குகைகள் என்று அழைக்கப்படுகின்றன. காற்று வீசுவதாலும் மணல்கற்கள் மென்மையான பாறைகளை அரிப்பதாலும் இவை உருவாகும். ஆழமில்லாமல் இருக்கும். இவை பாலைவனங்கள் அல்லது வறண்ட பகுதிகளில் காற்றினால் உருவாகும். வண்டல்களின் செயல்பாட்டால் ஏற்படும் குகைகள் ஆகும். சுமார் பத்து மீட்டர் நீளத்தில் இருக்கும். நீண்ட காலத்திற்கு காற்று மிகப்பெரிய மணல் கற்பாறைகளின் கூறைகள், தரைகள் மற்றும் சுவர்களை அழித்து நுழைவாயிலை விட பெரிய விட்டம் கொண்ட பாட்டில் வடிவ அறையை உருவாக்குகிறது.
7. தாலஸ் குகை; (Talus caves): மலைச் சரிவுகளிலோ அல்லது பாறைகளின் அடிப்பகுதியிலோ இயற்கையாக விழுந்து குவிந்த பெரிய பாறைகளுக்கு இடையில் உருவாகும் திறப்புகளை தாலஸ் குகைகள் என்று அழைக்கிறார்கள். இவை பெரும்பாலும் பாறை சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன. நியூயார்க் மற்றும் நியூ இங்கிலாந்தில் உள்ள கிரானைட் தொகுதிகளில் தாலஸ் குகைகள் காணப்படுகின்றன. மத்திய கலிபோர்னியாவில் அமைந்துள்ள தேசிய பூங்காவில் ஏராளமான தாலஸ் குகைகள் உள்ளன.