

உங்கள் வீட்டுத் தோட்டத்திலுள்ள தக்காளி, முள்ளங்கி, மாதுளை செடி விதைகள், முளைப்பதற்கு போடப்பட்ட அவரை விதைகள் போன்றவற்றை தின்பதற்கும், கொறித்துக் குவிக்கவும் எலி, அணில், புறா போன்ற உயிரினங்கள் படையெடுப்பது வழக்கம். அதிக செலவில்லாமலும் ரசாயனக் கலப்பேதும் இல்லாமலும் இவற்றைத் தடுப்பதற்கும், செடிகள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாக வளர்வதற்கும் நாம் பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள் சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
வீடு, ரெஸ்டாரன்ட் மற்றும் திருமண விழாக்கள் போன்ற இடங்களில் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்பூன் மற்றும் முள் கரண்டிகளை (Fork) சேகரித்து வைத்து நம் வீட்டுத் தோட்டத்தின் செடிகள் அருகே அவற்றை 4 முதல் 6 அங்குல இடைவெளிகளில் நட்டு வைத்துவிட்டால், அவை நாச வேலையில் ஈடுபட வரும் கொறித்துண்ணிகளை அச்சுறுத்தி விரட்ட உதவும். பொதுவாக, சில்மிஷம் செய்ய வரும் பிராணிகள் சுலபமா ஊர்ந்து வந்து விரைவாக வேலையை முடித்து விட்டு ஓடிப்போகும் எண்ணத்துடனேயே வருவது வழக்கம். இம்மாதிரியான பிளாஸ்டிக் பொருட்களின் அணிவகுப்பைப் பார்த்ததும் அவை அரண்டு போய் அவ்விடத்தை விட்டு அகன்று வேறிடம் தேடி ஓடிவிடும்.
முள் கரண்டிகளை அதன் கூர் முனை மேல் நோக்கி இருக்கும்படியும், அசையாமல் சிறிது ஆழமாக பதித்து வைப்பதும் நலம். காலநிலை மாற்றத்தால் உடைந்து, சிதைந்து போகும் கரண்டிகளை உடனுக்குடன் மாற்றி அமைப்பதும் நல்லது. உயிர்ப்பிராணிகளை கவர்ந்திழுக்கும் மூலிகைச் செடிகள் மற்றும் முளை விடும் இளஞ்செடிகளுக்கு முன்னுரிமையளித்து இந்த முள் கரண்டி வேலியை அமைக்கலாம். நிரந்தர வேலி போலில்லாமல், இந்த முள் கரண்டி வேலியை நினைத்த நேரம் எடுத்து, நினைத்த இடத்தில் மாற்றி வைத்துக்கொள்ளலாம்.
இந்த வேலியுடன் கூடவே வீட்டில் தயாரிக்கப்படும் பூச்சி விரட்டி கரைசலையும் பயன்படுத்துவது செடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு தரும். ரோஸ் செடி பக்கத்தில் நறுமணம் மிக்க பார்ஸ்லே செடி வைப்பது நோய் தாக்குதலிலிருந்து ரோஸ் செடியை பாதுகாக்கும். புதினா மற்றும் ரோஸ் மேரி செடியிலிருந்து வரும் வாசனை, எலி மற்றும் அணில் போன்ற சிறிய பிராணிகளின் வரவைத் தடுக்கும்.
தக்காளி மற்றும் மிளகாய் செடிகளின் அருகில் மேரி கோல்ட் மற்றும் துளசி செடி வைத்து வளர்ப்பதின் மூலம் கரையான் மற்றும் தீங்கு தரும் பூச்சிகளிடமிருந்து அவற்றை பாதுகாக்க முடியும். செடிகளைச் சுற்றி மிளகாய் தூளை தூவி வைத்தால் அதன் கார நெடி மற்றும் எரிச்சலுக்குப் பயந்து கொறித்துண்ணிகள் அருகில் வராது.
உபயோகித்த பின், தங்கி நிற்கும் காபி தூளை தோட்டத்தில் தூவி வைத்தால் அட்டை, நத்தை போன்ற உயிரினங்கள் வராமல் தடுக்கலாம். மேலும், மண்ணின் வளத்தையும் பெருக்கலாம். யூகலிப்டஸ், பெப்பர்மின்ட், சிட்ரஸ் வகை எண்ணெய் போன்றவற்றையும் தண்ணீரில் கலந்து தோட்டத்தில் தெளிப்பதும், தீங்கு விளைவிக்க வரும் பூச்சிகளை விரட்ட உதவும்.