மண்ணின் எதிரி மனிதன்!

மண்ணின் வளம்...
மண்ணின் வளம்...

-முனைவர்  என்.பத்ரி

நாம் வாழும் இவ்வுலகம் அனைத்து உயினங்களுக்கும் உரித்தானது. ஐம்பூதங்களும் நம்மால் பழங்காலம் தொட்டு கடவுளர்களாக வணங்கப்படுபவை. அவை மனிதனை வாழ்த்தவும், வீழ்த்தவும் வல்லன. இவ்வுலகம் தோன்றியபோது இருந்த கோடிக்கணக்கான உயிரினங்கள், பல்லாயிரக்கணக்கான தாவரங்கள், செடிகள், மரங்கள் ஆகியவற்றில் பல இன்று அழியும் தருவாயில் உள்ளன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் பருவ நிலை மாற்றம், வெப்பமயமாகுதல், காடுகள் மற்றும் இயற்கை வளங்களை அழித்தல், வன விலங்குகளை மனிதன் வேட்டையாடுதல் போன்றவையாகும். இவற்றையெல்லாம் செய்தது ஆறறிவும், அறிவியல் அறிவும் கொண்ட மனிதர்களே.

மண்: னித வாழ்வின் தொடக்கப்புள்ளியான ‘மண்’ மனிதனின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், தண்ணீர் அனைத்தையும் அளிக்கிறது. உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான முக்கிய அங்கமான மண்ணின் வளத்தைச் சமீபகாலமாக மனிதன் மிகவும் பாழ்படுத்தி வருகிறான்.

விவசாயத்தில் பயன்படுத்தும் அதிகப்படியான ரசாயன உரங்களினால் மண்ணிலுள்ள உயிர் சத்துக்கள், தழைச்சத்துக்கள் என நன்மை பயக்கும் அனைத்தும் முழுமையாக பாதிக்கப்படுகின்றன. விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்வதன் மூலம் செலவு குறைவதுடன் மண்ணில் இருக்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற அடிப்படை சத்துக்களும் மண்ணில் நிலைத்திருக்க உதவ முடியும்.

மனிதன் பயன்படுத்தும் நெகிழி மண்ணுக்கு பெரும் எதிரி ஆகும். இந்த அழகிய பிரபஞ்சத்தை மீண்டும் வளமையும், செழுமையும்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு ஒரு ஆரோக்கியமான உலகமாக விட்டுச்செல்வது நம் அனைவரின் கடமையாகும். மரங்களை நடுவதன் மூலம் மண்ணரிப்பைத் தடுக்கலாம். ஒரு அங்குல மண் உருவாகுவதற்கு 300 முதல் 1,000 ஆண்டு காலம் வரை தேவைப்படுகிறது. ஆனால், வெள்ளம், சூறைக்காற்று போன்ற இயற்கை நிகழ்வுகளால் மண்வளம் அடித்துச் செல்லப்படுகிறது. அதைவிட மோசமாக மனிதனின் பேராசை மற்றும் பொறுப்பற்றத் தன்மையால் மண் தொடர்ந்து தனது வளத்தை இழந்து வருகிறது. மண்ணுக்குள்ளும் புரோட்டோசோவா, பாக்டீரியா, பூஞ்சைகள், மண் புழுக்கள், சின்னஞ்சிறு பூச்சிகள் என பல உயிரிகள் உள்ளன. அவையும் அழிந்துபோகின்றன.

நீர்: உலக வாழ்க்கைக்கு இன்றியமையாததான நீரினை ‘அமிர்தம்’ என்கிறோம். கீழ்நோக்கி செல்லும் இயல்புடைய நீர், பணிவின் வெளிப்பாடாகும். நீரை வைத்து உறவு களையும், வாழ்க்கைச் சூழல்களையும் நமது முன்னோர் விளக்கியுள்ளனர். உறவுகளுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் ’நீர் அடித்து  நீர் விலகுமா’  என்று கூறி உறவுகளைப் பண்படுத்தி  வருகிறோம். ஆனால், நீரினை பல வழிகளிலும் தொடர்ந்து மாசு படுத்தி வருகிறோம். சேமிப்பதுவும் இல்லை.

காற்று: காற்று இல்லை என்றால் இந்த உலகில் யாராலும் வாழமுடியாது. ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’, ‘ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்’ என்பதுபோல நாம் காற்றின் சிறப்பினை உணர்ந்து நடக்க வேண்டும். போகி நாட்களில் காற்றினை மாசுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நெருப்பு: எந்த இடத்திலும் எப்போதும் மேல்நோக்கிச் செல்லும் தன்மையுடைய நெருப்பானது இந்த உலகத்தில் எந்தப் பொருளையும் எரித்து சாம்பலாக்கும் திறன் பெற்றது.

ஆகாயம்: ஆகாயம்  மனிதனுடைய பிரார்த்தனை, வேண்டுதல் என்பவற்றை இறைவனிடத்தில் எடுத்துச் செல்லும் தன்மையுடையது. ஏனைய நான்கு ஐம்பூதங்களும் தோன்றக் காரணமாக அமைவது ஆகாயம் ஆகும். நாம் வணங்கும் தெய்வங்கள் வாழும் இடம் என்றும் பலராலும் இன்றும் நம்பப்படுகிறது. ‘வானம் நினைத்தால் மழை, மனிதன் நினைத்தால் வினை’  என்பன இறை தத்துவத்தின் விளக்கமாய் அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
உஷாரய்யா உஷாரு! உஷாரம்மா உஷாரு!
மண்ணின் வளம்...

நாம் வாழும் மண்ணைப் பாதுகாக்கவும், அதைச் சீரழிக்காமல் நம் வருங்கால சந்ததியிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்தவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம், நமது செயல்களால் முழு ஒத்துழைப்பைத் தரவேண்டும். மண்ணுக்கு எதிரி மனிதன்தான். ஆனால் மண் உள்ளிட்ட ஐம்பூதங்கள் மனிதனின் நண்பர்களாக விளங்குகின்றன.

மண் வளம் காத்தல், நீர், காற்று, ஆகாயம் மாசுபடுவதைக் குறைத்தல், தீயினால் ஏற்படும் அழிவுகளைக் குறைத்தல் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை வீட்டிலும், பள்ளியிலும், சமூகத்திலும் அடுத்த தலைமுறை யினரிடையே ஏற்படுத்தும் முயற்சிகளில் உடனே இறங்கவேண்டும். அப்போதுதான் நாமும், நம் சந்ததியும் வளமாக வாழ மண் அனுமதிக்கும். அதற்கு தேவையான மாற்றம் முதலில் நம்மிடத்திலிருந்து தொடங்க இன்றே உறுதி ஏற்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com