உஷாரய்யா உஷாரு! உஷாரம்மா உஷாரு!

மயிரிழையில் பணம் தப்பிய திரில்லர் அனுபவம்! அனுபவம் : உதயம் ராம்.
whatsapp call...
whatsapp call...

(சில நாட்கள் முன்பு தனக்கு நடந்த அனுபவத்தை இக்கட்டுரையின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிறார் உதயம் ராம்.)

நேற்று மாலை 5.00 மணி இருக்கும். வாட்ஸ் அப்பில் ஒரு இந்திய எண்ணிலிருந்து ஒரு அழைப்பு... நான் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் இரண்டு முறை அழைப்பு. தொடர்ந்து, என் நண்பர்  எழுத்தாளர் கவிஞர். தென்காசி கணேசன் இருக்கிற 4  படங்கள் ‘டொய்ங் டொய்ங்’ சப்தத்துடன் என் செல்லுக்குள் காயப்படாமல் வந்து விழுந்தன. கூடவே ‘ஹாய் கவி உதயம் ராம்... நான் கணேசன் மிக மிக அவசரம்... என்னை அழையுங்கள்’ என்ற செய்தி வேறு.

அவர்தான் அமெரிக்கா போயிருக்காரே. இப்ப அங்க ஏர்லி மார்னிங்கா இருக்குமே. ஏன் வேற நம்பர்ல கூப்பிடறாரு? ஏதாவது எமர்ஜென்ஸியா இருக்குமோ? என்று ரசம்பி (குழம்புதான் வேணுமா?) தவிப்பதற்குள் மீண்டும் அழைப்பு வந்துகொண்டிருந்தது. கட் ஆவதற்குள் எடுத்து விட வேண்டும் என்று வேகமாய் பச்சை அம்புக்குறியை அழுத்த... "ராம் நான் கணேசன் பேசறேன். அர்ஜன்ட் மேட்டர்" என்று சொல்ல,

நான் ’’சொல்லுங்க" என்று சொல்வதற்குள்... "நீங்க கூப்பிடுங்க..." என்று கட் செய்துவிட்டார்.

கணேசனின் வழக்கமான இந்திய செல்பேசி எண்ணுக்கு முயற்சித்தால், அது ‘குக் குக்’ என்று சமைத்துக் கொண்டிருந்தது.

உடனே நான் அந்த புது எண்ணுக்கு "நீங்க எங்கிருக்கீங்க? வழக்கமான நம்பர் என்ன ஆச்சு? என்று  டெஸ்ட் செய்ய டெக்ஸ்ட் செய்தேன்.

"நான் சிகாகோலே இருக்கேன்... அந்த நம்பர் நேத்துலேந்து வேலை செய்யலே" என்று பதில் வந்தது.

அடுத்த விநாடியே அந்த புதிய எண்ணிலிருந்து அழைப்பு அலறியது. எடுத்தவுடன், "ராம் ஒரு எமர்ஜென்ஸி... நம்ம ‘சிறுவர் வனம்’ ஆசிரியர்  கோபிநாத்... அவர் இப்போ இங்கே வந்திருக்கார்.”

"அவருக்கென்ன?"

"அவரு சொந்தக்காரர் பெங்களுர்லே ஹார்ட் ஆபரேஷனுக்கு அட்மிட் ஆகியிருக்காரு. நாளைக்கு ஆபரேஷன். எனக்கும் அவருக்கும் ஜி.பே வொர்க் ஆகல. உடனே இப்பவே பணம் வேணும். நாளைக்கு நான் இந்தியா வந்துடுவேன். காலைலே உங்களுக்கு திருப்பி அனுப்பிடறேன்..."  என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

அடுத்த சில நொடிகளில் சுரேஷ் என்று ஆரம்பிக்கும் வடக்கத்தி ஆளுக்கு எவரோ 2000 /- ஜி.பே அனுப்பிய ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பி... "இவருக்கு உடனே 35000/- அனுப்புங்க. நான் இப்ப துபாய் வந்திருக்கேன். நாளைக்கு சென்னை வந்துடுவேன் வந்தவுடனே காலைல உங்களுக்குத் திருப்பித் தரேன்" என்று வேகமாக ஒரு மெசேஜ் வந்தது.

போட்டோக்கள்... அவர் சிகாகோவில் இருப்பது... நண்பர் சிறுவர் வனம் கோபிநாத் என்கிற எல்லா விவரங்களும் சரியாக இருக்கவே, ஒரு வேளை இது உண்மைதானோ என்று இந்த ஞானசூன்ய மூளை நம்பத் தயாராகும்முன், அம்பி விக்ரம் அடுத்த விநாடியே ‘அந்நியன்’ விக்ரமா மாறின மாதிரி என் மூளை (கொஞ்சூண்டு சின்னதா மண்டையிலே ஒரு ஓரமா சும்மாதான் கிடக்கு) உஷாராகி ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ ரோஜர் மூர், சீன்கானரி ரேஞ்சுக்கு மாற.. ஜேம்ஸ் பாண்ட் பட டைட்டில் சாங் பின்னணியில் ஒலிக்க... இந்த ஞானசூன்யம் துப்பறியும் சாம்புவானது.

ஆஹா .. இது டுபாக்கூர் கால் என்பதை உடனே கண்டுபிடிச்சுட்டேன்.

1. நண்பர் என்னை  கவி உதயம் ராம் என்று அழைக்க மாட்டார். ராம்தான்.

2. பேசிய குரல் அவருடையது மாதிரி இல்லை. அத்தனை வேகம் அத்தனை பரபரப்பு.

3. நேற்று காலை வரை நான் அனுப்பிய வாட்ஸ்அப் தகவலை அவர் பார்த்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக 2 புளு டிக் ஆகியிருந்தது.

4. அவருக்கு  ஜி.பே சரியாக இல்லையென்றால் அவர் மனைவி அல்லது மகனிடம் இருக்குமே?

இத்தனை புலன் விசாரணைகளையும்  ஐந்து நிமிடங்களுக்குள் எனக்குள்ளேயே செய்து ‘சபாஷ்  தப்பிச்சுட்டடா மாப்பிள்ளை’  என்று நானே என்னைப் பாராட்டிக்கிட்டேன்.

அதற்குள் அந்த ஆசாமி, என்ன இன்னும் பணம் அனுப்பலையான்னு கேட்டு செய்தி அனுப்ப... இங்க எங்க பேங்க் சர்வர் டவுனாயிருச்சு. சரியானதும் அனுப்பறேன்னு பதில் அனுப்பினேன். எப்படியும் இந்தத் திருடனைக் கண்டுபிடிச்சாகனும்னு ‘வேட்டையாடு விளையாடு’ கமல்ஹாசனா மாறிட்டேன்.

இதையும் படியுங்கள்:
உலகில் உள்ள மிக பிரபலமான காபி வகைகள் பற்றி பார்க்கலாம் வாங்க!
whatsapp call...

உடனே பாஸ்டனில் இருக்கும் கோபிநாத் சாரை வாட்ஸ்அப் காலில் அழைக்க, அவருக்கு இது எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

ஆனால், "நீங்க சொன்ன நம்பர் லேந்து எனக்கும் இன்னைக்கு நிறைய மிஸ்டு கால் வந்திருக்கு என்ன விஷயம் பயமாயிருக்கு" என்றார்.

சற்று நேரத்தில் கணேசன் "யெஸ் ராம்... எனக்கு இதே நம்பர்லேந்து அழைப்பு நிறைய இன்னைக்கு வந்துருக்கு. அந்த ஆள் அனுப்பிய அத்தனை விஷயங்களையும் எனக்கு அனுப்புங்க" என்று சொல்ல, நான் அனுப்பினேன்.

“இந்த போட்டோஸ் எல்லாம் என் முகநூலில் 5 வருஷத்துக்கு முன்னாடி போட்ட போட்டோஸ்... இதை வைச்சு உங்க முகநூலை டிரேஸ் பண்ணி விளையாடறான். நல்லவேளை நீங்க உடனே உஷாராயிட்டீங்க... எங்களையும் உஷார்படுத்திட்டீங்க...” என்று செய்தி அனுப்பினார்.

இதற்கு நடுவில் அந்த பொய் நபர் விடாது எனக்கு அழைப்புக் கொடுத்துக்கொண்டேயிருந்தார்.

அந்த சுரேஷ் என்ற நபருக்கு போன் செய்தால் இந்தி பாடல் ஒலித்தது. எடுக்கவில்லை. கணேசன் என்ற பெயரில் பேசியவருக்கு... "சுரேஷுக்கு டெஸ்ட் பண்ண 100 ரூ பணம் அனுப்பினேன். போகலையே"ன்னு மெசேஜ் அனுப்பினேன்.

அடுத்த விநாடி முன்பு வரை எடுக்காத சுரேஷ் என்ற எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

அதாவது சுரேஷ் என்கிற நபர் தனக்கு பணம் அனுப்பவே இத்தனை டிராமா செய்கிறார் என்று தெரிந்ததும்... சைபர் கிரைமுக்கு 1930  மற்றும் 155260 என்ற எண்களில் புகார் அளிக்க முயற்சித்தேன்.

ஆனால், அதற்குள் கணேசன் சிகாகோவில் இருந்து சென்னை காவல்துறை நண்பருக்கு தகவல் அனுப்பி முழு விவரமும் பெற்றுவிட்டார் .

நாக்பூர் முகவரி அந்த நபரின் ஆதார் என் உட்பட அனைத்தும் கிடைத்துவிட்டது.

அந்த எண்கள் இதோ : *8459302239* , *9623311666*

"மிஸ்டர் கணேசன் என்கிற பிராட் சுரேஷ்... நீங்கள் பிடிபடப் போகிறீர்கள்... உங்கள் எண், முகவரி எல்லாம் தமிழ்நாடு சைபர் கிரைம்வசம்" என்ற செய்தி அனுப்பினேன் .

பத்து நிமிடங்கள் கழித்து அந்த இரண்டு எண்ணும் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டது. நானும் பிளாக் செய்துவிட்டேன். வங்கியிலும் செக் செய்தாயிற்று. நல்லவேளை எதுவும் போகவில்லை. ஜி.பே சரியாக வேலை செய்யவில்லை என்று யாராவது அழைத்து பணம் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும்.

நாம் நீண்ட நாள் பயணமாக வெளிநாட்டிற்கோ வெளியூருக்கோ செல்வதை வாட்ஸ்அப்பில் தம்பட்டம் அடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சேமிக்கும் பணத்தை ஒரே வங்கியில் வைக்காமல் இரண்டு மூன்று வங்கிகளில் வைக்கலாம். நிரந்தர வைப்பு போக, சேமிப்பு கணக்கில் தேவைக்கு அதிகமான அளவில் பணம் வைக்காமல் இருப்பது நல்லது. நமக்குத் தெரிந்தவர்களின் தொலைபேசி எண்ணைப் பெயருடன் பதிவு செய்ய வேண்டும். அறிமுகமில்லாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், குறிப்பாக வாட்ஸ் அப்பில் வந்தால்... கவனமாயிருக்க வேண்டும்...

உஷாரய்யா உஷாரு! உஷாரம்மா உஷாரு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com