செங்கற்பட்டு மாவட்டம், செங்கற்பட்டு நகரத்திலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் வேடந்தாங்கல். இந்த சிறிய கிராமத்தில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் உலகப் புகழ் பெற்றது. இப்பறவைகள் சரணாலயம் சுமார் 40 ஹெக்டேர் பரப்பளவு கொண்டுள்ளது. இப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் இலயோனஸ் பிளெஸ் என்பவர் வேடந்தாங்கலை பறவைகள் சரணாலயமாக அறிவித்தார்.
இயற்கை எழிலை பறைசாற்றும் விதமாக இப்பகுதி முழுவதும் பச்சைப்பசேல் என்று அடர்ந்த மரங்களுடன் காட்சி தருகின்றன. குறிப்பாக, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் இப்பகுதி செழிப்பாகக் காட்சியளிக்கும். பார்வை கோபுரத்தின் மீது ஏறி நின்று பார்க்கும்போது விரிந்து படர்ந்து காட்சியளிக்கும் அடர் பச்சை வண்ண மரங்களின் மீது ஆயிரக்கணக்கில் அமர்ந்திருக்கும் பறவைகளைப் பார்க்கும் காட்சியானது அற்புதமானது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இப்பகுதி மக்கள் காட்டும் அக்கறையும் பங்கும் மிகவும் முக்கியமானது.
சரணாலயத்திற்குள் நுழைந்ததும் ஒரு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த பாதையில் நடந்தவாறே பறவைகளைப் பார்வையிடலாம். ஆங்காங்கே அமருவதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அமர்ந்தும் பறவைகளைப் பார்வையிடலாம். மேலும், உள்ளே சற்று தொலைவில் ஒரு பார்வை கோபுரம் (Watch Tower) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஏறி நின்று வேடந்தாங்கல் ஏரியின் முழுப்பரப்பளவையும் அதில் நிறைந்துள்ள பறவைகளையும் கண்டு மகிழலாம்.
இந்த சரணாலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியா, மலேசியா, கனடா, சைபீரியா, நேபாளம், பங்களாதேஷ், பர்மா, மியான்மர், இலங்கை முதலான பல நாடுகளில் இருந்தும் பறவைகள் நவம்பர் மாதத்தில் வருகை தந்து இங்கு தங்கி ஏரியின் நடுவில் உள்ள நீர்க்கடப்பை மரக்கிளைகளில் கூடு கட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து குஞ்சு வளர்ந்ததும் அவற்றை அழைத்துக் கொண்டு மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்புவது வழக்கம்.
வெளிநாடுகளிலிருந்து நீலச்சிறகி, தட்டைவாயன், ஊசிவால் வாத்து, வர்ணநாரை, சாம்பல் நிற கூழைக்கடா, வெள்ளை அரிவாள் மூக்கன், புள்ளிவாத்து, தரை குருவி, சாம்பல் நாரை, பச்சைக்காலி, பவளக்காலி முதலான பறவைகள் வேடந்தாங்கலுக்கு வருவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து செல்வது வழக்கம். மேலும், உண்ணிக்கொக்கு, சிறிய நீர்க்காகம், மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வக்கா, கொண்டை நீர்க்காகம் முதலான உள்நாட்டுப் பறவைகளும் இங்கு இனப்பெருக்கத்திற்காக வருகை தருகின்றன. இப்பறவைகளுக்குத் தேவையான உணவுகள் இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார ஏரிகள் மற்றும் நீர் நிலைகளில் கிடைக்கின்றன.
சரணாலயத்தைப் பார்வையிட பத்து ரூபாய் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கைப்பேசி, கேமிராக்களுக்கும், புகைப்படக் கேமிராக்களுக்கும் வீடியோ கேமிராக்களுக்கும் தனிக் கட்டணம் உண்டு.
சரணாலயத்தின் சுற்றுப் பகுதிகளில் உணவகங்கள் ஏதும் இல்லை. தேநீர், காபி, இளநீர் மற்றும் நொறுக்குத்தீனிகள் சிறுசிறு கடைகளில் கடைக்கின்றன. இப்பகுதிகளில் பைனாக்குலர் வாடகைக்குக் கிடைக்கின்றன. இங்கிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கரிக்கிலி என்று மற்றொரு பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது. செங்கற்பட்டிலிருந்து சில பேருந்துகள் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் வேடந்தாங்கலுக்கு இயக்கப்படுகின்றன.