நீங்கள் பார்த்திராத உலகின் விசித்திர மலர்கள் - இயற்கையின் மர்மப் பக்கங்கள்!

மார்ச் 21 - உலக மலர்கள் தினம்
Strange Flowers | World Flowers Day
Strange Flowers | World Flowers DayAI Image
Published on

மலர்கள் நல்ல வாசனைக்காக மட்டுமே மணம் வீசுவதில்லை. அந்த மணம் ஒரு வகை சமிக்ஞை தான். ஒவ்வொரு மலரின் மணமும் தேனீ, வண்ணத்துப்பூச்சி அல்லது வவ்வால் போன்ற குறிப்பிட்ட மகரந்தச் சேர்க்கையாளர்களை ஈர்க்கும் ரகசிய செய்தியை கொண்டிருக்கும். சில மலர்கள் தங்கள் மகரந்தச் சேர்க்கையாளர்கள் சுறுசுறுப்பாக செயல்படும் பகல் பொழுதில் வாசனையை வெளியிடுகின்றன. பகல் பொழுது, இரவுப் பொழுதை அறிந்து மலர்கள் பூக்கும் என்று விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது குறிஞ்சி. குறிப்பிட்ட மாதங்களில் பூப்பது மல்லிகை, பிச்சி. காலையில் மலர்வது தாமரை. அந்தியில் மலர்வது அல்லி. இவ்வாறு பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேளையில் தனக்குரிய தாக்கி கொண்டு மலரும் போது ஒரு பூ ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே (மார்கழி, தை) அதுவும் இரவில் மட்டுமே பூக்கும். இந்த பூவை பூக்கும் மரத்தை "ராஜலிங்க மரம்" என்கிறார்கள்.

அடி முதல் நுனி வரை இலைகளாக காட்சி தரும் இந்த மரத்தில் பூ பூத்து பார்ப்பது கடினம். காரணம் யாருமற்ற இரவில் மலரும் இப்பூக்கள் விடியலுக்கு முன் உதிர்ந்து விடுகின்றன. வாசனை நிறைந்த பூக்களை தரும் இந்த மரங்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் பகுதி வெங்கடேசபுரம் கிராம் செங்குன்றம் என்ற ஊரின் குளக்கரையில் உள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவில் பூக்கும், அரிய வகை மலர் பிரம்ம கமலம் பூ. அதுவும், நள்ளிரவில் மலர்ந்து அதிகாலையில் உதிர்ந்துவிடும் ஒரு அதிசய மலராகும். 'இரவுகளின் அரசி' என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. இந்து மதத்தில் பிரம்மாவுக்கு உகந்த மலராகக் கருதப்படுகிறது. மேலும் பிரம்மன் தியானத்தின் போது இந்த மலரில் அமர்ந்திருந்ததாக நம்பப்படுகிறது. பிரம்மனுடைய நாபிக் கமலத்திலிருந்து உருவான பூ என்பதால் இந்தப் பூவின் உட்புறத்தில் பல நாகங்கள் உள்ளது போலவும் பிரம்மன் அமர்ந்திருப்பது போலவும் காட்சி அளிக்கும். ஆண்டிற்கு ஒரு முறை இரவில் மட்டுமே பூத்து சிறப்பான நறுமணம் வீசும்.

50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ, 'காக்டஸ்' இது இந்திய பெருங்கடல் பகுதியில் காணப்படுகிறது. இலுப்பை பூ மலர்வதற்கு 10 ஆண்டுகள் ஆகும். ஒரு மரத்தில் சுமார் 100 கிலோ மலர்கள் பூக்கும். இனிப்பு சுவையுடன் ரசமுள்ள மலராகும். இதில் 60 சதவீதம் சர்க்கரை உள்ளதால் இது சர்க்கரை தயாரிக்க பயன்படுகிறது. "ஆலையில்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை" என்று கூறுவது இதனால் தான்.

மிகவும் குறைந்த நேரம் மட்டுமே மலரும் பூ பார்லிப் பூ மலர்ந்த 3 நிமிடங்களில் வாடிவிடும். அத்திப் பூ பூக்கும் ஆனால், எப்போதுமே விரிவதில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப் பூவை போல பிலிப்பைன்ஸ் நாட்டில் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை வயலட் நிறத்தில் 'லிம்பா' எனும் மலர் மலர்கிறது.

இந்து மகாக்கடலில் அமைந்துள்ள ரீ யூனியன் தீ பகுதியில் 'காக்ஸ்' என்ற பெயரில் ஒரு மலர். 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்கிறது. தண்ணீரில் மலரும் பூ தெரியும். வெந்நீரில் பூ மலருமா? மலர்கிறது. ஹங்கேரி நாட்டில் உள்ள வெந்நீர் ஊற்றுச்சுனைகளில் ஒரு வகை அல்லிப்பூ மலர்ந்து மணம் பரப்புகிறது.

இதையும் படியுங்கள்:
கண்களைக் கவரும் அற்புத மலர்கள் எட்டு!
Strange Flowers | World Flowers Day

'பாம்பூசாய்டு' என்ற மூங்கில் வகை மரப்பூக்கள் 120 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்கின்றன. இதில் ஒரு விந்தை என்னவென்றால் உலகில் முழுவதிலும் இந்த இனம் ஒரே காலத்தில் பூக்கும் என்பது தான். கடைசியாக இந்த மூங்கில் பூக்கள் 1960 ல் பூத்தனவாம்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப் பூவை போல, 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூ 'கர்வி' இதன் அறிவியல் பெயர் 'ஸ்ட்ரோபிலன்தஸ் கலியோசா' மழை காலங்களில் மட்டுமே இந்த பூ பூக்கும். மற்ற நாட்களில் வறண்டு காணப்படும். எட்டாவது ஆண்டில் முதலில் சிறிய மொட்டு தோன்றும் பின்னர் அது அழகான நீல நிறப் பூவாக மலரும். மகாராஷ்டிரா, குஜராத், ம.பி மாநிலங்களில் காட்டுப் பகுதிகளில் கர்வி பூ பூக்கிறது. இந்த பூச்செடியின் இலை மருத்துவ குணம் கொண்டது. இதன் சாறு வயிறு சம்பந்தமான நோய்களை குணமாக்கும்.

இதையும் படியுங்கள்:
மலர்கள் தரும் மேனி எழில்
Strange Flowers | World Flowers Day

அடர்ந்த மழைக்காடுகளின் ஆழத்தில், 'ரஃப்லேசியா அர்னால்டி' (Rafflesia arnoldii) என்ற உலகின் மிகப்பெரிய ஒற்றை மலர் வளர்கிறது. இது அதன் பிரம்மாண்டமான அளவுக்காக மட்டுமல்ல, அழுகிய இறைச்சி போன்ற அதன் கடுமையான நாற்றத்திற்காகவும் உலகப் புகழ்பெற்றது. இது அறியப்பட்டவற்றிலே மிகப்பெரிய ஒற்றை மலரை உற்பத்தி செய்கிறது. மலரும் போது 1 மீ. அகலம் வரை விரியும். சில மலர்கள் பதினொன்று கிலோகிராம் வரை எடை கொண்டவை. இது கொத்தாக வளராமல், தனியாகவே மலர்கிறது. நிறம் மெரூன் முதல் செங்கல் சிவப்பு வரை இருக்கும். இதழ்களில் வெளிறிய மரு போன்ற புள்ளிகள் காணப்படும். இந்தத் தாவரம் சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் உள்ள மழைக்காடுகளில் வளர்கிறது. சூரிய ஒளி அதிகம் படாத, இருண்ட மற்றும் ஈரப்பதமான சூழல் இதற்குத் தேவை. மொட்டு மலரும்போது, அது வியக்கத்தக்க வகையில் விரியும். சில நேரங்களில் லேசான சீறல் சத்தம் கேட்கும். மலர் சில நாட்கள் மட்டுமே உயிர்வாழும். இந்தோனேசியாவில், இது 3 தேசிய மலர்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான மலரும் சுமத்ரா ஜாவா தீவில் தான் இருக்கிறது. அதன் பெயர் 'அமோர்போ பாலஸ்' என்பது தான். முழு வளர்ச்சி பெற்ற இந்த மலரின் உயரம் 2 மீட்டர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com