
பூக்களை விரும்பாத பெண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பூக்கள்,வாசத்துக்கும், ஆன்மிகத்துக்கும் மட்டுமன்றி மேனி எழிலை பாதுகாக்கவும் உதவுகின்றன. சில பூக்கள் முகர்ந்தாலே தலைவலி, சோர்வை போக்கும். சில பூக்களை பக்குவமாக தண்ணீரில் போட்டு வைத்திருந்து பின்னர் முகம், உடலை கழுவ உபயோகிக்க நல்ல பலனைத் தரும்.
அப்படி சில பூக்களின் பலன்களாக,
1.மரிக்கொழுந்து
மரிக்கொழுந்து சாறு, சந்தனத் தூள் சேர்த்து கலந்து இதை மேனியில் தடவி மசாஜ் போல செய்து சிறிது நேரம் கழித்து குளிக்க சரும நிறம் அதிகரிப்பதுடன், வாசனையாகவும் இருக்கும்.
2. தாமரைப்பூ
தாமரை இதழை சிறிது பால் விட்டு அரைத்து உடலில் பூசி பின் கழுவ, சருமத்தின் அழுக்குகளை போக்கி சருமத்தை மென்மையாக்கும்.
3. ஆவாரம்பூ
100கி ஆவாரம் பூவை ,50கி வெள்ளரி விதை, 50கி கசகசா சேர்த்து இவற்றை பால் அல்லது பன்னீர் விட்டு அரைத்து பேக் ஆக போட்டு பின் கழுவ, சரும தொற்றுக்கள் நீக்கி மேனியை பாதுகாக்கும். மேனியின் பளபளப்பை கூட்டி மென்மையாக்கும்.
4. மகிழம்பூ
கைப்பிடி அளவு மகிழம்பூவை ஊற வைத்து அரைத்து அத்துடன் அதே அளவு பயத்தம் மாவு கலந்து ,சோப்புக்கு பதிலாக உபயோகிக்க வியர்க்குரு, சரும எரிச்சல், நீங்கும். வியர்வை வாடையையும் நீக்கும்.
5. ரோஜா
பன்னீர் ரோஜா இதழ்களுடன், வேப்பிலை சேர்த்து அரைத்து சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி கழுவ,பருக்கள், கரும்புள்ளிகளை குறைத்து சருமத்தை நிறமாக்கும்.ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து, உதடுகளின் மேல் தடவி வர உதடுகளின் கருமை மாறி சிவந்த நிறத்தை தரும்.
6. ஜாதி மல்லி, முல்லை
இந்த பூக்களின் இதழ்களை அரைத்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி பின் குளிக்க சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.
7. மல்லிகைப்பூ
ஒரு கப் மல்லிகைப்பூவுடன் நான்கு இலவங்கம் சேர்த்து சுத்தமான சந்தனம் சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து கருத்த சருமப் பகுதியில் தடவி பின் குளிக்க வெயிலால் நிறம் மாறிய பகுதிகள், கருமை மாறி பழைய நிறத்திற்கு வந்துவிடும்.
8. சாமந்திப்பூ
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சாமந்தி பூக்களின் இதழ்களை சேர்த்து இரவு முழுக்க வைக்கவும். காலை அந்த தண்ணீரில் முகம் கழுவ மேனியின் நிறம் அதிகரிப்பதோடு பளபளப்பை யு மட்டம் தரும்.
9. வேப்பம்பூ
வேப்பம்பூவை காயவைத்து அதை பயத்தம் பருப்பு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து அரைத்து அதை மேனியில் தேய்த்துக் குளித்து வந்தால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், சரும பிரச்சனைகளைப் போக்கி நல்ல பலன் தரும்.
இவை அனைத்தும் நான் வீட்டில் செய்து கொள்வது. எந்தவித செலவும் இல்லாதது. நீங்களும் ட்ரை பண்ணுங்களேன்!