இந்தியா முழுவதும் நடக்கும் வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை விடுவது இந்திய வானிலை ஆய்வு மையம்தான். இவற்றிற்கென தனியாக மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி, சென்னை, நாக்பூர், கவுகாத்தி என ஆறு மண்டல வானிலை ஆய்வு மையங்கள் உள்ளது. இதன் மூலமாக வானிலை சார்ந்த முன் அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை மற்றும் தென் தமிழகத்தில் பெய்த கனமழையை சென்னை வானிலை ஆய்வு மையம் சரியாக கணிக்கவில்லை என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வு மையம் கணித்ததை விட மழையின் அளவு, புயல் நிலை கொண்ட நேரம் அனைத்தும் மாறுபட்டிருந்தது. இவற்றின் துல்லியத் தன்மையை அதிகரிக்க தமிழ்நாட்டிற்கென தனியாக வானிலை ஆய்வு மையம் உருவாக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கென தனி வானிலை மையம் சாத்தியமா?
ஒரு வகையில் தமிழகத்திற்கான தனி வானிலை மையம் போன்ற மாதிரியை உருவாக்குவது சாத்தியம் என வல்லுனர்கள் கூறுகின்றனர். அதாவது GFS எனப்படும் உலகளாவிய முன்னறிவிப்பு தரவுகளைப் பயன்படுத்தி, நமக்கான தனி மாடலை உருவாக்க முடியும். இந்த முறையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு மழை பெய்யும்? புயலின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பதைக் கூட நாம் கணிக்க முடியும் என்கின்றனர்.
அதாவது இப்போது வெளியிடப்படும் வானிலை அறிக்கைகளில் சென்னை, திருவள்ளூர், திருச்சி என ஒவ்வொரு மண்டலம் வாரியாகத்தான் மழை மற்றும் புயலின் நிலவரங்களை அறிவிக்கின்றனர். GFS தரவுகளைப் பயன்படுத்தி மேலும் துல்லியமாக வானிலை மாற்றங்களை கணிக்கலாம்.
தமிழ்நாட்டிற்கென்று தனியான வானிலை மைய மாதிரியை உருவாக்குவது கட்டாயம். ஏனெனில் வங்கக் கடலில் உருவாகும் பெரும்பாலான புயல்கள் தமிழகத்தைதான் தாக்குகிறது. இதற்காக அரசாங்கமும், வல்லுனர்களும் ஒன்றிணைந்து முயன்றால் சாத்தியப்படுத்தலாம்.
இதன் மூலமாக பேரிடர் காலத்தில் மிக விரைவாக திட்டமிட முடியும். பல வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களையும் பாதுகாக்க முடியும்.