அமில மழை பொழிவதற்கு நாம் பயன்படுத்தும் ஸ்கூட்டர், கார் போன்றவை கூட காரணமாக இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! அதற்கு நாம் உபயோகிப்பது பெட்ரோல், இயற்கை எரிவாவு போன்றவை காரணமாக இருக்கின்றன. அது எப்படி காரணமாகிறது?அதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எப்படி நிகழ்கிறது? அதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
புதை வடிவ எரிபொருட்கள் என்று சொல்லக்கூடிய நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றை நாம் மோட்டார் வாகனங்கள், மின் நிலையங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் எரிபொருளாகப் பயன்படுத்தும்பொழுது அவை சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு வெளியேறி அவை காற்றின் மூலம் வளிமண்டலத்தை அடைகிறது.
அப்படி அடையும்போது அமிலமாகவும் நைட்ரிக் அமிலமாகவும் ரசாயன மாற்றமடைந்து மழையுடன் சேர்ந்து அமில மழையாகவோ பனி அல்லது புகை மூட்டமாகவோ பூமிக்கு வருகிறது. இம்மழை அரிப்பு தன்மை கொண்டதால் பலவித சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை ஏற்படுத்துகிறது. இது தொழில் மயமாக்களால் ஏற்பட்ட விளைவு. மேலும், இது உலக அளவில் சூழலியல் சிக்கல்களை தோற்றுவிக்கிறது. காரணம், இந்த ஆக்சைடுகள் வளிமண்டலம் செல்லும் வழியில் நீண்ட தூரம் பயணம் செய்வதால் செல்லும் வழியில் சில வாயுக்களுடன் சேர்ந்து இயற்பியல், வேதியியல் மாற்றங்களை அடையும்பொழுது அதிகம் தீங்கு விளைவிக்கும் பொருட்களை உற்பத்தி பண்ணுகின்றன.
இந்த அமில மழை வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மழை பயிரிடும் நிலத்தில் உள்ள சத்துக்களை அடித்து சென்று விடுவதால் பயிர்களின் வளர்ச்சி குன்றி விளைச்சல் பாதிக்கப்படுகிறது. குளங்கள், ஏரிகள் ஆகிய நீராதாரங்களில் உள்ள நீரை அமில தன்மை உடையதாக ஆக்கி விடுவதால் நீர் வாழ்வன, பயிர்கள், மனித நலம் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகின்றன.
விளைவுகள்: ஸ்வீடனில் பத்தாயிரம் ஏரிகள் அமிலம் ஆகிவிட்டனவாம். அமெரிக்கா, கனடா, நார்வே ஆகிய நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரிகள் அமிலத்தன்மை உடையவனாக மாறிவிட்டமையால் பாசனத்திற்கு தகுதியற்றவையாகி விட்டன என்கின்றன ஆய்வுகள். பெரிய கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள், சிலைகள், பாலங்கள் ஆகியவை அரிப்புக்கு உள்ளாகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக தாஜ்மஹாலை கூறலாம். வனவிலங்குகளை பெரிதும் பாதிக்கிறது. இதனால் உணவுச் சங்கிலி பாதிக்கப்பட்டு சூழல் தொகுப்பு முழுவதும் அழியும் நிலை ஏற்படுகிறது.
நம் இந்தியாவிலும் காற்றின் மூலம், வேறு நாடுகளில் இருந்து இது பரவி டெல்லி, நாக்பூர், புனே, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் மழை நீரின் தன்மை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மனிதர்கள் இந்நீரை பயன்படுத்துவதால் ஈரல் பாதிப்படைவதுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடலில் உள்ள ஆற்றல் முழுவதும் வலுவிழந்து விடுவதாகக் கூறுகின்றனர்.
தடுக்கும் வழிகள்: நிலக்கரி, பெட்ரோல் போன்றவற்றின் தேவையை குறைத்து இதற்கு மாற்றாக சாண எரிவாயு மற்றும் இதர பயோடீசல் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
வாகனங்களை நன்கு பராமரித்து புகை அதிகம் வராத வண்ணம் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும். சுண்ணாம்பையும் நிலக்கரியையும் கலந்து எரிக்கும் நடைமுறையை தொழிற்சாலைகளில் பயன்படுத்தினால் சல்பர் டை- ஆக்சைடு வெளியேறுவதை குறைக்கும். அமில மழை மண்ணை தாக்கினால் சுண்ணாம்புப் பொடியை மண்ணுடன் கலந்தால் மண்ணில் உள்ள அமிலத்தன்மை குறைந்து மண் சமநிலைக்கு வந்து விடும்.