Mexican Jumping Beans: தாவி குதிக்கும் விதைகள்… எப்படி சாத்தியம்? 

Mexican Jumping Beans
Mexican Jumping Beans
Published on

மெக்சிகன் ஜம்பிங் பீன்ஸ் எனப்படும் Sebastiania Pavoniana என்ற செடியின் விதைகள், அவற்றின் தாவி குதிக்கும் விசித்திரமான நடத்தியால் பல காலமாகவே மக்களைக் கவர்ந்து வருகின்றன. இந்த விதைகள் உண்மையிலேயே பீன்ஸ் அல்ல. பூச்சிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பழங்கள். விதைகளின் உள்ளே இருக்கும் பூச்சிகள் துடிக்கும்போது அவை குதிப்பது போலத் தெரியும். இதன் காரணமாகவே ஜம்பிங் பீன்ஸ் என்று விசித்திரமான பெயரைப் பெற்றன. 

மெக்சிகன் ஜம்பிங் பீன்ஸ் வடகிழக்கு மெக்சிகோ மற்றும் தெற்கு டெக்ஸாஸில் காணப்படும்  Sebastiania Pavoniana என்ற செடியில் இருந்து வருகின்றன. இந்த செடி மூன்று அடி உயரமே வளரக்கூடிய ஒரு சிறிய வகைத் தாவரமாகும். இதன் இலைகள் ஈட்டி வடிவிலும் அடர்பச்சை நிறத்திலும் இருக்கும். இதன் பூக்கள் சிறியதாக வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். 

வசந்த காலத்தில் இந்த செடிகள் பூக்கும்போது அவை சிறிய பூச்சிகளை ஈர்க்கின்றன. அந்த பூச்சிகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவினாலும், பூ காயானதும் அதன் உள்ளே துளையிட்டு தனது முட்டைகளை வைக்கின்றன. இவ்வாறு முட்டைகள் அந்த விதைகளுக்குள் செழித்து வளர்கிறது. விதையினுள்ளே பூச்சிகள் இருக்கும்போது, அதன் ஓரங்களில் இருக்கும் சதைப்பற்றி சாப்பிட்டு வளரும். விதை முதிர்ச்சியடைந்ததும் கூட்டுப் புழுவாக மாறி உள்ளேயே தங்கிவிடும். 

பின்னர் ஒரு கட்டத்தில் விதைகள் தரையில் விழுந்ததும், அதன் உள்ளே இருக்கும் கூட்டுப்புழு அசையும் போது விதையும் அசைவது போல இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில், நிழலான இடங்களை நோக்கி விதைகளை இவை நகர்த்திச் செல்லும். அப்போது பார்ப்பதற்கு விதைகள் தானாக தாவி குதித்து நகர்வது போலத் தெரியும். இறுதியில் உள்ளே இருக்கும் கூட்டுப்புழு, அந்துப் பூச்சியாக மாறி வெளியே வந்து சுதந்திரமாக பறந்து செல்லும். 

இதையும் படியுங்கள்:
Charcoal Face Mask: முகச்சருமத்திற்கு பல நன்மைகளை தரும் ஃபேஸ் மாஸ்க்!
Mexican Jumping Beans

இந்த மெக்சிகன் ஜம்பிங் பீன்ஸ் பல நூற்றாண்டுகளாக பொழுதுபோக்கு பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் விளையாடுவதற்கும், மேஜிக் கலைஞர்கள் தங்கள் தந்திரங்களில் பயன்படுத்துவதற்கும் அவை பிரபலமாக உள்ளன. சில கலாச்சாரங்களில் மெக்சிகன் ஜம்பிங் பீன்ஸ் அதிர்ஷ்டத்தின் சின்னங்களாக கருதப்படுகின்றன. அவற்றை அணிந்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என சிலர் நம்புகின்றனர். 

இதுபோன்ற தனித்துவமான மற்றும் வித்தியாசமான நடத்தையின் மூலமாக, இயற்கையின் மற்றொரு பரிணாமத்தை இந்த மெக்சிகன் ஜம்பிங் பீன்ஸ் நமக்கு தெரியப்படுத்துகின்றன.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com