'மியாவாக்கி அடர்வனம்' - என்னது, நம்ம சிங்கார சென்னையில் இப்படி ஒரு முயற்சியா? சூப்பர் பாஸ்!

Miyawaki Forest
Miyawaki Forest
Published on

சென்னை நகரில் நாளுக்கு நாள் புதிது புதிதாக பிரமாண்டமான பல குடியிருப்பு அடுக்ககங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் நகரம் விரிவடைவதென்னவோ உண்மைதான். ஆனால், அதேசமயம், அந்தந்தப் பகுதிகளில் பசுமை பரப்பிய மரங்கள் காணாமல் போவதும் வேதனைதானே?

நகர்ப்புற வளர்ச்சிக்காக வானுயற கட்டடங்கள் கட்டுவதற்காக, வானத்தை எட்ட முயற்சிக்கும் மரங்கள் பல வெட்டப்படுகின்றன. மனித சுயநலம் காரணமாக மட்டுமல்லாமல், புயல், கனமழை போன்ற இயற்கை சீற்றங்களாலும் மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு சாய்ந்து விடுகின்றன. பூமிக்குக் கீழே வேர் உறுதியான பிடிப்பு கொள்ள முடியாததற்கும் நம்முடைய சுயநலம்தான் காரணம். ஆமாம், ஆழ்துளை குழாய்க் கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொள்கிறோம். அதனால் இயற்கையான பிடிமானம் இன்றி, வேரோடு மரம் சாய்ந்து விடுகிறது. மொத்தத்தில் சென்னையின் பசுமைப் பரப்பு இப்போது 13 சதவிகிதமாகக் குறைந்து விட்டது என்று ஒரு புள்ளி விவரம் சோகமாகச் சொல்கிறது. 

இவ்வாறு இழந்த பசுமையை மீட்டெடுக்க சில வருடங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. அதன்படி அடையாறில் இருபதாயிரம் சதுர அடி பரப்பில் மியாவாக்கி என்ற அடர்வனம் அமைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து மேலும் ஆயிரம் இடங்களில் அடர்வனம் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

துவக்கக் கட்டமாக, வடசென்னையில் ராயபுரம் பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, மனித முயற்சியால் காட்டை உருவாக்கும் திட்டம் அமுலுக்கு வந்தது. சென்னை மாநகராட்சியின் இந்தப் பணியில், தனியார் தொண்டு நிறுவனங்கள் சிலவும் இணைந்து செயல்பட முன் வந்திருக்கின்றன. இத்தகைய காடு ‘மியாவாக்கி வனம்’ என்று அழைக்கப்படுகிறது. 

அது என்ன மியாவாக்கி?

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர், தாவரவியல் வல்லுநரான அகிரா மியாவாக்கி. இவருடைய கண்டுபிடிப்பு, முயற்சி மற்றும் சாதனை என்னவென்றால், குறுகிய இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடுவதுதான்.

இப்படி மிகக் குறுகிய இடைவெளியில் நிறைய மரக்கன்றுகளை நட்டால் அவற்றின் வளர்ச்சி குன்றிப்போகும்; பூமிக்கு அடியில் அடுத்தடுத்த மரங்களின் வேர்கள் ஒன்றுக்கொன்று பின்னிக் கொண்டு இரண்டு மரங்களின் வளர்ச்சியுமே தடைபடும் என்ற இதுவரை நிலவிவந்த நம்பிக்கையை இவர் பொய்யாக்குகிறார்.

இவரது கணிப்பு மற்றும் அனுபவப்படி, அந்த மரங்கள் அதிவேகமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும் என்ற உண்மை வெளிப்பட்டபோது அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். இப்படி நெருக்கமாக 4 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு, சிறு அளவிலான பல காடுகளை ஜப்பானில் அவர் உருவாக்கியிருப்பதே இந்த உண்மைக்குச் சான்று.

நம் சென்னையைப் பொறுத்தவரை இந்த மியாவாக்கி திட்டப்படி, ராயபுரம் மூலகொத்தளம் மயானப் பகுதியில் பத்தாயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. அரச மரம், வேப்ப மரம், மா மரம், புங்கை, மலை வேம்பு, பலா, பப்பாளி, கொய்யா, சீதா, சப்போட்டா என்று ஆயிரக்கணக்கான மரங்கள், ஒரு ஏக்கர் பரப்பளவில் வேரூன்றியிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
அற்புதமான Armadillo: இயற்கையின் கவசம் அணிந்த விலங்கு! 
Miyawaki Forest

இதற்கு முன்னால் இந்தப் பகுதி முட்புதர்கள் நிறைந்ததாகவும், யாருமே புழங்காத, ஆனால் சமூக விரோதிகளின் புகலிடமாக இருந்திருக்கிறது; ஆனால் இப்போது இப்பகுதி, பசுமைக் காடாக மாறிவருகிறது. அதோடு இந்த இடத்தைச் சுற்றித் தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டிருப்பதால், காலை, மாலை வேளைகளில், நடைப் பயிற்சியையும் பலர் பாதுகாப்பாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் ஆரோக்கியமான செய்திதானே!

திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களைத் தவிர்த்து இதர மண்டலங்களில் முப்பத்தேழு இடங்கள், மற்றும் மாடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி இடம் ஆகியவற்றில் இந்த மியாவாக்கி அடர்வனம் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு வனத்துக்கும் எட்டு முதல் பத்து லட்ச ரூபாய்வரை செலவு செய்யப்பட்டது. மொத்தத்தில் இதுவரை இருபது ஏக்கர் நிலத்தில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இவை பாதாம், வேம்பு, புங்கம், செம்மயிற்கொன்றை உட்பட நாற்பது வகை மரக்கன்றுகளாகும். மரக்கன்றுகளின் தன்மையைப் பொறுத்தவரை சில, சுமார் நூறு அடி உயரம்வரை வளர்ந்துள்ளன. இதனால் தேனீ, வண்ணத்துப் பூச்சி, குருவி, கிளி, குயில் போன்ற பறவைகளின் வரத்தும் அதிகரித்து இயற்கை இன்னிசை கச்சேரி நடத்துகின்றன. மாசடைந்த நகர காற்று இப்போது புத்துணர்வுகொண்ட பசுமை ஆக்ஸிஜனை சுமந்து வருகிறது என்றால் அது மிகையில்லை.

மியாவாக்கி அடர்வனம் அமைப்பதும் மனித முயற்சிதானே என்கிறீர்களா? அதுவும் சரிதான். கூடவே, கொஞ்சம், கொஞ்சமாக நாம் இயற்கையை அனுசரித்துக் கொண்டு போவோம் என்ற நம்பிக்கையும் உறுதியாக உருவாகிறது அல்லவா? மன மற்றும் உடல் நலத்துக்கான இந்த முயற்சி பாராட்டத்தக்கதுதானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com