

சுற்றுச்சூழல் அமைப்பில் குறிப்பாக பசுமை மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் மெல்லுடலிகள் (Mollusks )-அதாவது நத்தைகள் (Snails) மற்றும் அட்டைப் பூச்சிகள் ( Slugs) -மிக முக்கியமான பணிகளைச் செய்கின்றன .நாம் இவற்றை சாதாரணமானவையாக கருதினாலும், இயற்கையின் சமநிலையைப் பேணுவதில் இவற்றின் பங்கு அளப்பரியது. மெல்லுடலிகளின் முக்கிய பங்களிப்பு பற்றி இப் பகுதியில் காண்போம்.
இயற்கையின் துப்புரவாளர்கள் Decomposers:
மெல்லுடலிகள் பெரும்பாலும் அழுகிய இலைகள் ,காய்ந்த தாவரங்கள் மற்றும் இறந்த கரிம பொருட்களை உணவாகக் கொள்கின்றன. இவை சிக்கலான கரிமப் பொருட்களைச் சிதைத்து, மண்ணுக்குத் தேவையான சத்துக்களாக மாற்றுகின்றன .இது காடுகள் மற்றும் தோட்டங்களில் கழிவு மேலாண்மைக்கு(Waste Management) உதவுகிறது.
ஊட்டச்சத்து சுழற்சி Nutrient Cyclling:
இவை உட்கொள்ளும் தாவரக் கழிவுகள் செரிக்கப்பட்டு கழிவுகளாக வெளியேற்றப்படும் போது ,அவை நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உரங்கலாக மாறுகின்றன. இது மண்ணின் வளத்தை அதிகரித்து, தாவரங்கள் செழித்து வளர உதவுகிறது.
உணவுச் சங்கிலியின் முக்கிய கண்ணி Food Chain:
மெல்லுடலிகள் பல உயிரினங்களுக்கு முதன்மையான உணவாக இருக்கின்றன. பறவைகள் ,தவளைகள் ,எலிகள் மற்றும் சில வகை வண்டுகள் இவற்றை வேட்டையாடி உண்ணுகின்றன. மெல்லுடலிகள் குறைந்தால் அவற்றைச் சார்ந்துள்ள பிற உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
மண்ணின் காற்றோட்டம் Soil Aeration:
அட்டைப் பூச்சிகள் மற்றும் நத்தைகள் மண்ணின் மேல் அடுக்குகளில் நகரும் போது சிறிய துளைகளை உருவாக்குகின்றன. இது மண்ணுக்குள் காற்று புகுவதற்கும், மழை நீர் எளிதாக வேர் வரை செல்வதற்கும் வழிவகை செய்கிறது.
மகரந்தச் சேர்க்கை மற்றும் விதை பரவல்:
சில வகை மெல்லுடலிகள் செடிகளுக்கு இடையே நகரும் போது அவற்றின் உடலில் ஒட்டிக்கொள்ளும் விதைகள் மற்றும் மகரந்தங்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கின்றன. இது காடுகளின் பரப்பளவு அதிகரிக்கவும், புதிய தாவரங்கள் வளரவும் மறைமுகமாக உதவுகிறது.
கவனிக்க வேண்டியவை: தோட்டங்களில் இவை சில நேரங்களில் செடிகளை சேதப்படுத்தினாலும், ஒட்டுமொத்த பசுமைச் சூழலில் இவை ஒரு 'சுற்றுச்சூழல் காட்டி '( Ecological lndication) ஆக செயல்படுகின்றன. ஒரு பகுதியில் அதிக மெல்லுடலிகள் இருப்பது அந்த இடத்தின் ஈரப்பதமும், ஆரோக்கியமும் சீராக இருப்பதைக் காட்டுகிறது.