மனிதன் வாழ முருங்கை மரமும் எருமையும் பசுவும் போதுமே!

Livestock
Livestock

கிராமங்களில் கால்நடைகளின் பங்கு எந்த அளவிற்கு உதவுகிறது என்பதை பழமொழியின் மூலம் விளக்கிக் கூறுகிறது இந்தப் பதிவு.

சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் கால்நடைகள் இல்லாத வீடுகளை பார்ப்பதே அரிதாக இருந்தது. ஆனால் இன்று அத்தி பூத்தாற் போல் எங்கோ ஒரு வீட்டில் தான் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. கால்நடைகள் விவசாயத்திற்கு மட்டுமின்றி பொருளாதார ரீதியாக பெரும் உதவியாக இருந்தவை. ஆனால் கால்நடைகளில் நாட்டினங்களின் எண்ணிக்கை குறைந்து, ஜெர்சி போன்ற புதுவகை இனங்கள் தான் தற்போது இருக்கின்றன.

வீடு குடிசையில் சிறிதாக இருந்தாலும் கோழி, ஆடு மற்றும் மாடு போன்ற கால்நடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த காலகட்டத்தில், தேவைகள் குறைவாக இருந்தது. ஆனால் இன்றோ வீடு பெரிதாக இருக்கிறதே தவிர, கால்நடைகள் இல்லாமல் போயிருக்கிறது. இந்த மாற்றம் நமது அன்றாட வாழ்வுக்கு நன்மை தரக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை.

கிராமங்களில் மிகவும் பரவலாக பேசப்படும் ஒரு பழமொழி என்னவென்றால்,

“ஒரு முருங்கை மரம் ஒரு எருமை, பசு இருந்தால் மனிதனின் காலம் நிறைவு”.

இதன்படி ஒரு வீட்டில் ஒரு முருங்கை மரம் இருந்தால் முருங்கைக் கீரை மற்றும் காய்களை வைத்து சமைத்துக் கொள்வார்கள். எருமை/பசும் பாலை கறந்து விற்றால் வரும் பணத்தில் அரிசி, பருப்பு மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கி விடலாம். இதனால் பசி பஞ்சம் என்ற எந்தத் தட்டுப்பாடும் இன்றி வாழ்க்கை நலமுடன் நகரும்.

அதேபோல இன்றளவும் கிராமங்களில் சில குடும்பங்கள் கால்நடைகளை பிரதான மூலதனாமாக வைத்து தான் பிழைப்பை நடத்தி வருகின்றன. தன்னை வளர்த்து வரும் மனிதர்களுக்கு அனைத்து விதங்களிலும் உதவி வருகின்றன கால்நடைகள். அதற்கேற்ப சிலர் கால்நடைகளை தாம் பெறாத பிள்ளைகளாத் தான் வளர்த்து வருகின்றனர். தங்கள் பிள்ளைகளின் மேல் காட்டும் அன்பைப் போலவே கால்நடைகளின் மீதும் 100% அன்பைக் காட்டுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வருமானத்தைப் பெருக்கும் கால்நடை தீவனப்புல் சாகுபடி!
Livestock

இன்றளவும் கூட கிராமங்களில் ஒரு பசு 10 ஆண்பிள்ளைகளுக்கு சமமாக கருதப்படுகிறது. கடைசி கட்ட காலத்தில் பிள்ளைகள் ஒரு வாய்க் கஞ்சி ஊற்றாவிட்டாலும், தான் வளர்த்த கால்நடைகள் கஞ்சி ஊற்றும் என்ற நம்பிக்கையும் அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் கால்நடைகளில் நாட்டு இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தத்தை அளிக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் நாட்டு இன ஆடு, மாடுகளை முறையாக பராமரிப்பது அவசியமாகும்.

கால்நடைகளின் உதவியினால் தான் விவசாயமும் செழிக்கிறது. ஏர் உழுவதில் இருந்து உரம் வரை அனைத்தையும் விவசாயத்திற்கு அளிப்பது கால்நடைகள்.

நாட்டின் தூண்களாக இருக்கும் கிராமங்களுக்குக் கூட இந்த கால்நடைகள் தான் தூண்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com