காளான் தற்போது, ஓர் உணவுப் பொருளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்‘ என்ற அலட்சியப் புறக்கணிப்பு மறைந்து மனித உடல் நலத்துக்கான அதன் அருங்குணங்களால் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பட்டன் காளான், போர்டோபெல்லோ காளான் (ஐரோப்பிய நாடுகளில் பிரபலம்), ஷிடேக் காளான், சிப்பிக் காளான், ஏனோகி காளான், ஷிமேஜி காளான், போர்சினி காளான், வைக்கோல் காளான், பால் காளான், மொட்டு காளான் என்று பலவகைப்படும். இவற்றில் பட்டன் காளான், வைக்கோல் காளான், சிப்பிக் காளான், பால் காளான், மொட்டுக் காளான் ஆகியவை தமிழ்நாட்டில் கிடைக்கக் கூடியவை
காளான் வளர்ப்பு என்பது காய்கறி பயிரிடுவது போலதான். ஆனால் இதற்கு குளிர்ச்சியான சூழ்நிலை தேவை.
பொதுவாக காளான் பண்ணை அமைக்க பத்தடிக்குப் பத்தடி இடம் இருந்தால் போதும். காளான் விதை, பாலிதின் பை, காய்ந்த வைக்கோல், இந்த வைக்கோலில் உள்ள கிருமிகளை அழிக்க பார்மோலின், பெவிஸ்டின் என்ற கிருமிநாசினிகள் மற்றும் ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் 100 லிட்டர் தண்ணீர் ஆகியவை தேவை.
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல நகரங்களில் காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பெரும்பாலும் உஷ்ணம் அதிகம் இல்லாத பகுதிகளில் காளான் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதால் (உஷ்ணப் பகுதிகளில் நிறைய தண்ணீர் செலவிட வேண்டியிருக்கும்; பயிரிடும் இடத்தைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் வேண்டும்.) தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோயம்புத்தூர், ஈரோடு, ஊட்டி, விழுப்புரம், மேட்டூர்,கொடைக்கானல் போன்ற சூரிய உஷ்ணம் பெரிதும் தாக்காத பகுதிகளில் காளான் பண்ணைகள் அதிகம் காணப்படுகின்றன.
உழைப்புக்கேற்ற பலன் என்பதுபோல அதிக விளைச்சல், அதனால் அதிக லாபம் அளிக்கக் கூடியது காளான் விவசாயம். இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ காளான் உற்பத்தி செய்ய 30 முதல் 40 ரூபாய்வரை செலவாகும்; ஆனால் விற்பனை விலையோ 90 முதல் 100 ரூபாய்!
சிறிய அளவில் திட்டமிடுவதை விட, மிகப் பெரிய பரப்பில் ஒவ்வொன்றும் பத்துப் பதினைந்து அடுக்குகளாக அடுத்தடுத்து பல வரிசைகள் என்ற கணக்கில் காளான் விவசாயம் செய்தால் பலன் அதிகம் கிடைக்கும்.
இந்தியக் காளான் வகைகள் குளிர்ப் பிரதேசங்களான மேலைநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன என்பது வியப்பளிக்கும் தகவல்!