

ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் பார்த்த டைனோசர்கள் நிஜமாகவே நமது பூமியில் வாழ்ந்தன என்பதை நினைக்கும்போதே மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அந்த வகையில், தாய்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு புதிய ராட்சத டைனோசரின் புதைபடிவங்கள் உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்களை மிரள வைத்துள்ளது.
பிரம்மாண்டமான உடலமைப்பு!
இந்த புதிய டைனோசர் இனத்திற்கு 'நாகாடைட்டன்' (Nagatitan) என்று பெயரிட்டுள்ளனர். இதன் பிரம்மாண்டமான உருவத்தைக் கற்பனை செய்து பாருங்கள். சுமார் 9 முழு வளர்ச்சி அடைந்த ஆசிய யானைகளை ஒன்றாகத் தராசில் வைத்தால் எவ்வளவு எடை இருக்குமோ, அந்த அளவுக்கு எடையை இது கொண்டுள்ளது.
இதன் ஒட்டுமொத்த நீளம் 27 மீட்டர் ஆகும். மிக நீண்ட கழுத்தும், மிகவும் சிறிய தலையும் கொண்ட 'சௌரோபாட்' (Sauropod) வகையைச் சேர்ந்த இவை, மரங்களில் உள்ள இலை தழைகளை மட்டுமே சாப்பிடும் அதிபயங்கரமான தாவர உண்ணிகள் ஆகும். நாம் அனைவரும் மிரண்டு பார்க்கும் டி-ரெக்ஸ் (T-Rex) டைனோசர்களை விட இவை இரண்டு மடங்கு பெரியவை என்பது கூடுதல் ஆச்சரியம்.
வரலாறு!
இந்த ராட்சத விலங்கிற்கு 'நாகாடைட்டன் சாயாபுமென்சிஸ்' (Nagatitan Chaiyaphumensis) என முழுமையாகப் பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய மக்களின் நாட்டுப்புறக் கதைகளில் வரும் வலிமையான பாம்பைக் குறிக்க 'நாகா' என்றும், பழங்கால கிரேக்க புராணங்களில் வரும் மாபெரும் சக்திவாய்ந்த கடவுள்களைக் குறிக்க 'டைட்டன்' என்றும் பெயர் வைத்துள்ளனர்.
இது கண்டுபிடிக்கப்பட்ட இடமான சாயாபுமி மாகாணத்தின் பெயரையும் இதனுடன் அழகாக இணைத்துள்ளனர். இவை தோராயமாக 100-120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த பூமியில் வாழ்ந்துள்ளன.
தாய்லாந்தின் கடைசி ராட்சதன்!
லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திதிவுட் சேதாபனிச்சாகுல் (Thitiwut Seetapanitchakul) தலைமையிலான ஆய்வுக் குழுவினர் இதனைத் தாய்லாந்தின் கடைசி டைட்டன் என்று வர்ணிக்கின்றனர். இதற்கு ஒரு மிக முக்கியமான காரணம் உள்ளது. இவை கண்டுபிடிக்கப்பட்ட இளம் பாறை அடுக்குகள் தான் நிலப்பரப்பில் உருவான கடைசிப் பாறைகள் ஆகும்.
இதற்குப் பிறகு உருவான பாறைகள் எல்லாம் கடலுக்கு அடியில் அமைந்தவை என்பதால், இனி இதைவிடப் பெரிய டைனோசர் புதைபடிவம் அங்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என உறுதியாகக் கூறுகின்றனர்.
அந்த பழங்கால கட்டத்தில் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு அளவு மிக அதிகமாகவும், சுட்டெரிக்கும் வெப்பமும் இருந்துள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான உடலை வைத்துக்கொண்டு அந்த கடுமையான வெப்பத்தை அவை எப்படித் தாங்கின என்பது அறிவியலாளர்களுக்குப் பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக வெப்பத்தால் அடர்த்தியாக வளர்ந்த பெரும் தாவரங்களே இவற்றுக்குத் தேவையான உணவைக் கொடுத்திருக்கலாம்.
ஆசியாவிலேயே அதிக டைனோசர் புதைபடிவங்கள் உள்ள நாடுகளில் தாய்லாந்து மூன்றாவது இடத்தில் கம்பீரமாக உள்ளது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சியூட்டும் காலநிலை மாற்றங்களை அறிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்பு பெரிதும் உதவுகிறது.