இது என்னது வித்தியாசமா இருக்கே? 

Naked Mole Rat
Naked Mole Rat
Published on

என்னடா இது ரொம்ப வித்தியாசமா இருக்கேன்னு பாக்குறீங்களா. இந்த உயிரினத்துக்கு பேரு Naked Mole Rat-ஆம். எலியை புடிச்சு முடியெல்லாம் ஷேவ் பண்ணி விட்டா மாதிரி இருக்கு. இது பாக்கதான் எலி மாதிரி இருக்கு, ஆனா இதோட நடத்தை சராசரி எலிகள்ல இருந்து வித்தியாசமா இருக்குமாம். வாழ்நாள் ஃபுல்லா பூமிக்கு அடியிலேயேதான் வாழும்னு சொல்றாங்க. சரி வாங்க, இந்த பதிவுல இந்த வித்தியாசமான உயிரினம் பத்தி தெரிஞ்சுக்கலாம். 

பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் இந்த எலிகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் வராண்ட பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பொதுவாக மண்ணில் தோண்டப்படும் புற்றுகளில் வாழ்கின்றன. இந்த புற்றுகள் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டிருக்கும். இதில் பல அறைகள், குழாய்கள், காற்றோட்ட வழிகள் போன்றவை இருக்கும். இதன் மூலமாக இந்த வித்தியாசமான எலிகளின் உடல் வெப்பநிலை பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிப்பதற்கு புதிர் போன்ற இதன் வலை அமைப்பு உதவுகிறது. 

இந்த எலி பார்ப்பதற்கு எலிகளைப் போல இருந்தாலும், பல விதங்களில் வேறுபடுகின்றன. இவற்றின் உடல் முழுவதும் முடிகள் இல்லாமல் வெண்மையான தோல் மட்டுமே இருக்கும். இதனால் இவற்றை 'உருளைக்கிழங்கு எலி' என்றும் அழைக்கின்றனர். இவற்றின் பற்கள் மிகவும் வலுவானவை. மண்ணை தோண்டவும், கடினமான உணவை சாப்பிடவும் இதன் பற்கள் உதவுகின்றன. இந்த எலிகளுக்கு பார்வை திறன் குறைவாக இருப்பதால், செவித்திறன் மற்றும் மோப்ப சக்தி மூலமாகவே உணவுகளையும், எதிரிகளையும் தெரிந்து கொள்கின்றன. 

இவை பெரும்பாலும் பெரிய குழுக்களாகவே வாழ்கின்றன. ஒரு குழுவில் 20 முதல் 300 எலிகள் வரை இருக்கும். இந்தக் குழுவில் ராணி, சில ஆண்கள் மற்றும் தொழிலாளர்கள் இருப்பார்கள். மற்ற எலிகள் குழுவின் நலனுக்காக வேலை செய்யும். உணவு தேடுதல், புற்றுக்களைப் பராமரிப்பது, குட்டிகளைப் பராமரித்தல் போன்ற பணிகளை அவை செய்கின்றன. 

இதையும் படியுங்கள்:
30 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாத பர்கர்… டேய்! என்னடா கலந்தீங்க? 
Naked Mole Rat

இந்த உயிரினம் மிகவும் விசித்திரமானது என்பதால், இவற்றைப்பற்றி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சியில் இந்த எலிகள் புற்றுக்குள் வாழ்ந்தாலும், எந்த ஒரு நோய்க்கும் ஆளாகாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் உடலில் உள்ள சில சிறப்பு என்சைம்கள் இவற்றை புற்றுநோய், இதய நோய் மற்றும் வயதாவதால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. 

இந்த எலிகள் பற்றிய ஆராய்ச்சி மனிதர்களுக்கு பல நன்மைகளை தரக்கூடும். இவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை பற்றிய ஆராய்ச்சிகள் புற்றுநோய், இதய நோய் போன்ற நோய்களுக்கான புதிய சிகிச்சை முறைகளை கண்டுபிடிக்க உதவலாம். இவற்றின் சமூக அமைப்பு பற்றிய ஆராய்ச்சிகள் மனித சமூகத்தை பற்றிய புரிதலை தெரிந்துகொள்ள உதவும். 

உண்மையிலேயே இந்த எலிகள் இயற்கையின் அற்புதப் படைப்புகளில் ஒன்று. இதன் தனித்துவமான உடல் அமைப்பு, சமூக வாழ்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை உயிரியலாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com